மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு நம்பிக்கை கொண்டு இஸ்லாத்திற்குச் சிலர் திரும்பினார்கள்.
ஈஸா (அலை) அவர்களை, சிலுவையில் அறைந்துவிட்டார்கள் என்று நம்பிய ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல் வணத்திற்குரிய இறைவன் மூன்று என்று கூறி வந்தனர். இன்னும், ‘அல்லாஹ் தனக்கென ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்’ என்று ஒரு கூட்டத்தினர் கூறினர்.
இப்படியான அபாண்டமான ஒரு கூற்றைக் கேட்டு இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்பும் பதறியது. வானங்கள் வெடித்து, பூமி பிளந்து, மலைகள் சிதறுண்டுவிடுமென்றாகியது. வழிப்பாட்டிற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். ஒரு மகனை ஏற்படுத்திக் கொள்வது என்பது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
வானங்களிலும் பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம் அவனுக்கே அடிமை. அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான், அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். இறுதி நாளில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். எவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அனைவரின் நேசத்தையும் ஏற்படுத்துவான். காரியங்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
ஈஸா (அலை) அவர்களிடம், அல்லாஹ் “மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி உம்மையும் உம் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று கேட்டான். அதற்கு ஈஸா (அலை), “நீ மிகவும் தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்.
என் மனதில் உள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றையும் நன்கு அறிபவன். நீ எனக்குக் கட்டளையிட்டபடியே மனிதர்களுக்குப் போதித்தேன். ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கூறவில்லை.
நான் மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் திரித்துச் சொல்லாதபடி நான் பார்த்துக் கொண்டேன். அதன் பிறகு நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் எப்படி வழிதவறினார்கள் என்பதை நீயே அறிவாய். நீயே எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாக இருக்கிறாய். நீ அவர்களை, தண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் முற்றிலும் உரிமையுள்ளவன்” என்று கூறினார்கள்.
முகமது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தின் (சமுதாயத்தின்) சிறப்புகளை அறிந்த ஒவ்வொரு நபியும் ‘தம்மையும் முகமது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். அந்த வகையில் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும்தான் அந்த பாக்கியத்தை இறைவன் அருளினான். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும். ஈஸா (அலை) இன்னும் மரணிக்கவில்லை, அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள்.
உலக முடிவு நாள் நெருங்கும்போது ஈஸா (அலை) ஒரு மனிதராக இவ்வுலகில் இறங்கி இறைவனின் வேதத்தை மெய்ப்பிக்க வருவார்கள். இவ்வுலகத்தில் வாழ்ந்து மரணிப்பார்கள்.
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் ஈஸா (அலை) மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அதே வேதமுடையவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பர். யுக முடிவு நாளில் உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும்.
ஈஸா நபியை இறைவன் என்று அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போரை இறுதி நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாக இறைவன் வைப்பான் என்றும், அல்லாஹ் மூவரில் ஒருவன் என்று கூறுபவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறைவன் கருதுவதாகவும் திருக்குர்ஆனில் வந்துள்ளது. அல்லாஹ்வின் பக்கம் திரும்பி பாவ மன்னிப்புத் தேடுபவர்களை இறைவன் மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனே எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையோன்.
திருக்குர்ஆன் 4:171, 19:88-96, 5:116-120, 4:159, 3:55, 5:72-78