சகோதரர் அன்ஸில் அவர்கள் ஹகீம் அவர்களுடன் முரண்பட்டதான செய்தி ஒன்று காணக் கிடைத்தது.
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் முன்மொழிவுகளை முன்வைத்த போது, அதிர்ச்சிக்குள்ளான அன்ஸில் அவர்கள் இது தொடர்பாக தாம் உட்பட முக்கிய உயர் பீட உறுப்பினர்கள் பலரிடம் எந்தவித ஆலோசனைகளும் பெறப்படாமல், யாரைக் கொண்டு இது வரையப்பட்டது என்று வினவியுள்ளார்.
காலதாமதமானாலும், மஷூரா அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப் படுவதனால், மிகவும் முக்கியமான விடயங்கள் அலசி ஆராயப்பட்டு, உள்ளடக்கியிருக்கும் என்று, முஸ்லிம் காங்கிரஸினால் முன்மொழியப்படும் அந்த தீர்வை அறிந்து கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அது உயர் பீட உறுப்பினர்களுக்கே மர்மமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியக்கிடைத்திருப்பது அன்ஸில் அவர்களுக்கு மாத்திரமல்லாது கல்விமான்களுக்கும் புத்தி ஜீவிகளுக்குமே ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஹகீம் அவர்கள் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து கட்சியை சிக்கலுக்குள் ஆழ்த்திய சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்ளக ஜனநாயகம் இல்லை என்பதையும் மஷூரா அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதையும் கிழக்கின் எழுச்சி பலமுறை வடியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இந்நிகழ்வில் அது பகிரங்கமாக மக்கள்முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்ஸில் அவர்களின் நியாயமான கேள்விக்கு பதில் அளிக்க முற்படாமல் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று ஹகீம் அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இதைத்தான் நாங்கள் கூறிவந்தோம். இது யாருடைய கட்சி? யாரை யார் வெளியேற்றுவது? எதற்காக வெளியேறச் சொல்லவேண்டும்? இங்கே இழைக்கப்பட்ட குற்றம் என்ன? கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறினால், அதைத் திருத்த முற்படாது, தவறைச் சுட்டிக்காட்டி கூறியவரை கட்சிக்குள் இருந்து வெளியேற்ற முற்படுவது என்ன நியாயம். இதற்கு முன்னரும் இவ்வாறுதான் பல முறை நடந்துள்ளது. அப்போதெல்லாம் அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, அவர்களை மக்கள் முன் துரோகிகளாக காட்டி தமது காரியங்களை சாதித்துக் கொண்ட வரலாறுகளை 1992 முதல் காண்கிறோம். ஆனால் இவ்வாறான பிழையான நடவடிக்கைகள் மூலமாக, கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அதல பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு மக்கள் முன் தலை குனிந்து நிற்கிறது. தனது கொள்கைகளை மறந்து மக்கள் முன் மலினப்பட்டு நிற்கிறது.
இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் எமது கட்சி. அதன் உயர் பீட உறுப்பினர்கள் எமது உறுப்பினர்கள். அதன் போராளிகள் எமது போராளிகள். இவ்வாறுதான் கிழக்கின் எழுச்சி பார்க்கின்றது. அநியாயமான முறையில் அன்ஸில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தோல்வியுற்ற தலைமைத்துவத்திற்குச் சொந்தக்காரரான தற்போதைய தலைவர் ஹகீம் அவர்கள் முற்படுவார்களானால் நியாயத்தை நிலை நிறுத்த, கிழக்கின் எழுச்சி அன்ஸில் அவர்களுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
கிழக்கின் எழுச்சி