ஆப்கானிஸ்தான் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டோர் அரண்மனையை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் காஸ்ரே-ஸ்டோர் என்ற பழங்கால அரண்மனை உள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை ஒட்டியுள்ள இந்த அரண்மனையில்தான் ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை அளித்த ராவல்பிண்டி உடன்படிக்கை கையொப்பமாகியது.
உள்நாட்டுப் போருக்கு பிறகு பாடாவதியாகப் போயிருந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையை புதுப்பிக்க இந்தியா முன்வந்தது. அதன்படி, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் காஸ்ரே-ஸ்டோர் அரண்மனையை அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கானியுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவின்போது, டெல்லியில் இருந்தவாறு ஆப்கானிஸ்தான் மக்களிடையே வீடியோ மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானை இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடு என்றும், இருநாட்டு மக்களுக்கு இடையில் பல்லாண்டுகால பழைமைவாய்ந்த தொடர்புகளும், உறவுகளும் இருப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர்களை எதிர்கொண்டு போராடி, இந்திய தூதரகத்தையும், அங்குள்ள இந்தியர்களையும் காப்பாற்றிய ஆப்கானிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்துகொண்ட மோடி, எத்தனை தடைகள் ஏற்படினும், ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இந்தியா பாடுபடும் எனவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமைதியும் நிரந்தரத்தன்மையும், வளமையும் பெருக இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களும் உறுதுணையாக இருப்பார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.