ஏர் நியூசிலாந்துக்கு சொந்தமாக ‘போயிங் 777-200’ விமானத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ, ஆக்லாந்தில் இருந்து ஹூஸ்டன் சென்று கொண்டிருந்தார். இவர் பயணம் செய்த விமானத்தில் வேறு பயணிகளும் பயணம் செய்தனர்.
விமானம் பிரான்ஸ் நாட்டைக் கடந்து தெற்கு பசிபிக் கடலுக்குமேல் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு உடல்நிலை மோசமானதால் உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக பிரான்ஸ் பிராந்தியத்திற்கு சொந்தமான தஹிட்டி தீவின் தலைநகர் பபீட்டேவில் உள்ள விமான நிலையத்தை விமானி தொடர்பு கொண்டார். அங்குள்ள அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க ஒப்புதல் அளித்ததால் விமானி தஹிட்டி தீவிற்கு விமானத்தை திருப்பினார்.
விமான நிலையம் அருகில் விமானம் வந்ததும் விமானத்தில் அளவிற்கு அதிகமாக இருந்த எரிபொருளை வீணாக்கிய பின் விமானத்தை தரையிறக்கினார் விமானி. அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் பயணி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தரையிறக்கப்பட்ட விமானம் சுமார் ஒரு மணி நேரம் தஹிட்டியின் தலைநகர் பபீட்டே விமான நிலையத்தில் நின்றிருந்தது. அதன்பின் விமானம் அங்கிருந்து புறப்பட்டது. இந்த விமானம் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக ஹூஸ்டன் சென்றடையும் என ஏர் நியூசிலாந்து இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.