ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நிலவிய மோதல் நிலைமை தணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தலையீட்டின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் தலையிடுமாறு ரஞ்சனுக்கு சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவரும் பிரதமருக்கு நெருக்கமானவருமான சமன் ஆதாவுதஹெட்டி என்பவரே அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கடுமையான உரையாற்றியமைக்கு காரணம் என்ன என்று தெரியுமா என ரஞ்சனிடம் தொலைப்பேசியில் சமன் கேட்டுள்ளார். ஜனாதிபதி தனது கட்சியினர் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து வருத்தத்தில் உள்ளார் என ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்க முடியுமா என சமன், ரஞ்சனிடம் கேட்டுள்ளார். அந்த கோரிக்கைக்கமைய பதிலளிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பிரதமரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பதவி இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்ருஷி விக்ரமசிங்கவின் தீர்மானத்தை மாற்றுவதற்கும் ரஞ்சன் தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியா விஜயத்தில் ஈடுபட்டுள்ள அவரை தொலைப்பேசி ஊடாக தொடர்பு கொண்டு, பதவி விலகும் தீர்மானத்தை மாற்றுதவற்கு தலையிட்டுள்ளார்.
ரஞ்சன், ஜனாதிபதியுடன் மிகவும் நெருக்கமாக செயற்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பிர்களுக்குள் முன்னணியில் உள்ள ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்ருஷி விக்ரமசிங்க தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதியிடம் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.