வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இயங்கும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றி!

விண்ணில் உள்ள காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. 
rocket-jurvetson
’ஸ்கிராம்ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் என்ஜினை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர். 

3 ஆயிரம் கிலோ எடையுடன் கொண்ட இந்த ராக்கெட் என்ஜினில் 7 வினாடிகளில் திரவ ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எரியூட்டப்பட்டு நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். 

வழக்கமாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக  ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும். 

’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும் என்பதால், ராக்கெட்டில் ஆக்சிஜனை அடைத்து அனுப்பும் எடைக்கு பதிலாக கூடுதலாக விண்கலங்களை பொருத்தி அனுப்ப முடியும், இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிவரும் நிலையில், இன்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. 

இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது நாடு என்ற பெருமையை இன்றைய சோதனையின் மூலம் இந்தியா எய்தியுள்ளது.