ஆறப்போட்டு இழுத்தடிக்கும் யுக்தியினால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை நிரந்தர அடிமைகளாக்கி விட வேண்டாம்..!

azzuhoor

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 26.09.2016 ம் தேதிய தேசிய சேவையில், வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனும் கேள்விக்கு அதுபற்றி தற்போது கருத்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை, என்றும் கிழக்கின் எழுச்சி அதைத் தூக்கிப் பிடிக்கின்றது என்றும் ரவூப் ஹகீம் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றி தனது கருத்தை தெரிவிக்கின்றார் கிழக்கின் எழுச்சியின் இணைத்தலைவர் சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர்.
1986 இலேயே இது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தனது கருத்தை தெரிவித்திருந்தது. அப்போது இது பற்றி கூறிய மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் விவரம் தெரியாமல் கூறியிருந்தாரா?  அல்லது அன்றைய நிலைப்பாட்டிலிருந்து உங்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மாறிவிட்டிருக்கின்றதா?
முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்களிடம் நாம் கேட்க விரும்வது என்னவென்றால், இது உங்கள் கட்சியின் உயர் பீடம் கூடி எடுத்த முடிவா? அல்லது தலைவர் தன் இஷ்டப்படி உங்கள் மீதும் கிழக்கு முஸ்லிம்கள் மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்போகும் முடிவா என்பது பற்றி வடக்கு கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் உயர் பீட உறுப்பினர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
உயர்பீட உறுப்பினர்களின் முடிவு இது அல்லவென்றால் அவர்கள் தமது தலைவரிடம் இது பற்றி விளக்கம் கோர வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுமென்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டதனால்தான், கிழக்கின் எழுச்சி வடக்கு கிழக்கிற்கு வெளியேயான ஒருவரினால் இது குறித்து நியாயமாக நடந்து கொள்ள முடியாது என்று தொடர்ந்தும் கூறி வருகிறது. 
எமது உணர்வுகளை உள்வாங்கி எமது அபிலாஷைகளை வென்றுதரக்கூடிய ஒரு கூட்டுத்தலைமைத்துவத்தினை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் பொறுப்புணர்வுடன் கூறி வருகிறோம்.
கிழக்கின் எழுச்சி எனும் மக்கள் இயக்கத்தின் கருத்துக்களைப் புறந்தள்ளி அரசியல் செய்ய முடியாது என்பதை ஹகீம் அவர்கள் இன்னும் உணர்ந்தபாடில்லை. இது பற்றி எரியும் நெருப்பு. வெறுந்தணலென்று ஒதுக்க நினைத்தால் சமூகப்புறக்கணிப்புக்களைச் சுட்டெரித்து போலி அரசியல்வாதிகளை சந்தியில் நிறுத்தும் மக்கள் எழுச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வங்குரோத்து அரசியல்வாதிகள் வட கிழக்கு பிரிப்பு பற்றி பேசுகிறார்கள் என்கிறீர்களே? தோல்வியடைந்தவர்கள் சமூகம் பற்றி சிந்திக்கக்கூடாதா? அவர்களுக்கு சமூக அக்கறை இருக்கக் கூடாதா?
பதவி கிடைக்காதவர்களினால் இயக்கப்படும் கிழக்கின் எழுச்சி என்பதிலிருந்து நீங்கள் கூற முற்படுவது என்ன? குறைந்த பட்சம் பதவி கிடைக்காதவர்களினால்தான் இது இயக்கப்படுகிறது என்பதையாவது உங்களால் நிரூபிக்க முடியுமா? சிறு பெடியன்கள் போல் அரசியல் பேசுவது உங்களுக்கு அழகானதல்ல.
பதவி கிடைக்காதவர்கள் என்று நீங்கள் எள்ளி நகையாடுகிறீர்களே, இவர்கள் மக்களினால் பதவி இழக்கச் செய்யப்பட்டவர்கள் அல்ல. 
பதவி கிடைக்காதவர்களுக்குப் பதவி கிடைக்காமல் போக காரணம் என்ன? மக்களைச் சந்தித்து வெற்றி பெறும் வாய்ப்பை உங்கள் நீண்டகால திட்டமிடலின் மூலம் நயவஞ்சகத்தனமாக பதவி இழக்கச் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப் பலத்தைக் கொண்டு கபினட் அமைச்சுப்பதவியை தொடர்ச்சியாகப் பெறும் நீங்கள் அம்மக்களுக்கான கடமைகளைச் சரி வர செய்துள்ளீர்கள் என்று மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் சொல்ல முடியுமா? 
தேர்தல் மேடைகளில் பதினாறு வருடங்களாக சொல்லிவரும் கரையோர மாவட்டத்தையாவது பெற்றுத் தந்திருக்கிறீர்களா? அதைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தும் அதனைப் பெறாமல் வேறு விடயங்களைப் பெற்று அனுபவிப்பது சந்தி சிரிக்கின்றதே?
இப்போது கரையோர மாவட்டத்தை அரசாங்கம் தந்தாலும் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலையே நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்.
வடகிழக்கிற்கு வெளியேயான ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்குகளாலும் சிங்கள வாக்குகளாலும் தெரிவு செய்யப்படும் நீங்கள் வட கிழக்கு மக்களுக்குத் தீர்வு சொல்ல என்ன தகுதியைக் கொண்டிருக்கின்றீர்கள்? வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் அறிவில் சிறந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் இருக்கின்றார்கள். எமது பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.
முன்னர் நடந்தது போல் முஸ்லிம்களிடம் எந்த கருத்தும் கேளாமல் வடக்குடன் கிழக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சேர்த்து இணைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கிழக்கிலுள்ள ஒவ்வொரு முஸ்லீமும் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் அது பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று உங்கள் ஆறப்போட்டு இழுத்தடிக்கும் யுக்தியினால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை நிரந்தர அடிமைகளாக்கி விட வேண்டாம் என்று வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.