இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதி ஓடுகிறது. அதில் படகு சவாரி நடைபெறுகிறது. இந்த நிலையில் அங்கு பழமை வாய்ந்த ‘தாகூரியன்ஸ்’ என்று ஒரு கலாசார நிறுவனம் பொன்விழா கொண்டாடி வருகிறது.
இந்த நிறுவனத்தை வங்காள மொழி பேசுபவர்கள் நடத்துகின்றனர். இவர்கள் தங்களது நிறுவனத்தின் பொன்விழாவை ஒரு உல்லாச படகில் கொண்டாடினார்கள். மாலையில் கேளிக்கை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென படகின் என்ஜினில் தீப்பிடித்தது. அது ‘மள மள’ வென பரவி படகு முழுவதும் எரிய தொடங்கியது. அப்போது படகில் 150 பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்
படகில் தீப்பிடித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அவசரமாக அங்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் மருத்துவ குழுவும் அனுப்பப்பட்டது. அவர்கள் படகில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் இந்த தீ விபத்தில் சிக்கிய 150 பேரும் உயிர் தப்பினர்.
இருந்தாலும் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறிதது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.