காணிச்சுவீகரிப்புக்கு எதிராக ஹகீம் சீற்றம் என்று நீங்கள் பாராளுமன்றில் கர்ஜித்ததாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
கடந்த பதினாறு வருடங்களாக அனைத்து அரசாங்கங்களிலும் நீங்கள் கபினட் அமைச்சராக இருந்த போதும் இதுபற்றி எந்தவித பிரயோசனம்மிக்க நடவடிக்கைகளும் எடுக்காமல் இதை ஒரு புது விடயமாக காட்ட முயல்கிறீர்கள்.
கடந்த 2007ல் பொத்துவில் கரங்காவட்டை நிலப்பிரச்சினை தொடர்பில் நீங்கள் அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு தாவி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. நீங்கள் ஏலவே தீர்மானித்திருந்த ஒரு காரணத்திற்காக கட்சி மாறிவிட்டு, பின்னர் அதை நியாயப்படுத்துவதற்காக பொத்துவில் கரங்காவட்டை காணிப்பிரச்சினைக்காக மாறியதாக மக்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் அதே அரசாங்கத்துடன் பின்னர் நீங்கள் சேர்ந்ததிலிருந்து உங்கள் உண்மையான நோக்கம் அதுவல்ல என்பதை நீங்களே போட்டுடைத்தீர்கள்.
இதையெல்லாம் நீங்கள் வசதியாக மறதிருப்பீர்கள். ஆனால் சமுதாயத்திற்காகத்தான் நீங்கள் அமைச்சுப் பதவிகளைத் தியாகம் செய்ததாக நம்பி ஏமாந்த பொது மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இன்று மீண்டும் நிலப்பிரச்சினை தொடர்பாக கர்ஜித்தீர்களாமே! இதுவும் நாடகமல்ல என்றால் அதை நாங்கள் வரவேற்போம்.
கிழக்கு முஸ்லிம்கள் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகளை இழந்திருக்கிறார்கள். அம்பாறை மாவட்ட மக்கள் முப்பதாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகளை இழந்துள்ளனர். இது பற்றிய விபரங்கள் உங்களிடம் உள்ளதா? இந்நிலங்களையெல்லாம் மீட்டெடுப்பதற்கு வசதியாக இருந்திருக்கக்கூடிய கிழக்கிற்கான கபினட் அமைச்சுப் பதவியை கபளீகரம் செய்து வைத்திருக்கின்றீர்கள்.
அஷ்ரப் நகர், செங்காமம் போன்ற முஸ்லிம்களின் இடங்களில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரை இல்லாமலாக்கி முஸ்லிம்களிடம் பெற்றுக்கொடுக்க முடியுமா? இந்த இடங்களில் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் இராணுவ பிரசன்னம் இருந்ததில்லை.
அதேபோல் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை முஸ்லிம்களுக்கு சேதாரமில்லாமல் பெற்றுக்கொடுக்க முடியுமா?
மேலும் அரச திட்டங்களுக்காக காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களின் நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க முடியுமா?
அவ்வாறு முடியாவிட்டால் நாங்கள் மீட்டுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வசதியாக நீங்கள் முடக்கி வைத்திருக்கும் கிழக்கிற்குரிய கபினட் அமைச்சுப் பதவியை கிழக்குக்கே வழங்க முடியுமா?
எதிர்வரும் ஏதாவதொரு தேர்தலுக்கு முன்னர் இவற்றை மீட்டுத்தர முடியாதவிடத்து, நீங்கள் முன்னர் செய்தது போல் அரசாங்கத்திலிருந்து வெளியேறி அழுத்தம் கொடுத்து இவற்றை நிறைவேற்ற முற்படுவீர்களா?
1961ம் ஆண்டு தேர்தல் தொகுதி உருவாக்கப் பட்டபோது பெரும்பான்மை சமுகங்களின் நிலங்களும் ஜனப்பரம்பலும் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பெரும்பான்மை விகிதாசாரம் பல நூறு மடங்காக ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.
இந்த அநியாயத்தை அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தட்டிக் கேட்காமையினால், இதை மக்கள் முன் கொண்டு சென்று தமிழ் பேசும் மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1961ம் ஆண்டுக்கு முன்பிருந்தவாறான கிழக்கு மாகாணத்தையும், கரையோர மாவட்டத்தையும் உங்களால் பெற்றுத்தர முடியுமா?
தபால் மூல வாக்களிப்பும் முடிவடைந்த பின்னர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்ததைப் போலல்லாது, நியாயமாகவும் காலதாமதமில்லாமலும் நீங்கள் இதை முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
சேதாரமில்லாத சாணக்கியம் என்று கூறி மக்களை கண்ணைத் திறந்து கொண்டு படு குழிக்குள் வீழ்த்தும் கைங்கரியத்தை இனிமேலும் தொடர வேண்டாம் என்று கேட்டு, எதிர்வரும் தேர்தலுக்குமுன் இவற்றைப் பெற்றுத்தர முடியாதவிடத்து உங்களுக்கெதிராக இன்னும் பல எழுச்சிகள் எழுவதற்கு அவசியமாகிப் போய்விடும்.
ஹசனார் ஜலீஸ்
அமீரக பிரதம செயற்பாட்டாளர்
கிழக்கின் எழுச்சி