காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணிநேரங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து அரசு அதிகாரிகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விளக்கம் அளித்தனர். அப்போது இருமாநில உயர் அதிகாரிகள் கூட்டம் 29-ம் தேதி நடக்கக்கூடும் என்று முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைமைச் செயலாளர், அமைச்சர் பங்கேற்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். பொதுப்பணித்துறை உயர் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கவும், கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய தகவல்கள் குறித்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்திஉள்ளார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு சம்பா சாகுபடிக்காக போதிய தண்ணீரை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு காவிரியில் 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கர்நாடக அரசு திங்கட்கிழமை (26-ந் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவில், தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிடுவது கர்நாடகாவுக்கு மிகவும் கடினமானது. எனவே, இந்த உத்தரவை 2017 ஜனவரி 31-ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும் வகையில் திருத்தி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த இடைக்கால மனுவில், கடந்த 5, 12 மற்றும் 20-ந் தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு எதையும் கர்நாடகா நடைமுறைப்படுத்தவில்லை.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5, 12, மற்றும் 20-ந் தேதிகளில் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா நிறைவேற்றும் வரையில் எந்த திருத்தம் கோரும் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கோரிக்கை விடுத்தது. இந்த இரு மனுக்களின் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் புதன்கிழமை முதல் 30-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் மத்திய அரசு இரு மாநில முதல்வர்களை உடனடியாக அழைத்து காவிரி பிரச்சினையில் ஒரு சுமுகமான முடிவு காண முயற்சிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றுவதை அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு, காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்ற கர்நாடக சட்டப்பேரவை தீர்மானம் சுப்ரீம் கோர்ட்டை கட்டுப்படுத்தாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுவது நீதிமன்ற மாண்பை அவமதிக்கும் செயல்.” என்று கூறிஉள்ளது. மேலும் வழக்கின் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை (30-ந் தேதி) மதியம் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.