மு.கா.தலைவர் அவர்களுக்கு கிழக்குவாழ் முஸ்லிம்கள் சார்பாக ஒரு திறந்த மடல்.
தலைவர் அவர்களே நாம் முஸ்லிம்கள். மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்கள். எமக்கு உலகில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்புக்கள் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவோம். நீங்கள் இலங்கையிலுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் பொறுப்புக்களை தலையில் சுமந்தவண்ணமுள்ளீர்கள்.
எங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களுகக்காகவாது உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மறுமை நாளில் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனையும் அவனது நன்மை தீமைபற்றி விசாரிப்பான். விசாரணையில் சிலர் வெற்றி பெற்று சுவனவாசிகளாக சந்தோசத்தோடு இருப்பர்.அப்போது அல்லாஹ் மற்றவர்களைப்பார்த்து அச்சுவனவாதியைக்காட்டி இவரிடம் யாரும் உரிமை பெறவேண்டியுள்ளதா எனக்கேட்பான். அப்போது அச்சுவனவாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடம் பெறவேண்டிய உரிமைகள்பற்றி முறையிடுவார்கள்.உடனே அல்லாஹ் அச்சுவனவாதியின் நன்மைகளை அநியாயமிழைக்கப்பட்டவர்களுக்கு மாற்றிக் கொடுத்து விடுவான். இறுதியில் அச்சுவனவாதி நரகவாதியாகி விடுவான். இதை நீங்கள் பயந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஒருதவறு விட்டுவிட்டால் அனைத்து முஸ்லிம்களும் முறையிடுவார்கள். அவர்களுக்கு மாற்றீடு செய்ய உங்களிடம் போதுமான நன்மைகளுண்டா? ஆனால் நீங்கள் நியாயம் தவறாமல் நடந்தால் மறுமையில் சூரியன் ஒருசாண் தூரத்தில் இருக்கும் போது உடல்கள் கரைந்தோடும் வேளையில் அர்சுடைய நிழல் கொடுக்கப்படுமென நபியவர்கள் கூறியுள்ள ஏழு வகையினருள் நீதி தவறாத தலைவன் என்னும் வகையில் நீங்களும் அடங்குவீர்ள்.
ஆகவே, இக்கால கட்டம் முஸ்லீம்களுக்கு ஒரு முக்கியமான ஒரு காலகட்டமாகும். தயவு செய்து முஸ்லிம்களுக்கு கழுத்தறுப்பு செய்து விடாதீர்கள். மறுமையில் யார் மறிக்கா விட்டாலும் நான் மறிப்பேன்.
ஏனெனில் கடந்த காலங்களில் நீங்கள் செய்தவைகளால் முஸ்லிம்கள் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் பிரச்சனைகள் தேவையானளவு சர்வதேசமயப் படுத்தப்படவில்லை. மு.கா. இதை செய்யாவிட்டால் இதை செய்வது யார்?
ரணில் பிரபா ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் சிறுகுழுவாக்கப்பட்டபோது என்ன செய்தீர்கள்? அதையடுத்துவந்த பேச்சுவார்ததைகளில் முஸ்லிம்களுக்குத் தனித்தரப்புப் பெற்றுத்தந்தீர்களா.? ஒப்பந்தத்தையடுத்து ஓட்டமாவடி, வாழைச்சேனை,ஏறாவூர், மூதூர், கிண்ணியா போன்ற முஸ்லிம் ஊர்கள் தீக்கிரையாக்கப்பட்டு புலிகள் முஸ்லிம்களை வேட்டையாடி அவர்களின் ஜனாசாக்களை உங்கள் கண் முன்னே டயர் போட்டு தீயிலிட்டபோது வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?
தீர்வு வரும்போது முஸ்லிம்களின் உரிமைகளை சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புக்களுடன் பெறுவதானால் அது பற்றிய முன்னாயத்தம் என்ன செய்தீர்கள்? அதாவது, முஸ்லிம்களின் உரிமைகளை அடையாளப்படுத்தி நிலபுலன்கள், பொருளாதாரம், உயிரிளப்பு ஆகிய இழப்புக்கள் சம்மந்தமாக ஆவணப்படுத்தல் செய்தீர்களா?
முஸ்லிம்களின் காணி எங்குள்ளது , எவ்வளவு உள்ளது அதில் தமிழர்கள் எவ்வளவைச்சூறையாடியுள்ளனர் என்பது தொடர்பான ஆவணப்படுத்தல் செய்துள்ளீர்கள? ஆனால் தமிழர்கள் முஸ்லிம்ளின் காணிகளை அபகரித்து விட்டு அதற்கு தங்கள் பெயரில் ஆவணங்கள் தயாரித்துவிட்டு கச்சேரிகளிலிருந்த முஸ்லிம்களின் ஆவணங்களை அழித்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஓட்டமாவடி ஏறாவூர் வாழைச்சேனை மக்களிடம் கேளுங்கள்.
முஸ்லிம்களுக்கெதிராக மகிந்தவை எதிர்ப்பது போன்று மக்களிடம் காட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கு அநீதமிளைக்கும் போதெல்லாம் தலைமைத்துவம் பக்குவமாகவும் சாணக்கியமாகவும் வென்றெடுக்கும் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு மகிந்தவிடம் திவிநெகும சட்டமூலம், பதினெட்டாம் திருத்தச் சட்டம் சிராணி பணடாரநாயக்கவின் பதவி களைவு போன்றவற்றுக்கு சாதகமாக வாக்களித்துவிட்டு பின்னர் “கண்ணை மூடிக்கொண்டு மடுவுக்குள் பாய்ந்தோம்” என்று கூறினீர்கள்
நீங்கள் மைத்திரியை ஆடசிக்கு கொண்டுவரும் போது என்ன பேரம் பேசினீர்கள்?
ஒரு வருடத்துக்குள் மலயகத்திள் திகாம்பரம் போன்றவர்கள் தங்களது மக்களுக்காக ஏழாயிரம் வீடுகளையும் ஏழு பேர்ச்சஸ் காணிகளும் கல்வி வளங்களும் பெற்றுக் கொடுக்கின்றனர்.
த.தே.கூ எதிர் கட்சி ஆசனம்களிள் இருந்து கொண்டு தமிழர்களின் காணிகளை விடுவிக்கின்றனர், மீள் குடியேற்றம் செய்கின்றனர்
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வரும்போது அவர்களிடம் சென்று தமிழ்மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசன் ஒரு முஸ்லிமாவார் அவர் வரும்போது த.தே.கூ மற்றும் தமிழ் மக்கள் பேரவை மலையகத் தமிழர்கள் அடங்கலாக எல்லோருமே சந்தித்து தங்களது மக்களது பிரச்சினைகளை முன்வைத்தனர். தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களை நேரடியாகவே அவர்களது கிராமங்களக்கு சென்று மக்களை நேரடியாகவே சந்தித்து அவர்களின் துயரங்களை நேரில் கண்டறிய வழிசமைத்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்?
நீங்கள் முஸ்லிம்களின் தலைவர் அல்லவா ஹுசைனுக்கு விளங்காதா? ஏன் நீங்கள் சந்திக்கவில்லை?
முஸ்லிம்களுக்கு அப்படியான பிரச்சினை இல்லையா?
பொருளாதார பிரச்சினையுள்ள இந்தியா தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முடியுமாயின் செல்வந்த நாடுகளின் முஸ்லிம் நாடுகள் முஸ்லிம்களுக்கு ஒரு வீடாவது கட்டிக்கொடுக்காதா?
கட்டிக்கொடுப்பது ஒருபுறமிருக்க அஸ்ரப் நகரில் கட்டிக்கொடுத்த வீட்டை பெற்றுக்கொடுக்க முடியாதா?
த தே கூ தங்களால் முடியாதவற்றை நீதிமன்றம் சென்று தங்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்கின்றது (சம்பூர் அனல் மின்நிலையம்). நீங்கள் என்ன செய்தீர்கள்?
ஐநா செயலாளர் இலங்கைக்கு வந்தார் அனைத்துத் தரப்பும் தமது கட்சிசார்பாக சந்தித்தனர். த.தே.கூ. தமிழ் மக்கள் பேரவை தனித்தனியாக சந்தித்து தமிழர் பிரச்சினைகளை ஆணித்தரமாக முன்வைத்தனர். நேரடியாக மக்களிடம் அழைத்துச் சென்றனர். ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தும் சந்தர்ப்பம் காலடிக்கு வந்தபோதும் தட்டிக்கழிக்கும் உங்களது நிலை தொடர்பாக பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஐநா செயலாளர் கட்சித்தலைவர்களுடன் ஒரு சம்பிரதாய பூர்வ சந்திப்பை நடித்தினார் அப்போது அமைச்சர் றிசாட் அவர்கள் முஸ்லிம்கள் சார்பாக பேசி முஸ்லிம்களின் பிரச்சினை அடங்கிய ஒரு மகஜரையும் கையளித்தார். பேசிய உங்களுக்கு ஒரு பேப்பரும் பேனாவும் கிடைக்கவில்லையா?
தலைவர் அஸ்ரப் மு கா வுக்கு தலைமை தாங்கிய காலத்தைவிடவும் நீங்கள் தலைமை தாங்கியது நீண்டகாலமாகும். இதற்குள் என்ன செய்தீர்கள்? நல்லாட்சி.வந்துள்ளது இனிச் செய்வோம் என்றீர்கள். கல்முனை நகரமயமாக்கலுக்கு என்ன நடந்தது? அதற்காகதமிழர்களுடன் நீங்கள் இன்னும் பேசவில்லையா?
காரைதீவு சந்தியில் அமைந்துள்ள பள்ளிவாயில் காணிக்கு என்ன நடந்தது? இப்படியானவர்களுக்கு நீங்கள் கூஜா தூக்குவதன் மர்மம் என்ன? முஸலிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றி அவர்களது மீள்குடியேற்றத்தை தடுத்து வடக்கிலும் கிழக்கிலும் காணிகளை அபகரித்து பள்ளிவாயில்களிலும் மனித வேட்டையாடியவர்களுக்கு சோரம் போகின்றீர்கள். மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு பாதிக்கப்பட்ட எங்களை தீனியாக்குகின்றீர்கள்.
சரி போனது போகட்டும் இரு சமுகங்களும் புரிந்துணர்வுடனும் சமாதானமாகவும் இணைந்த வடகிழக்கில் வழவேண்டும் என நீங்களும் தமிழர்களும் நினைத்தால் நாங்களும் உங்களுடன் ஒத்துழைக்கின்றேம். அது ற்றி பேசுவோம். ஆனால் பேச்சைஆரம்பிக்குமுன்பாக தமிழர்களின நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் பொருட்டு அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவித்துக்காட்டட்டும்.
இறுதியாக எதிர்வரும் பத்தாம் திகதி பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் விடயமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐநா பிரதிநிதி இலங்கை வருகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்? பக்குவமாகவும் சாணக்கியமாகவும் வழமை போன்றுஒதுங்கப்போகின்றீர்களா அல்லது ஏதாவது செய்வீர்களா?
AR Mohamed Faiz