இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடியவர் கவுதம் காம்பீர். கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடியது. அப்போது காம்பீர் மிகவும் மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கடைசியாக ஓவலில் நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 3 ரன்கள் எடுத்திருந்தார்.
தற்போது காம்பீர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக துலீப் டிராபியின் மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியில் இடம்கிடைக்கும் நம்பிக்கையில் இருந்தார்.
இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் லோகேஷ் ராகுல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடும்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்டில் இடம் பிடிப்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
காயம் காரணமாக ராகுல் இடம்பெறாவி்ட்டால் காம்பீருக்கு இடம்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த கவுதம் காம்பீர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் வாரிய அகாடமியில் உடற்தகுதியை நிரூபித்துக் காட்ட இருக்கிறார். இதற்குப்பின் அவர் அணியில் இணைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.