அதிரடி வேட்டையொன்று நடைபெற்றுள்ளது… நுகேகொடை உள்ளிட்ட நாட்டின் மூன்று பிரதேசங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் கூட்டங்கள்…. ஹைட்பார்க் கூட்டம் மற்றும் கண்டியிலிருந்து கொழும்புக்கான பாதயாத்திரை… இவற்றின்போது இடம்பெறாத அதிரடி வேட்டையொன்றை தற்போது நடந்தேறியுள்ளது. ஒருசிலர் இவ்வாறு அதிரடியாக சில விடயங்கள் நடைபெறும் என எதிர்பார்த்திருந்தபோதும் தற்போது பெரும்பாலானோர் எதிர்பார்க்காத வகையில் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக 40 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 40 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமை ஒருபெரிய விவகாரமே அல்ல. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு தற்போது கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 13 பேரின் அமைப்பாளர் பதவிகள் ஜனாதிபதியினால் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவே தற்போது நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 40 புதிய அமைப்பாளர்களும் சுதந்திரக்கட்சிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, புதிய மாவட்ட அமைப்பாளர்களாக 24 பேரும் தொகுதி அமைப்பாளர்களாக 16 பேருமே இவ்வாறு ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். விசேடமாக கூட்டு எதிர்க் கட்சியில் செயற்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாரச்சி,ரோஹித அபேகுணவர்தன, சீ.பீ. ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜகத் பாலசூரிய, காமினி லொக்குகே மற்றும் சரத்குமார உள்ளிட்டவர்களின் அமைப்பாளர் பதவிகள் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது சம்மேளனம் குருநாகல் நகரில் இடம்பெறவுள்ளது. இதற்கான தயார் படுத்தல்களில் சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டு குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வந்த நிலையில், மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவளித்துவரும் முக்கியஸ்தர்கள் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளமையானது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது. அதாவது மஹிந்த அணியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுத்தமையானது எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது நாட்டின் பழம்பெரும் கட்சி என்பதுடன் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டை நிர்வகித்ததில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்நிலையில் இக் கட்சி அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் வீழ்ச்சிகளையும் வளர்ச்சிகளையும் கண்டு வந்துள்ளது. குறிப்பாக 1977 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது மிகவும் வீழ்ச்சியான நிலைமைக்கு சென்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற்றுக் கொள்ளமுடியாத நிலைமைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தள்ளப்பட்டது. அதனையடுத்து 17 வருட போராட்டங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு அறுதிப் பெரும்பான்மையின்றி பல்வேறு கூட்டணிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு சுதந்திரக் கட்சி பதவிக்கு வந்தது. இந்நிலையில் தற்போது சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ளபோதிலும் பலமான நிலையில் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். கடந்த தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றிபெறவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முக்கியஸ்தர்கள் பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை கட்சி என்ற ரீதியில் சுந்திரக் கட்சிக்கு குறிப்பிடத்தக்களவு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாடு என்ற ரீதியிலும் எதிர்கால முன்னேற்றம் என்ற வகையிலும் பார்க்கும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று கூற முடியும். அதாவது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக பதவி வகித்த வண்ணம் கூட்டு எதிரணியில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து விதமான செயற்பாடுகளையும் எதிர்த்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இவ்வாறு 13 பேரை பதவி நீக்கம் செய்திருக்கின்றார். அதாவது ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் தனது நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் அதன்பின்னரே கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அடிக்கடி கூறிவருகின்றார். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார் என்பதை ஊகிக்க முடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள கூட்டு எதிரணியானது அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்து வருகின்றது. குறிப்பாக அரசாங்கத்தினால் நிறுவப்படவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகத்தை கூட்டு எதிரணியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எதிர்கால நல்லிணக்கத்தில் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் இந்த காணாமல் போனோர் குறித்த அலுவலகமானது ஒரு சில தரப்பினரால் எதிர்ப்புக்குட்படுவது கவலைக்குரியதாகும். அதுவும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் உருவாக்குவேன் என்று சபதமிட்டு பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறு கூட்டு எதிரணியினர் காணாமல் போனோர் அலுவலகத்தை எதிர்க்கின்றமை கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அதிரடி பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் கட்சிக்கு ஒருவித தாக்கம் ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாக்கம் ஏற்படும் என்பதுடன் மறுபுறம் பதவி விலக்கப்பட்ட 13 பேருக்கும் இது சடுதியான வீழ்ச்சி என்றே கூற முடியும். சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னதான் பிரபலமானவர்களாக இருந்தாலும் சுதந்திர கட்சி என்ற தலைப்பின் காரணமாகவே அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மஹிந்த அணியினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகின்றார்களா என்பது தற்போது பரவலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக மஹிந்த அணியினரும் அவ்வப்போது தகவல்களை கசியவிட்ட வண்ணமுள்ளனர். பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மஹிந்த அணியினர் புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகின்றனர் போன்ற தோற்றப்பாடுகள் வெளிக்காட்டப்பட்டு வந்த போதிலும் இறுதியில் அந்த முயற்சிகள் பின்வாங்கப்பட்டன. எவ்வாறாயினும் எமது நாட்.டில் புதிய கட்சிகளை ஆரம்பித்து வெற்றிபெறும் வரலாறானது மிகவும் அரிதாகவே பதிவாகியுள்ளது. பிரேமதாச காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சில முக்கியஸ்தர்கள் விலகி புதிய கட்சியை ஆரம்பித்தனர். காலப்போக்கில் அந்த கட்சி காணாமல் போனது. 2007 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய மங்கள சமரவீர புதிய கட்சியை ஆரம்பித்தார். ஆனால் இறுதியில் அதனை விட்டுவிட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார். இவ்வாறு பிரதான கட்சிகளிலிருந்து விலகி புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் செயற்பாடானது அந்தளவு வெற்றிகரமானது என கூறமுடியாது. ஆனாலும் மஹிந்த அணியினர் எவ்வாறு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும் மற்றுமொரு கோணமும் இங்கு இருக்கின்றது. அதாவது இவ்வாறு அதிரடியாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமையானது இவர்களை மைத்திரி தரப்பினர் தம்பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சியாகவும் இருக்கலாம். அதாவது சுதந்திரக் கட்சி இல்லாவிடின் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதனை உணர்ந்து பதவி நீக்கத்தை அடுத்து பதவி நீக்கப்பட்டவர்கள் மஹிந்த அணியை கைவிட்டு மைத்திரி அணியின் பக்கம் செல்வதற்கான சாத்தியங்களும் இல்லாமல் இல்லை. எவ்வாறெனினும் இந்த விடயங்கள் தூரநோக்கின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டியவையாகும். அடுத்த அடுத்த அரசியல் நகர்வுகள் இவற்றுக்கான விடையை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இதேவேளை இது தொடர்பில் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான கெஹெலிய ரம்புக்வெல கீழ்க்கண்டவாறு கூறுகிறார். அதாவது “”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனவே தற்போது எவ்விதமான தயக்கமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் சர்வதேச அடிமைத்தனத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து நீதிகோரலாம். சுதந்திர கட்சியின் அரசியல் ரீதியிலான பழிவாங்கல் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் தீர்மானம் எடுப்போம். கட்சியில் இருந்து நீக்கினாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை. கூட்டு எதிர்க்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் அமைப்பாளர்கள் பதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். ஏனெனில் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வலுவாகவும் வெளிப்படையாகவும் செயற்பட முடியும். குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச அடிமைப்போக்கை எதிர்த்து செயற்பட முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட மூலத்தை நிறைவேற்றி அலுவலகத்தை ஸ்தாபித்து இராணுவத்தை சர்வதேசத்திற்கு பலியாக்க அரசாங்கம் முற்படுகின்றது. அமெரிக்கா மற்றும் நோர்வே உள்ளிட்ட மேற்குலக சக்திகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகின்றன. இவற்றுக்கு எதிராக இனி கடுமையாக செயற்பட முடியும் . முன்பு கட்சி அமைப்பாளர் பதவிகளில் இருந்தமையினால் சில கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டோம். தற்போது அந்த நிலை இல்லை. எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கூடி எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளோம். இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும்”” என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் நகர்வுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியிலிருந்து பரபரப்பாகவே காணப்படுகின்றன. மஹிந்த அணியினரும் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிரான போக்கை கடைப்பிடித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருட காலமாக கட்சியின் விடயத்தில் பொறுமையாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 13 பேரை தற்போது அதிரடியாக நீக்கியுள்ளமையானது எதிர்வரும் காலங்களில் அரசியல் சூழல் சூடு பிடிக்கும் என்பதனையே கோடிட்டுக்காட்டுகின்றது. |