கடந்த 20.09.2016 நவமணி பத்திரிகையில் சட்டத்தரணி அலி பாரூக் அவர்கள் கிழக்கின் எழுச்சியின் முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனம் சம்பந்தமாக தனது விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். அவர் இது பற்றிய பூரண விளக்கங்கள் இன்றியும் புரிதல்கள் இன்றியும் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதனால் அவருக்கும் நவமணி பத்திரிகை வாசகர்களுக்கும் இது தொடர்பில் விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மறுப்பறிக்கை கிழக்கின் எழுச்சியின் இணைத்தலைவரும் செயலாளருமான சேகு இஸ்ஸதீன் அஸ்ஸுஹூர் அவர்களினால் வெளியிடப்படுகிறது.
முதலில் கிழக்கின் எழுச்சி அமைப்பானது முழுக்க முழுக்க பொது மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் ஒரு அமைப்பாகும். இதில் தோல்வியடைந்த அரசியல்வாதிகளை எங்கிருந்து கண்டுபிடித்தார் என்பது தெரியவில்லை.
தற்போது வடக்கும் கிழக்கும் இணைவது பற்றி பரவலாக பேசப்படும் சந்தர்ப்பத்தில், வடக்குடன் ஒட்டுமொத்த கிழக்கும் முஸ்லிம்களுடன் சேர்த்து இணைக்கப்படுமானால், கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் வடக்குத் தமிழ் தேசியத்திற்கு நிரந்தர அடிமைகளாகிவிடுவர் என்பதனால், இவ்வாறு நடந்து விடக்கூடாது என்ற தவிப்பிலேயே கிழக்கின் எழுச்சி உருவாகியுள்ளது. இந்நிலைமையை தெற்கிலுள்ள அலி பாரூக் போன்றவர்களாலும் மத்தியிலுள்ள ரவூப் ஹகீம் போன்றவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதுவே எமது தவிப்பின் பிரதான காரணமாகும்.
முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனம் என்பதிலிருந்து இவர்கள் எதைப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் தங்களை ஒரு தேசியமாக அடையாளம் கண்டு, அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு தாம் ஒரு தனித்துவமான தேசியம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு, சுய நிர்ணய உரிமைகளுக்குத் தகுதியுடைய ஒரு மக்கள் கூட்டமாக தம்மை உருமாற்றுவதற்கு உந்துசக்தியாக செய்யப்பட்டதே 16ம் திகதிய சாய்ந்தமருது பிரகடனமாகும்.
தெற்கிலுள்ள முஸ்லிம்கள் போலல்லாது வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் இன்னுமொரு சிறிபான்மையினர் மத்தியில் வாழ்பவர்கள். அந்தச் சிறுபான்மை ஆயுதக்குழுக்களால் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் தொழுகையிலும் , உறக்கத்திலும், வயல் வெளிகளிலும், பலி கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கில் அகதிகளாக்கப்பட்டு, இன்னும் சொந்த இடங்களில் குடியமர்வதற்கும் இயலாதவர்களாய் வாழ்பவர்கள். எங்கள் பிரச்சினை வேறு. இதை நீங்கள் படித்து அறிந்து கொள்ள முயலலாமே தவிர, உணர்ந்து கொள்ள முடியாது.
வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் ஒரு தேசியமாக கருதப்படுவதற்கான நியாயங்களை ஏன் கொண்டிருக்கவில்லை என்பதை சட்டம் படித்த அலி பாரூக் அவர்களுக்கு விளக்கமாக சொல்லன்வேண்டியதில்லை என்றாலும், மக்களுக்கு விளக்கும் கடமை எங்களுக்குண்டு. ஒரு மக்கள் கூட்டம் தேசியமாக கருதப்படுவதற்கு அவர்கள் பொதுவான பாரம்பரிய வாழிடத்தையும், பொதுவான பொருளாதார நிலமைகளையும், கலாச்சாரம், தனித்துவமான மொழியையும் கொண்டிருக்க வேண்டும். வடக்கு கிழக்கிற்கு வெளியே சிதறி வாழும் முஸ்லிம்களை இவ்வொழுங்குக்குள் கொண்டுவர முடியாதென்பதாலேயே அவர்களை ஒரு தனித்தேசியமாக கொள்ள முடிவதில்லை.
வடக்குத் தமிழர்கள் இந்த அடிப்படைகளில் தம்மை ஒரு தேசியமாக கொண்டு செயல்படுவதை விமர்சிக்கும் நோக்கமில்லாத அலி பாரூக் அவர்கள் அதே அடிப்படைகளைக் கொண்டு செயல்பட முனையும் எம்மை விமர்சிக்க தீர்மானித்ததன் பின்னணி என்ன?
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த முஸ்லிம் கட்சியும் இதுவரை தீர்வுக்கான முன்மொழிவுகளை வைத்ததாக தீர்மானமாக தெரியாத நிலையிலும், அலி பாரூக் அவர்கள் சார்ந்த சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோ இது பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது எனும் நிலையிலும், கிழக்கின் எழுச்சியானது காலத்தேவையான இம்முக்கிய பிரகடனத்தை, நல்லாட்சிக்கான உத்தரவாதத்துடன் ஆட்சியமைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வின்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களையும் கணக்கிலெடுங்கள் என்று பிரகடனித்திருப்பது, பல தரப்பாலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்கள் கிழக்கு முஸ்லிம்களின் இப் பிரகடனம் தொடர்பில் அக்கறை செலுத்துவதையும் நாம் அறிகின்றோம்.
இப்பிரகடனம் மூலம் நாம் தனி நாடு கேட்கவில்லை. உள்ளக சுயநிர்ணயம் பற்றி மட்டுமே நாம் சிரத்தை கொண்டுள்ளோம். இது முஸ்லிம்களுக்கு எதிரான தரப்பினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் உங்களைப் போன்றவர்களின் முன்யோசனையில்லாத அறிக்கைகள் மூலம் அவ்வாறான சிந்தனைகள் அவர்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக விதைக்கப்பட்டுவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
தென்னிலங்கையில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், முஸ்லிம்கள் புண்படுத்தப்பட்டதும் நாம் அறியாத ஒன்றல்ல. இவை எமது பிரகடனத்திற்கு முன்னரே வேறு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டவை. ஆனால் நாங்கள் மிகத்தெளிவாக எங்களை நாங்கள் ஆளும் ஒரு அதிகாரத்தை மட்டுமே கேட்கின்றோம். உங்களது அரசியலுக்காக எரிகிற நெருப்பில் எண்ணையை நீங்கள் ஊற்றிவிடதீர்கள். ஏனெனில் நீங்கள் கூறிய நெருப்பு எரிவது வடகிழக்கிற்கு வெளியேயாகும்.
இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமல்ல உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உம்மா (உம்மத்) என்ற குடையின் கீழ் ஒற்றுமையாக வாழ வேண்டியவர்கள். ஆனால் எமது பௌதீக, வரலாற்று காரணங்களுக்காக நாம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள, எமது உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது தென்னிலங்கயில் உள்ள முஸ்லிம்களைக் கொண்டு எதிர்ப்பதாக மிரட்டுவது, பௌதீக அரசியல் அபிலாஷைகளில் உங்களுக்குள்ள புலமை பற்றியும் உங்களின் அரசியல் வங்குரோத்து நிலை பற்றியும் தெளிவுபடுத்துகின்றது.