முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்கள் அக்கரைப்பற்று அரசியலில் மீண்டும் தன்னுடைய பலத்தை எதிர்வருகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் நிரூபித்து விடுவார் என்கின்ற அச்சம் தற்பொழுது மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களை ஆட்கொண்டு விட்டது . அதாஉல்லா அவர்களின் அரசியல் இருப்பினை அக்கரைப்பற்று மண்ணிலிருந்தும் அக்கரைப்பற்று மக்கள் மனதிலிருந்தும் வேரறுக்க முடியாது என்று மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கு நன்கு தெரிகின்றது.
அக்கரைப்பற்றைப் பொறுத்தவரையில் தவம் ஒரு கோடரிகாம்பாகவே கருதப்படுகின்றார். ஏனென்றால் அவர் முஸ்லிம் காங்கிரஸின் போராளியல்ல. விரும்பியோ விரும்பாமலோ அக்கரைப்பற்றின் ஆலமரமாக வளர்ந்து விருட்சமாக காட்சியளிக்கும் அதாவுல்லாவை வெட்டிச் சாய்ப்பதற்கு மு கா தெரிந்தெடுத்த கோடரிக் காம்பு தான் இந்தத் தவம்.
அவர் ஊரைக்காட்டிக்கொடுத்தவரென்ற பட்டத்தை சுமந்துள்ளார். சேகு இஸ்ஸதீனிடம் வளர்ந்து அவருக்கு குழி பறித்த பின்னர் அதாவுல்லாவுடன் இணைந்து அரசியல் செய்தவர்தான் இந்த தவம். பின்னர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு மு காவுக்கு தாவினார்.
மாகாண அமைச்சுப்பதவி தருவதாகவும் அதிகாரங்கள் வழங்குவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் பதவி ஆசை காட்டியதால் அந்தக் கட்சிக்கு தாவினார்.
அக்கரைப்பற்றில் மு கா தலைவரின் முகத்தில் கஞ்சியை ஊற்றும் போது போராளிகள் பட்ட வேதனையை அவர் ஒரு போதும் பட்டிருக்கமாட்டார். அந்த நேரத்தில் அவருக்கு எவரையாவது பிடித்து பதவி பெற வேண்டுமென்ற ஆசை மட்டுமே இருந்தது. அவருடைய பதவி வெறியை பகடைக்காயாக பயன்படுத்திய மு கா தலைவர் ஹக்கீம், ஹாபீஸையும் ஹசனலியையும் அக்கரைப்பற்றுக்கு கூட்டி வந்து மேடையமைத்து தவத்திற்கு மாகாண அமைச்சுப்பதவி தருவதாக பகிரங்கமாக வாக்களித்தமையை அக்கரைப்பற்று வாழ் சமூகம் இன்னும் மறந்துவிடவில்லை.
ஊர்த்தலைவனை வேரொடு பிடுங்கி எறிய கையாண்ட தந்திரம் தான் முஸ்லிம் காங்கிரஸின் இந்த நாடகம் என்பது இப்போது தான் எமக்கும் படிப்படியாக விளங்கி வருகின்றது. இது தான் நமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தவத்தின் மீது வைத்துள்ள அளவு கோல். ஊர்த் தலைவனான அதாவுல்லாவை சாய்ப்பதற்காக கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டிமுனை, ஒலுவில், இறக்காமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள அதாவுல்லா மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களும் முகம் தெரியாத விலாசமில்லாத தவத்திற்கு மாகாண சபையில் வாக்குகளை வாரி வழங்கினர். அதனால் தவமும் மாகாணசபைக்கு சென்றார் .
தவத்திற்கு நாம் ஒன்று கூற வேண்டும்,
“வண்டிலுக்கு கீழே செல்லும் நாயின் கதையைத்தான் எம்மால் உங்களுக்கு உவமானம் காட்ட முடியும். வண்டிலை மாடு இழுக்க அதன் நிழலில் செல்லும் தெருநாய் நினைக்குமாம் தான் தான் அதனை இழுப்பதாக. இந்த அறியாமையை நினைத்து ஒரு கணம் நீ நின்று பார். வண்டிலை மாடு தான் இழுக்கின்றது என்பதை நீ உணர்ந்து கொள்வாய்”
தவம் அவர்களே , தொடர்ந்தும் ஊரில் அரசியல் செய்ய வேண்டுமானால் மாகாண சபை அமைச்சுடன் வாருங்கள் ! அப்போது தான் எமது கட்சியான மு கா வில் உங்களுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை அக்கரைப்பற்று மக்கள் நம்ப முடியும்.
முஹம்மத் பின் அலியார்