உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட, உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 65 லட்சம் இந்தியர்களும், 7 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளும் தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர்.
புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகருக்கு அருகே விமான நிலையங்கள் எதுவும் இல்லை. இதனால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்து, அங்கிருந்து ரெயில் மற்றும் வாகனங்களில் மூலமாக 200 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆக்ராவிற்கு செல்கின்றனர். தரைவழிப் போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தி அந்நகருக்கு செல்வது கடினமாக இருப்பதாக சுற்றுலா வருபவர்கள் கூறி வருகின்றனர்.
தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் பத்தேப்பூர் சிக்ரி ஆகிய மூன்று உலக பராம்பரிய தளங்கள் ஆக்ராவில் அமைந்துள்ள நிலையில், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே சுற்றுலா பயணிகள் அங்கு தங்குகின்றனர்.
இந்நிலையில், தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தளம் உள்ளது. இந்த விமானத்தளத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய பாதுகாப்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்படையின் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற உள்ளது.
விரிவாக்க பணிகளுக்காக 150 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக உத்தரப்பிரதேசம் மாநில அரசு அறிவித்துள்ளது. விமானப்படைத் தளத்தில் உள்ள ஓடுபாதைகள் ரூபாய் 100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுகின்றது.
விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரசுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், அப்பகுதியை சுற்றியுள்ள 350 நில உரிமையாளர்களிடம் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டதாகவும் ஆக்ரா மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நடைபெறவுள்ள விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கள் நிறைவடையும் என்றும் உத்தரப்பிரதேசம் மாநில தலைமை செயலாளர் தீபக் சிங்கால் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் விமான நிலையம் மற்றும் உயர்நீதிமன்றம் அமைப்பது அங்குள்ள வாக்காளர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகின்றது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவது அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் நல்ல பலனைத்தரும் என்பதுடன் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பலமாக காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வுக்கும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.