முதிர்ச்சி அடைந்த விராட் கோலியின் கீழ் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்: மிஸ்ரா சொல்கிறார்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் அஸ்வின் உடன் இணைந்து மிஸ்ரா சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடிய டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என வெற்றி பெற்றது. இதில் மிஸ்ரா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் குறிப்பிட்ட அளவு ரன்களும் குவித்தார்.

இவரும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும் ஆன விராட் கோலியும் டெல்லியைச் சேர்ந்தவர்கள். கோலி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது தலைமையில் மிகவும் சந்தோஷமாக விளையாடுகிறேன் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து மிஸ்ரா கூறுகையில் ‘‘விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுபவர். அதேபோல் சிறந்த மனநிலையையும் பெற்றுள்ளார். அவரை நான் நீண்ட காலமாக பார்த்துக் கொண்டு வருகிறேன். கடந்த சில வருடங்களாக முதிர்ச்சி அடைந்துள்ளார். குறிப்பாக மூன்று நான்காண்டுகளில் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது பேட்டிங் பிரதிபலிப்பில் இருந்து இது தெரிகிறது.

கேப்டன் பதவியோடு ஒரு வீரராகவும் வளர்ச்சி அடைந்துள்ளார். அவரது தலைமையில் விளையாடும்போதெல்லாம் அவர் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். நான் விரும்பும் வழியில் பந்து வீசவும், பீல்டிங் செய்யவும் சுதந்திரம் கொடுப்பார். ஒருபோதும் இவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும், இப்படி பந்து வீச வேண்டும் என்று என்னிடம் கேட்டது கிடையாது. விக்கெட் வீழ்த்தும் நோக்கத்தில் நீங்கள் விரும்பியபடி பந்து வீசுங்கள் என்று என்னிடம் கூறுவார். விராட் கோலி போன்ற கேப்டன் உங்கள் பின்னால் இருந்தால், கட்டாயம் வீரர்களுக்கு அது உறுதியை அளிக்கும்’’ என்றார்.