முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயாகுமென்று மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருவதை உணர்ந்துள்ள மு கா தலைவர் ஹக்கீம் அம்பாறை அரசியல்வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான ஊடகவியலாளர் மாநாடுகளை அடிக்கடி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். இந்த வகையில் மாகாண அமைச்சர் நசீர், மாகாண சபை உறுப்பினர் தவம் போன்ற எச்சில் இலை பொறுக்கும் அரசியல்வாதிகள் ஏற்கனவே ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி மக்களை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர் பைசல் காசிம், அமைச்சர் ரிஷாட்டை பற்றி வெளியிட்ட கருத்து அவர்களது அப்பட்டமான, பொய்யான, கேவலமான சிந்தனையையே உணர்த்தி நிற்கின்றது.
பிரதியமைச்சர் பைசல் காசிம் முதலில் தான் எவ்வாறு அரசியலுக்குள் நுழைந்தோம் என்ற வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இவரை அரசியலுக்குள் கொண்டுவந்த மர்ஹூம் அஷ்ரப்பின் துணைவியார் பேரியல் அஷ்ரப்புக்கே இவர் துரோகம் செய்தவர். பின்னர்
குமாரி குரேயின் விடயத்தில் இவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமை பகிரங்கமாக தூற்றித்திரிந்ததை இப்போது மறந்துவிட்டு இப்போது ஹக்கீம் தான் முஸ்லிம் சமூகத்தின் காவலனென புகழ ஆரம்பித்துவிட்டார்.
பிரதியமைச்சர் பதவியென்ற எலும்புத்துண்டுக்காக தலைவர் ஹக்கீமின் கால்களை நக்கி வந்த அவர் முன்னர் ஒரு கட்டத்தில் பிரதியமைச்சர் பதவி தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக ’ஹக்கீம் முஸ்லிம்களின் துரோகியெ’னவும் அம்பாறை முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஹக்கீம் தமது குடும்பத்தையும் தன்னையும் வளர்க்கின்றார் என்றும் பகிரங்கமாக கூறித்திரிந்தவர். இப்போது ஹக்கீமை திருப்திப்படுத்துவதற்காக ஏதோ ஒரு போதையில் கருத்துக்களை வெளியிடுகின்றார்.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருக்காவிட்டால் பைசல் காசிம் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் தமது பழைய தொழிலான கார்மெண்ட்ஸ் பெக்டரியில் சுப்பவைசர் வேலை பார்க்க வேண்டி நேர்ந்திருக்கும் என்ற உண்மை அவரது மனச்சாட்சிக்கு விளங்கும்.
மு கா தலைவரின் தூண்டுதலில் இவர்களைப்போன்ற அரசியல்வாதிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் அடுத்த தேர்தலில் மண் கௌவும் நிலையிலேயே இவர்களது அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் எழுச்சியையும் அபிவிருத்தியின் வேகத்தையும் பொறுக்கமாட்டாத இவர்கள் இப்போது வாய்க்கு வந்தபடி உளறுகிறார்கள். ரிஷாட்டைத் திட்டித் தீர்க்கிறார்கள்.
அமைச்சர் ரிஷாட்டை கேவலப்படுத்துவதன் மூலம் அவரது மக்கள் செல்வாக்கை குறைக்கலாமென்ற பகற்கனவில் முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு தனது செயற்பாடுகளை நகர்த்துகின்றது. தலைவரினதும் அவரது சகோதரரினதும் நேரடி வழிகாட்டுதலில் ரிஷாட்டுக்கெதிரான பிரத்தியேக இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் புதிது புதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நோர்வேயிடமிருந்தும் அமெரிக்க சியோனிசவாதிகளிடமிருந்தும் காலத்திற்குக் காலம் அந்த ஆதிக்கசக்திகளின் இலங்கை தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக பெற்றுக்கொண்ட கள்ளப்பணம் இந்த இணையத்தளங்கள் மற்றும் வட்சப் குழுமங்களில் பணியாற்றும் கூலிப்படையினருக்கு தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் கூட முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் இவ்வாறான இணையதளமொன்றை ஆரம்பித்து வைத்ததை நாம் நினைவுப்படுத்தவேண்டும்.
இவ்வாறான போக்கிரி அரசியல்வாதிகளை மக்கள் இனங்காணத் தொடங்கிவிட்டனர் என்பதே உண்மை.
அப்துல் பாரி