இந்த சாணக்கியம் வெற்றியைத் தருமா ? : கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ்

 

hakeem nifras

 

‘சாணக்கியம்’ என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்கு பரிச்சயமாக்கியது அவர்களது அரசியலே என்றால் பொய்யில்லை. ஆனால் இதன் உள்ளர்த்தம் என்னவென்று தேடிப்பார்க்காமலேயே, அதைச் சொல்லுகின்ற பாங்கை வைத்து ஏதோ ஒரு புனிதமான சொல்லைப் போல் நம்பிவிடுகின்ற மனநிலையை நமது கண்மூடித்தனமான அரசியல் நம்மிடையே ஏற்படுத்தியிருக்கின்றது.

 
சாணக்கியத்தை அநேகமான தமிழ் அகராதிகள் ‘தந்திரம்’ என்றே பொருள்கோடல் செய்திருக்கின்றன. மேலும் பல பொருள்கோடல்கள் தந்திரத்திற்கு மிக நெருக்கமானவையாக சாணக்கியத்தை விளக்கியிருக்கின்றன. ‘தந்திரமும் நுட்பமும் கலந்த நகர்வு’ என்பதன் கௌரவமான சொல்லாக அதனை கூறலாம்.
சாணக்கியமானவர் என்று போராளிகளால் கொண்டாடப்படுகின்ற எமது மதிப்பிற்குரிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், அல்லது அவரை வழிபடுகின்ற தளபதிகள் – கட்சி சாணக்கியமான அடிப்படையில் என்ன சாதனைகளை நிகழ்த்தியது என்று கூறியதில்லை. மு.கா. என்ற கட்சியில் இருந்து பலர் பிரிந்து சென்றாலும், அதை இன்னும் தூர்ந்துபோகாத ஒரு கட்சியாக ஏதோ ஒரு அடிப்படையில் வைத்துக் கொண்டிருப்பதை பாராட்டவேண்டும். இதை வேண்டுமென்றால் சாணக்கியம் என்று கூறலாம்.

 
ஆனால், மக்களுக்கு அநியாயம் நடக்கின்ற போது சும்மா இருந்துவிட்டு, பட்ஜெட் காலங்களிலும், தேர்தல் காலங்களிலும் மாத்திரம் கட்சி தாவுகின்ற அற்பத்தனமான அரசியலை சாணக்கியம் என்று சொல்ல முடியுமா? தேசியப்பட்டியல் எம்.பி.க்காக ஆளுக்காள் முரண்பட்டுக் கொள்வதையும், ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்குள் பல பிரிவுகளை உருவாக்கியுள்ளதையும், செல்வங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதையும் சாணக்கியம் என்று சொல்ல இயலுமா? வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களால் வழங்கப்பட்ட தலைமைப் பதவிக்கான பிரதியுபகாரத்தை இன்னும் சரியாகச் செய்யாமல், இப்பிராந்தியத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு எதையாவது கொடுத்து சமாளிப்பதை சாணக்கியம் என்று சொல்ல முடியுமா? கட்சிக்குள்ளும் மக்கள் விடயத்திலும் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் அது பற்றி மக்களுக்கு சொல்கின்ற ஊடகவியலாளர்களை கருத்துக்களால் அன்றி, ‘வேறுவழியில்’ தடைபோடுவதை சாணக்கியம் என்று சொல்ல முடியுமா? இதுபோன்றவற்றை எல்லாம் சாணக்கியம் எனச் சொல்ல முடியுமென்று, மு.கா.வை நடுநிலையாக நின்று நோக்குபவர்கள் கூறுவார்களாயின் அந்த அடைமொழி அதன் தலைவருக்கு மிகப் பொருந்தலாம்.

 
பத்திரிகைச் செய்தி

 
இப்பேர்ப்பட்ட ஒரு பென்னம்பெரிய கட்சியின் தலைவர் அண்மையில் இரண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவ்விரு கருத்துக்களையும் உன்னிப்பாக நோக்குங்கள். அதாவது, மறைந்த தலைவரின் அஷ்ரஃப் நினைவு தினத்தில் தாமரைத்தடாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய றவூப் ஹக்கீம், ‘பிரிந்துசெல்லும் பட்டியல் தொடர்ந்தாலும் 2017 இல் குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு இடம்பெறும்’ என்று சொல்லியிருந்தார். இது ஒரு தேசிய பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘இதைப் பார்த்தவுடன் காமடித்தனமாக இருந்ததாக’ இரு மு.கா. முக்கியஸ்தர்கள்; கூறினார்கள். ‘தலைவர் அப்படி உரையாற்றியிருக்க மாட்டாரே, இதென்ன மொட்டைத்தலைக்கும் மொடங்காலுக்கும் முடிச்சுப் போட்டிருக்கின்றாரே’ என்றனர். ஆனால் செய்தி அவ்வாறுதான் வெளியாகியது. அவ்வாறு அவர் பேசவில்லை என்றால், மறுப்பறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.

 
இந்த செய்தியைப் பார்த்தபோது என்னவோ போலிருந்தது. ஏனென்றால், பிரிந்து செல்லும் பட்டியலுக்கும் குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டுக்கும் என்ன தொடர்பிருக்கின்றது???? உதாரணமாக ஹசன்அலியும் பசீரும் அல்லது வேறு யாராவது பிரிந்து போவதால் குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு தடைப்பட முடியுமா? பிரிந்து செல்பவர்கள் என்ன ஆராய்ச்சியில் ஈடுபடும் பிரதான மௌலவிகளா? என்ன கதையிது!? அதுதவிர, அது ஒரு முக்கியமான நிகழ்வு அதில் தலைவர் ஹக்கீம் சிறந்த கருத்துக்களையும் முன்வைத்திருந்தார் என்பது உண்மைதான். ஆனால், பிரிந்து செல்பவர்கள் பற்றி அங்கு பேசாது தவிர்த்திருக்கலாம்;. ‘குர்ஆன் வழியிலும் அஷ்ரஃபின் கொள்கையுடனும் கட்சி கொண்டு செல்லப்படும்’ என்றே அந்த செய்தி வந்திருக்க வேண்டும். அவ்வாறு தலைவர் பேசியிருக்க வேண்டும். சரி பிரிந்து செல்பவர்களை பற்றி கூறுவதென்றால், குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டுக்கு முடிச்சுப்போடாது விட்டிருக்க வேண்டும். உதாரணமாக, ‘பிரிந்து செல்லும் பட்டியல் தொடர்ந்தாலும் கட்சி பலமான நிலையில் இருக்கும்’ என்று சொல்லியிருக்கலாம். ‘பிரிந்து செல்லும் பட்டியல் தொடர்ந்தாலும், கட்சி அஷ்ரஃபின் வழியில் பயணிக்கும்’ என்று சொல்லியிருக்கலாம். அவ்வாறன்றி வேறு மாதிரி தலைவர் பேச, அது மறுநாள் செய்தியாகி இருந்தது. இதனால், தலைவரின் உரையில் முக்கியமான, காத்திரமான ஏதாவது செய்தி இருக்கும் என எதிர்பார்த்திருந்த போராளிகள் ஏமாற்றமடைந்தனர். 

 

 

இவ்வாறுதான், மு.கா.வின் தேசிய மாநாடு பாலமுனையில் நடைபெற்ற போது அங்கு வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பு ஒன்றை ஹக்கீம் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பசீர் சேகுதாவூதை கண்டதும் அவர் டென்சனாகிவிட்டார். பசீரை சாடைமாடையாக ஏசுவதற்கும் குள்ளநரிகள், குறுநில மன்னர்கள் பற்றி பேசுவதற்கும் அங்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், அதற்கு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மிக நுட்பமாக அந்த மேடையைப் பயன்படுத்தினார். முஸ்லிம் காங்கிரஸின் மேடையில் தமிழர்களின் அபிலாஷைகளை சொல்லிவிட்டுப் போனார் சம்பந்தன். இதுதான் சாணக்கியம் என்பது!

 
பயன்படுத்தும் தமிழ் தேசியம்

 
இப்போது தமிழ்த் தேசியம் பிரதான முஸ்லிம் கட்சித் தலைவரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. ஹக்கீமை இனப் பிரச்சினை தீர்வுத்திட்ட விடயத்தில் கறிவேப்பிலையாக பயன்படுத்துவதற்கான புறச் சூழல்கள் தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன (அதுபற்றி அடுத்தவார கட்டுரையில் அலசலாம்).
இப்படியான நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கருத்தை வெளியிட, அது தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் தலைவர் ஹக்கீம் நல்லபல கருத்துக்களையும் கூறியிருந்தார். உதாரணமாக, ‘பக்குவமாகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்து விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலை பேண வேண்டும்’ என்று குறிப்பிட்டது நல்லதொரு கருத்தாகும்.

 
ஆனால், வடக்கில் ‘எழுக தமிழ்’ என்றும் கிழக்கில் ‘கிழக்கின் எழுச்சி’ என்றும் தெற்கில் ‘சிங்ஹலே’ என்றும் விதவிதமான இனவாத தீவிரசக்திகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ள கருத்து கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்திருக்கின்றது. இந்த மூன்று போராட்ட இயக்கங்களையும் பொதுவான இனவாத சக்திகளாக ஹக்கீம் குறிப்பிட்டுள்ளமை நாம் எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற மனநிலையை காட்டுகின்றது. இன்னும் சொல்லப் போனால், தனது கருத்தை சரியென கூறுவதற்காக சம்பந்தமில்லாத, வேறுவேறு கோணங்களில் செயற்படும் மூன்று தரப்பினருக்கு முடிச்சுப் போட்டுப் பேசியிருக்கின்றார் என்றும் சொல்லலாம்.

 
உண்மையில் சிங்ஹலே அமைப்பு இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பதில் கருத்து முரண்பாடுகள் இல்லை. ஆனால், மற்றைய இரண்டும் இனவாத செயற்பாடுகளில் இன்னும் ஈடுபடவில்லை. பிற இனத்தை காயப்படுத்தும் விதத்திலான எந்த நடவடிக்கைகையும் எழுக தமிழ், கிழக்கின் எழுச்சி போன்றவை மேற்கொள்ளவில்லை. எழுக தமிழ் என்பது மஹிந்தவின் தூண்டுதலுடன் செயற்படுவதாக ஊகங்கள் வெளியாகி இருந்தாலும் தேசிய அரசியலில் முன்னொரு காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட்டதோ கிட்டத்தட்ட அதற்கு ஒப்பான விதத்திலேயே எழுக தமிழ் போன்றவை இன்று ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றன. இன்று, தேசிய அரசியலுக்குள் நுழைந்த பிறகு கடுமையான போக்கை கடைப்பிடிப்பதற்கு சம்பந்தனுக்கும் கூட்டமைப்பினருக்கும் தர்மசங்கடமாக இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கும் ஒரு குழுவாகவே எழுக தமிழை பார்க்க முடிகின்றது.

 
எழுக தமிழ் பற்றி சம்பந்தன் விமர்சிக்கவில்லை. அவரின் குரலாக ஹக்கீம் செய்றபட்டிருக்கின்றாh. அவர் எண்ணியதை ஹக்கீம் சொல்லியிருக்கின்றார் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நாளை தமிழருக்கு ஒரு பிரச்சினை என்றால் சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் கைகோர்த்துவிடுவார்கள். ஹக்கீம் கைவிடப்படுவார். இதை அறியாதவராக ஹக்கீம் இனவாதிகள் என்று கருத்துவெளியிடப் போய், சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாயால் வாங்கிக் கட்டியுள்ளார். ஒரு தவில் போல ஹக்கீமுக்கு இரண்டுபக்கம் அடிவிழுந்துள்ளது. விக்கி, இன்னும் அடிக்கத் தொடங்கவில்லை.

 
ஒரேயொரு சந்தோசம்

 
இதில் அவருக்கு கிடைத்த ஒரேயொரு சந்தோசம் கிழக்கின் எழுச்சியை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்ததுதான். கிழக்கின் எழுச்சி என்பது முஸ்லிம்களிடையே பரவலாக ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ள ஒரு பிரசாரமாகும். அது பற்றி நிறைய விமர்சனங்களும் உள்ளன. ஆனாலும், ஹக்கீம்; கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்பதும், மு.கா.வின் தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற கோஷமும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. ஆக, இந் எழுச்சி உருவாக காரணம் மு.கா. தலைவரே ஆவார். இவ்வமைப்பு வெறும் அறிக்கைகளாலும், வேறு சில காய்நகர்த்தலாலும் அரசியல் களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர, ஒரு இனவாத அமைப்பாக எதைக் கொண்டு ஹக்கீம் அதை அடையாளம் கண்டார் என்று தெரியவில்லை. இதையும் ஒரு இனவாத அமைப்பாக காட்டினால், எல்லோரும் சேர்ந்து தனது எதிரியான கிழக்கின் எழுச்சியையும் போட்டுத் தாக்குவார்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

 
அது ஒருபுறமிருக்க, பொதுபலசேனாவுடன் ஒப்பிடும் போது மேற்குறிப்பிட்ட இவ்வியக்கங்கள் எதுவும் பெரிய விடயங்களே அல்ல. உண்மையில் மு.கா.தலைவர் இனவாதத்திற்கு எதிரானவர் என்றால் பொது பலசேனா பாரிய அட்டூழியங்களை பிரயோகித்த வேளையில், அரசாங்கத்தில் இருந்து பதவிகளை இராஜினாமாச் செய்திருக்கலாமே? குறைந்தபட்சம் அமைச்சுப் பதவிகளையாவது துறந்திருக்கலாமே.! அதைச் செய்யவில்லை. இப்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பும், தானும் இணக்கப்பாடு கண்டுள்ள அஜந்தாவை முன்கொண்டு செல்வதற்கு ‘எழுச்சிகள்’ எல்லாம் ஏதோ ஒரு வகையில் தடங்கலாக இருப்பதாக கருதியே மேற்படி இனவாதம் பற்றிய கருத்தை ஹக்கீம் வெளியிட்டிருக்கின்றாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.
புலிகள் முஸ்லிம்களை எவ்வாறு கொன்றுகுவித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

இப்படியிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது’ என்ற தொனியில் தெரிவித்திருந்த ஹக்கீம், ‘புலிகள் பொங்குதமிழை நடாத்திய அவர்களுக்கிருந்த வாய்ப்புக்களை தவறவிட்டனர்’ என்று இப்போது சொல்லியிருக்கின்றார். இதனை தனியே முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரின் கருத்தாக பார்க்க முடியாது. மாறாக, தமிழ் தேசியத்தின் மனநிலையும் இதுதான். புலிகளின் பொங்குதமிழை கொண்டாடிய தமிழ் தேசியம் (தமிழ் தேசியம் என்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல) இன்று ஹக்கீமின் வாயினால் அதை விமர்சிக்கச் செய்கின்றன. சுரேஷிடமிருந்து பதிலடி வாங்கிக் கொடுக்கின்றன. விக்கினேஷ்வரனை கொண்டாடிய தமிழ் கூட்டமைப்பு இன்று அவரை விமர்சிக்கத் தலைப்படுகின்றது. இவற்றுக் கெல்லாம் அடிப்படைக்க காரணம், முன்னமே பிரதான கட்சிகளால் நிர்ணயிக்கப்பட்ட காரியங்களுக்கு குந்தகமாக எது வந்தாலும் அதை ஒன்றுசேர்ந்து தாக்குதல் என்ற மனநிலை என்றே எண்ணத் தோன்றுகின்றது. 

 

 

மேற்குறிப்பிட்ட செய்தியில், மு.கா. தலைவர் இன்னுமொன்றை சொல்லியிருக்கின்றார். ‘மிகவும் பக்குவமாகவும் சாணக்கியமாகவும் கையாளப்பட வேண்டிய விடயங்களை பகிரங்கமாக போட்டுடைத்துவிடக் கூடாது’ என்று அவர் கூறியிருக்கின்றார். உண்மைதான். ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் என்ன நடக்கின்றது என்று எல்லா மக்களுக்கும் பகிரங்கமாக சொல்லப்பட வேண்டும். இது வெறுமனே இரண்டு கட்சிகளும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அதை நீங்கள் வெளியில் சொல்லாத காரணத்தினாலேயே, யாராவது அதைப் போட்டு தாறுமாறாக உடைக்க தலைப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன், கடைசித் தருணத்தில் எல்லாம் வெளியில் தெரியவரும்போது, ஒரு சில நாட்களுக்குள் தீர்வுத் திட்டம் பாரிய சவால்களை உண்டு பண்ணும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 
வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு ஹக்கீம் ஆதரவு தெரிவிப்பார் என்று பரவலாக பேசப்பட்டாலும், தமிழ் தேசியம் நினைக்கின்ற மாதிரி மு.கா. தலைவர் செயற்பட முடியாத இக்கட்டான நிலை இருக்கின்றது என்பதை முன்னமே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கில் எழுச்சிகளும் போராட்டங்களும் வெடித்துக் கொண்டிருக்க, அங்குள்ள மக்களை பகைத்துக் கொண்டும், தனது வாக்காளர்களான கண்டி மக்களை மறந்து விட்டும், தமிழ் தேசியத்திற்கு நூறுவீத ஆதரவை ஹக்கீமால் வழங்க இயலாது. ஹக்கீம் முஸ்லிம் மக்களின் தீர்மானங்களின் பின்னாலேயே போவார் என்பது வெறும் அனுமானமல்ல. உண்மையில், ‘சிங்கள மக்கள் அப்படியே தமிழர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை வழங்கப் போவதில்லை. எனவே நாம் அதை ஆதரிப்பது போல் இருப்போம். குடைசியில் அது எப்படியோ குலைந்துவிடும் தானே’ என்ற மனநிலையில் மு.கா. தலைவர் இருப்பதாகவு;, அதற்காக ஆதரவளிப்பது போல் காட்டிக் கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது.

 
சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் வைத்து அவர் வெளியிட்ட கருத்து இதை உறுதிப்படுத்துகின்றது. அதாவது, இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு ‘மு.கா. இன்னும் ஆதரளிக்கவில்லை’ என்று கூறியிருக்கின்றார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில், தமிழ் தேசியம் நம்பிக் கொண்டிருக்கின்ற மு.கா. தலைவரே இவ்வாறு கூறியுள்ளார்.
இதைப் பார்க்கும் போது, இவ்விணைப்பிற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ள ஏனைய முஸ்லிம் கட்சி தலைவர்களான றிசாட் பதியுதீனையும், அதாவுல்லாவையும் விட சிக்கலான அதைப்பற்றி பகிரங்கமாக போட்டுடைக்காத ஹக்கீமே தமிழ் தேசியத்தின் கடைசிநேர நகர்வுகளுக்கு சவாலான விதத்தில் தனது சாணக்கியத்தை மாற்றிக் கொள்வார் என கருதலாம். தேர்தல் காலங்கள் போல வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் அல்லது தீர்வுத்திட்ட விடயத்தில் முஸ்லிம்களை பொய்யான கற்பிதங்களை சொல்லி ஏமாற்ற முனைந்தால், றிசாட்டும் அதாவுல்லாவும் கோட்டைகளுக்குள் காலூன்றி விடுவார்கள் என்பதை ஹக்கீம் மறக்கமாட்டார்.

 
சாணக்கியம் வெல்லும் ஆனால், மு.கா. தலைவர் சொல்கின்ற சாணக்கியம் வெற்றியைத் தருமா என்பதே நிச்சமற்றதாகவுள்ளது. ஆனபோதும், தமிழ் தேசியம் எதற்காக தன்னுடன் உறவு கொண்டாடுகின்றது, எதற்காக தன்னை பாதுகாக்கின்றது என்பதைக் கூட அறியாதவராக சாணக்கிய தலைவர் இருக்கமாட்டார்.
இம்முறை தமிழ் தேசியத்திற்கு கண்மூடித்தனமாக ஆதரவளிக்கப் போய்… இந்த சாணக்கியம் சறுக்கினால், நிலைமை மோசமாகி விடும் என்ற யதார்த்தத்தை அவர் பகிரங்கமாக போட்டுடைக்கவும் மாட்டார்.

 

ஏ.எல்.நிப்றாஸ்