தமிழ் தேசியத்தின் உத்தரவாதத்தின் பேரிலுமே முஸ்லிம் தேசியம் சமஷ்டி ஆட்சி கோருகின்றது:சேகு இஸ்ஸதீன்

 

வ/கி தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சி அதிகாரம் வழங்கப்படும்போது, வ/கி முஸ்லிம்களுக்கும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டயினதும் உத்தரவாதங்களுக்கு அமைவானதாகவே செய்யப்படுகிறது| என்று கலைக்கப்பட்ட வஃகி மாகாண சபையின் எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி, வேதாந்தி சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

Cegu_Fotor

சென்ற வெள்ளிமாலை மதினாபுரம் சேகு மலைச்சோலையில் நடைபெற்ற முஸ்லிம் தேசிய முன்னணியின் பிரசாரக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது:-

புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இந்தக் காலகட்;டத்தில், தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஆலோசனைகளை, ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் தேசிய அமைப்புகள் பகிரங்கப்படுத்தி அரசமைப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளன. அத்தோடு நிற்காமல், தமிழர்கள் மத்தியில் அதற்கான முற்றான ஆதரவை வெளிக்காட்ட வைத்துள்ளன. மேலதிகமாக, உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் தமது கோரிக்கைகளுக்கான ஆதரவை கோரியுள்ளன. தமிழ் அரசியல் தலைவர்களின் தழிழர்களுக்கான கரிசனையையும், சிரத்தையையும், தியாகத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
மறுபுறத்தில் வ/கி முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வ/கி முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் இன்னும் முற்றுப்பெறாமல் இருப்பதனால் தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கான பொதுத்தீர்வுத்திட்டம் இன்னும் முன்மொழியப் படாமலேயே இருக்கிறது.

 

நம் நாட்டில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான மூன்று காங்கிரஸுகளில் இரண்டு கிழக்கிலும், ஒன்று வடக்கிலும் தோற்றம் பெற்றவை. இவற்றின் அதிபெரும்பான்மையான ஆதரவாளர்கள் கிழக்கு, வடக்கைச் சேர்ந்தவர்கள். அடிப்படையில் இந்த மூன்று காங்கிரஸ்களும் அதன் ஆதரவாளர்களும் வ/கி முஸ்லிம் தேசியத்தை சேர்ந்தவர்களே.

 

இவ்வாறு இருந்தபோதும், இந்த காங்கிரஸ்களில் எந்தவொன்றும் முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உருப்படியான எந்த ஒரு தீர்வுத் திட்டத்தையும் இதுவரையும் முன்வைக்கவில்லை. முஸ்லிம்களுக்கு மத்தியில் அவைகளை பகிரங்கப்படுத்தி ஆதரவு தேடவேண்டுமென்று யோசித்ததும் கிடையாது. அரசமைப்புக் குழுவுக்கு தமது சிபாரிசுகளை அனுப்பி வைக்கவுமில்லை.

 

உட்கட்சிப் பூசல்களையும், நெருக்கடிகளையும் நியாயமான முறையில் தீர்த்துக்கொள்ளாமல் இழுத்தடித்து, அந்த பரபரப்பில் முஸ்லிம்களை தீர்வு பற்றி சிந்திக்க இடமளிக்காமல் தமது நலன்களை காப்பாற்றுவதிலேயே அவை கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இதனால் இந்தக் கட்சிகளை இனிமேலும் நம்பிக்கொண்டிருப்பது முஸ்லிம் தேசியத்தை பாழ்ங்கிணற்றிலேயே தள்ளப்போகிறது.

 

இப்போது நமக்குமுன் இரண்டு பிரச்சினைகள் முக்கியப்பட்டுள்ளன. இந்தக் காங்கிரஸுகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வஃகி முஸ்லிம் பிரதேசங்கள் முற்றிலும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரில் பிரசாரத்தை மேற்கொண்டு, முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்தி முஸ்லிம் தேசியத்தை கட்டியெழுப்புவது.
அடுத்தது, 1956ல் தழிழரசுக் கட்சியின் நான்காவது மாநாட்டில் எடுக்கப்பட்ட பிரசித்தி பெற்ற திருமலைத் தீர்மானம்| தொடர்பானது. அந்தத் தீர்மானத்தில் தமிழர்களுக்கு சுயாட்சி தமிழரசும், முஸ்லிம்களுக்கு சுயாட்சி முஸ்லிம் அரசும் என்று இணக்கம் காணப்பட்டது. முஸ்லிம்கள் இணைந்த வ/கிழக்கில் தாம் பெரும்பான்மையாக வாழும் நிலப்பரப்பில் தமக்கென்று ஒரு தனியான சமஷ்டி ஆட்சியை நிறுவும் கோரிக்கையை அந்த இணக்கத்தின் அடிப்படையில் முன்வைப்பது.

 

இந்த திருமலைத் தீர்மானத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977ன் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியுள்ளதை சேர்த்துக் கொள்வது. தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த நாட்டின் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களின் ஆள்புல எல்லைகளை உள்ளடக்கிய விதத்தில் சுதந்திரமான, இறைமையுடன்கூடிய சுயாதீன சோஷலிச அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக, தமிழர்களிடமிருந்து ஒரு ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கு 1977ன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. அந்த விஞ்ஞாபனத்தில்,
அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதுடன், எந்தவொரு பிரதேசமோ அல்லது எந்தவொரு சமயமோ மற்றொரு பிரதேசத்தை, அல்லது மற்றொரு சமயத்தை அடக்கி ஆள்வதற்கு வாய்ப்புக் கிடைக்காத விதத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கென சுவிட்சர்லாந்தில் உள்ளதைப்போல ஒரு சமஷ்டி ஆட்சி முறை நிறுவப்படும் என்று கூறியிருக்கிறது.

 

குறிப்பாக, தமிழீழ அரசில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சிமுறை ஏற்படுத்தப்படும். தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் அடிப்படையில் அவர்களுடைய சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தரவாதம் அளிக்கிறது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.

 

இந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் உத்தரவாதத்தைப் பெரிதும் சிலாகித்து 1977ன் பொதுத் தேர்தலின்போது வ/கி முஸ்லிம்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியில் முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்தி போட்டியிட்டு கணிசமான வாக்குகளை அளித்தனர். அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை அமரர் அமிர்தலிங்கம் பெறுவதற்கு முஸ்லிம்களும் காரணமாக இருந்தனர்.

 

தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தரவாதமளித்துள்ள அதே விடயத்தைத்தான் நாம் கூறுகிறோம். முஸ்லிம்களின் விருப்பத்தின் பேரில், பிரிந்து செல்லும் அடிப்படையில், முஸ்லிம்களுடைய சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த உத்தரவாதத்தில் திருப்தியுற்று, சரிகண்டுதான் முஸ்லிம்களுக்கான சமஷ்டி ஆட்சி அதிகாரத்துக்கான முன் மொழிவுகளை நாம் முன்வைக்கிறோம். நான் பேசியதில் தவறு உள்ளதென்றால் முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியைத்தான் குற்றம் சுமத்தவேண்டி வரும்.

 

வ/கி தமிழர்களும், முஸ்லிம்களும் எந்தப் பிரச்சினையுமே இல்லாமல் சுமுகமான நிலையில் பரஸ்பர புரிந்துணர்வோடும், அந்நியோன்னியமான உறவோடும் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்திலேயே தமிழரசுக் கட்சியின் 1956ல் நடந்த நான்காவது மாநாட்டின் பிரிசித்தி பெற்ற திருமலை தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட விடயங்களையும் கருத்திற்கெடுத்துத்தான் நாம் நமது கோரிக்கையை முன்வைக்கிறோம். அதன் பிரகாரம் முஸ்லிம்கள் தமது விருப்பதின் பேரில் பிரிந்துசென்று தமக்கென ஒரு தனியான சமஷ்டி ஆட்சியை கோருகிறார்கள்.

 

அந்த உத்தரவாதங்களை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் இப்போது வ/கி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. 1985ல் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு தமிழீழ ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்கள்மீது மேற்கொண்ட அராஜகமான அடாவடித்தனங்களும், வன்முறைகளும் தமிழர்களோடான முஸ்லிம்களின் கூட்டுவாழ்வை பயங்கரப் படுத்தி பிரித்து வைப்பதிலேயே முடிந்தன. கிழக்கில் சுமார் 1500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பல்வேறு தமிழீழ ஆயுதக்குழக்களால் படுகொலை செய்யப்பட்டதும், இனச்சுத்திகரிப்பின் பேரில் சுமார் 60,000 முஸ்லிம்கள் காலத்துக்குக் காலம் கிழக்கில் அகதிகளாக்கப்பட்டதும், கடத்தல், கப்பம், கொள்ளை, வீடுகள் – வியாபாரத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டமை, வணக்க வழிபாட்டுத் தலங்கள் உடைத்து நொறுக்கப்பட்டமை, காணிகளுடன் அம்பாரை மாவட்டத்தில் சுமார் 17,000 ஏக்கர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 29,000 ஏக்கர், திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 17,000 ஏக்கர் என்று முழுக் கிழக்கிலும் சுமார் 63,000 ஏக்கர் விவசாய நிலங்கள் தமிழர்களால் அபகரிக்கப்பட்டமை, இறைவணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டமை என்று எத்தனையோ இழவுச் சம்பவங்களின் பாதிப்புகள் இன்னும் நெஞ்சைவிட்டும் அகலவில்லை. இவற்றில் எந்த ஒன்றையும் எந்த முஸ்லிமாலும் மறக்க முடியவில்லை. முஸ்லிம் தேசியம் எடுக்கப்போகும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான எந்த நிலைப்பாடும் இந்தப் பயங்கரங்களை அலட்சியம் செய்ய முடியாததாக எடுக்கப்படுவது அவர்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும் அனுபவங்களின் அழுத்தத்தின் பேரிலாகும்.

 

இந்த அனாச்சார வெறியாட்டங்களுக்கு சிகரம் வைத்தாற்போல் 1990 ஒக்டோபர் இறுதியில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து நிர்வாக மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்த அத்தனை முஸ்லிம்களும், ஒருவர்கூட மிச்சம் விட்டு வைக்கப்படாமல் 48 மணித்தியால கெடு கொடுத்து தமிழ் தேசியத்தின் செல்லப் பிள்ளைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முழக்கத்தில் முழு வடமாகாணத்தை விட்டும் வெறும் கையராக இனச்சுத்திகரிப்பின் பேரில் விரட்டியடிக்கக்பட்டனர். அந்த முஸ்லிம்களில் 50மூக்கும் அதிகமான முஸ்லிம்கள் இன்னும் வடமாகாணத்தில் தம் வாழ் இடங்களுக்கு திரும்ப முடியாத பெரும் தவிப்போடுதான் இருக்கின்றனர்.

 

முஸ்லிம்கள் மீது புரியப்பட்ட இந்த மூர்க்கத்தனமான பயங்கரங்கள் தான் முஸ்லிம்களை தமது உயிர்களையும், உடமைகளையும், தமது சுயாதீனத்தையும், சுய நிர்ணயத்தையும் பாதுகாத்துக்கொள்ள பிரிந்து செல்லும் அடிப்படைக்கு வித்திட்டன என்பதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ல் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தூரநோக்கோடு முஸ்லிம்களுக்கு அளித்த உத்தரவாதங்களை சிரத்தையோடு பரிசீலனை செய்து அதன் பிரகாரம் தனியான சமஷ்டி ஆட்சி கோரும் முடிவை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டதை தவறு என்று யார்தான் சொல்லக் கூடும்!

 

இணைக்கப்பட்ட வ/கி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தமது பிரதேசங்களில் தமக்கென ஒரு சமஷ்டி ஆட்சிக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு இவைகள் அனைத்தும் காரணங்களாய் அமைந்துள்ளன.

 

மிக அந்நியோன்னியமாக, ஒரே தமிழ்த் தாயின் இரட்டைக் குழந்தைகள்போல தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வந்த அந்தக் காலத்திலேயே, தமிழர் விடுதலைக் கூட்டணியினால் அளிக்கப்பட்ட அந்த உத்தரவாதத்தை முஸ்லிம்கள் அப்போது தூக்கிப்பிடிக்கவுமில்லை. தமிழர்களை விட்டும் பிரிந்து செல்லும் எண்ணத்தை நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

 

ஆனால், இன்று முஸ்லிம்களின் மனநிலையில் எற்பட்டுள்ள காயங்களும், ஊனங்களும், வலியும், வேதனையும் தமிழரசுக் கட்சியின் 1956ன் முஸ்லிம் அரசுக்கான உத்தரவாதத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977ன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளிக்கப்பட்ட விருப்பத்தின் பேரில் முஸ்லிம்கள் பிரிந்து செல்லும் உத்தரவாதத்தையும் சிரத்தையோடு, சிரமேற்கொண்டு பரிசீலிக்கும் தேவைப்பாட்டுக்கு முஸ்லிம்களைத் தள்ளிக்கொண்டு சென்றுள்ளதை இன மத பேதமின்றி எல்லாரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

வ/கி முஸ்லிம்களின் தனித் தேசியத் தன்மையையும், பிரத்தியேக அரசியல் அடையாளத்தையும், சரிகண்டு அவர்கள் முகம்கொடுத்து வந்துள்ள நெருக்கடிகளை சட்ட பூர்வமான முறையில் அரசியல் அமைப்பு திருத்தங்கள் மூலம் நிவர்த்தி செய்துகொள்ள தமக்கான தனி சமஷ்டி ஆட்சியினைக் கோருவது தப்பென்று சொல்ல எந்த நியாயவாதியும் முன்வரமாட்டார். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தமது இந்த அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு வழித்துணையாக தமிழ் தேசியமும் கூட்டுச் சேர்ந்து தனது பங்களிப்பினை திறந்த, விரிந்த மனதோடு செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.
இவற்றிலிருந்து வ/கி முஸ்லிம்களும், வ/கி தழிழர்கள் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு ஈடான சமானமான கோரிக்கையை முன்வைப்பதில் முஸ்லிம் கட்சிகளுக்கோ, முஸ்லிம் எழுச்சி அமைப்புகளுக்கோ எந்த தயக்கமோ, தாமதமோ இனித் தேவையில்லை.

 

தமது உட்கட்சிப் பூசல்களை ஓரம்கட்டிவிட்டு, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை பூரணப்படுத்த முழு மனதோடு முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் வ/கி முஸ்லிம் சமுகத்தின் பெயரால் ஒன்றுபட வேண்டும்.
1957ல் அமரர் செல்வநாயகம் அன்றைய பிரதமர் பண்டார் நாயக்காவோடு வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும், கிழக்குக்கு இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளும் உருவாக்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தம் பின்னர் பண்டார் நாயக்காவினாலேயே செல்லுபடி அற்றதாக்கப்பட்டது.

 

கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்று நம் மத்தியில் இருந்து எழும்பும் சில்லறைக் கோஷத்தினால் அதிக பட்சம் இப்போதுள்ள கிழக்கு மாகாணசபை மட்டத்திலான அதிகாரங்களைத் தான் பெற முடியும்.
ஆனால் அதற்கு முன்னரும், பின்னரும் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் உத்தரவாதமளித்துள் சமஷ்டி ஆட்சி முறையை வ/கி முஸ்லிமகள் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியுமானால், வ/கி முஸ்லிம்களின் தனித்துவத்தையும், பிரத்தியேக அரசியல் அபிலாஷைகளையும் அடைந்து கொள்வதற்கு அது ஏற்ற தீர்வாக இருக்கும்.

 

முஸ்லிம்களுக்கான சமஷ்டி ஆட்சி பெறப்படுமானால் வ/கி முஸ்லிம்கள் அனைவரையும் முஸ்லிம் சமஷ்டி ஆட்சி அதிகாரத்தில் இணைத்து செயற்பட முடியும். அதேவேளை கிழக்கை பிரி என்ற கோஷத்தினால் இப்போது வடக்கில் உள்ள முஸ்லிம்களையும் இன்னும் வடக்கில் தமது வாழிடங்களில் குடியேறி வசிக்கமுடியாது, சிங்கள மொழி மாகாணங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சுமார் 75,000 முஸ்லிம்களையும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாதவர்களாய் அந்தரிக்க வைக்க நேரிடும். அந்த வடக்கு முஸ்லிம்களை வடக்கிலேயே குடியேற்றி வ/கி முஸ்லிம் சமஷ்டி ஆட்சி அதிகாரத்தின் பங்காளிகளாக அவர்களை ஆக்குவதற்கு முஸ்லிம் சமஷ்டி ஆட்சி, அதிகாரத்தினாலேயே முடியும்.

 

தமிழ் தேசியத்தால் 1956லும், 1977லும் முன்வைக்கப்பட்ட சுயாட்சி தமிழரசுக்கும் சுயாட்சி முஸ்லிம் அரசுக்கும் ஆதரவளிப்பதனால் வஃகி முஸ்லிம்களும், தமிழர்களும் அடையக்கூடிய நன்மைகளும், அந்தஸ்தும் அதிகமாக இருக்கும்.

 

இந்த ஏற்பாடுகளை தமிழ் தேசியத்துக்கு முஸ்லிம் தேசியம் அறிவித்து இரு தேசியங்களும் ஒன்றிணைந்து மேற்சொன்னவாறான தீர்வுத்திட்டத்தை முன்வைத்து தத்தம் தனியானதும், கூட்டானதுமான அபிலாஷைகளை அடைவதே சிறந்த ஏற்பாடாக இருக்கும்.

 

இந்த ஏற்பாட்டுக்கு தமிழ் தேசியம் இணங்க மறுத்து, தாம் முஸ்லிம்களுக்கு 1956லும், 1977லும் எழுத்து வடிவில் அளித்த உத்தரவாதங்களை கைகழுவி விடுமாக இருந்தால் அதற்குப் பின்னர் அவர்களோடு இணைந்து செயற்பட எண்ணுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.
அதன்பின்னர் முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முஸ்லிம்கள் தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.

வ/கி தமிழ் மாநிலத்தில், மொத்த வ/கி முஸ்லிம்களின் உரிமைகளை உள்ளடக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் வெற்றுக் கோஷமாகவே இருக்கும். முஸ்லிம்கள் மட்டுமல்லது தமிழர்களும் சிந்தித்து செயற்பட்டு தமிழ் மாநிலத்தில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை சீர் செய்து கொள்ள தம்மால் ஆன விட்டுக்கொடுப்புகளையும், தியாகங்களையும் செய்ய முன்வரவேண்டும்| என்றும் கூறினார்.