3 மாதங்கள் செல்போனை துறந்து நாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுதந்த வீராங்கனை சிந்து

CqPAMpcUkAA4KCc

ரியோ ஒலிம்பிக் போட்டியில் கடுமையாக போராடி மகளிர் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, இந்த சாதனையை படைக்க 3 மாதங்கள்வரை செல்போனை துறந்தும், தனக்கு பிடித்தமான இனிப்பு தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தியாகம் செய்தும், வெற்றிக்காக தவம் கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம் இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. இவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான்.

விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். 

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார். 2-வது மகள் தான் பி.வி.சிந்து. சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்குப் பட தயாரிப்பாளர்.

Sindhu-PTI_5
சிறுவயதில் பயிற்சிக்காக சிந்துவை உள்விளையாட்டு அரங்குக்கு அவரது பெற்றோர் அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவின் மனதில் கைப்பந்து மீது நாட்டம் ஏற்படவில்லை. அதே உள்விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த பேட்மிண்டன் தான் அவரை கவர்ந்தது. அது முதல் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து சும்மா விளையாடிக் கொண்டிருப்பார். 

2001-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை இந்திய வீரர் கோபிசந்த் கைப்பற்றிய போது, வெகுவாக ஈர்க்கப்பட்ட சிந்து, ‘இனி பேட்மிண்டன் தான் வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வந்தார்.

‘நம்மை போன்றே கைப்பந்து நட்சத்திரமாக உருவாக வேண்டும்’ என்று அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர். 

சிந்து பேட்மிண்டன் ஆடத் தொடங்கிய போது அவரது வயது 8½. பேட்மிண்டனில் தனி கவனம் செலுத்த கோபிசந்தின் பயிற்சி அகாடமியில் சேர்த்து விட்டனர். அப்போது செகந்திரபாத்தில் வசித்ததால் பயிற்சி மையத்திற்கு வருவதற்கு தினமும் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. சிந்துவின் அலைச்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது பெற்றோர் பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதிக்கு தங்கள் வீட்டை மாற்றி கொண்டனர்.

Badminton - Olympics: Day 14
கோபிசந்தின் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட சிந்து, படிப்படியாக பேட்மிண்டன் விளையாட்டுசார்ந்த தொழில்நுட்பங்களை கற்றார். பள்ளி, ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தார்.

சிந்துவின் முன்மாதிரி, பிடித்த பேட்மிண்டன் வீரர் எல்லாமே கோபிசந்த்தான். அவரது வார்த்தெடுப்பில் கச்சிதமான ஒரு பேட்மிண்டன் மங்கையாக 2011-ம் ஆண்டில் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலமும், காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கத்தை பெற்றார்.

எனினும், 2013-ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மிண்டனில் வெண்கலத்தை வென்ற போதுதான் விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக சிந்துவின் பக்கம் திரும்பியது. உலக பேட்மிண்டனில் முத்திரை பதித்த முதல் இந்திய வீராங்கனையாக மின்னினார்.

2014-ம் ஆண்டு மீண்டும் உலக பேட்மிண்டனில் வாகை சூடி, இந்த போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற மகத்தான சாதனையை மேலும் அழுத்தமாக பதிய வைத்தார். இந்தோனேஷிய போட்டி, மலேசிய மாஸ்டர்ஸ், மக்காவ் ஓபன் ஆகிய சர்வதேச தொடர்களிலும் பட்டம் வென்று அசத்தினார்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ரியோ ஒலிம்பிக் பதக்கம் அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்தின் கனவையும் நனவாக்கி இருக்கிறார்.

தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி, சர்க்கரை கலந்த தயிர், ஐஸ் கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம். 

ஆனால், தனக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றை எல்லாம் தீவிர பயிற்சிக்காக தியாகம் செய்ததுடன், சுமார் மூன்று மாத காலம் தனது கைபேசியை கூட பயன்படுத்தாமல் ஒலிம்பிக் பதக்கத்துக்காக அவர் வாழ்ந்த ‘தவ வாழ்வு’ பற்றி அவரது பயிற்சியாளரான கோபிசந்த் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ரியோ டி ஜெனீரோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோபிசந்த கூறியதாவது:-

ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு தேர்வுபெற்று பதக்கம் அளிக்கும் மேடையில் நிற்கும் வாய்ப்பு நூறு கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாகும். எங்கள்மீது நம்பிக்கை வைத்து, வெற்றிப் பயணத்தை நோக்கி எங்களை வழிநடத்திச் செல்ல ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி.

தற்போது, எண்ணிய காரியத்தை முடித்து விட்டதால் சிந்து இனி 21 வயது இளம்பெண்ணுக்குண்டான வழக்கமான செயல்களை தொடரலாம். தனது தோழிகளுடன் வாட்ஸ்அப்பில் உரையாடலாம், பிடித்தமான ஐஸ் கிரீமை அவர் சாப்பிடலாம்.

கடந்த மூன்று மாதங்களாக சிந்து தனது செல்போனை பயன்படுத்தவே இல்லை. முதல்வேலையாக அவரது செல்போனை சிந்துவிடம் திருப்பி அளிக்கப் போகிறேன். இரண்டாவதாக இங்குவந்து 12-13 நாட்களாக அவருக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை கலந்த இனிப்பு தயிர் சாப்பிடுவதையும் நான் தடுத்து வைத்திருந்தேன், அதேபோல் ஐஸ் கிரீம் சாப்பிடவும் தடை விதித்திருந்தேன். இனி, அவர் விரும்பியவற்றை எல்லாம் சாப்பிடலாம்.

கடந்த இரண்டு மாதங்களாக சிந்து செய்துவந்த பயிற்சிகள் அபாரமானவை. குறிப்பாக, கடந்தவாரம் அவரது ஆட்டத்தில் அதிகமான உத்வேகம் வெளிப்பட்டது. மிகவும் அனுபவித்தும், தனது பொறுப்பை உணர்ந்தும் தன்னிடம் உள்ள திறமையை எல்லாம் அவர் வெளிப்படுத்தினார். சிந்துவிடம் இதைதான் நான் எதிர்பார்த்தேன். அந்த வகையில் ஒரு பயிற்சியாளராக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சிந்து மிகவும் இளம்பெண்ணாக உள்ளார். இந்த போட்டியின்போது அவரிடம் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மென்மேலும் வளரக்கூடிய ஆற்றலும் அவரிடம் உள்ளது. நாட்டுக்கு பதக்கம் வாங்கி தந்ததன் மூலம் நம்மை எல்லாம் அவர் பெருமைப்படுத்தியுள்ளார்,

இழந்த தங்கப் பதக்கத்தை பற்றி நினைக்காமல், வென்ற வெள்ளிப் பதக்கத்தை நினைத்து பெருமைப்படும்படியும், இந்த இரண்டாவது இடத்தை பிடிக்க கடந்தவாரம் செய்த கடுமையான பயிற்சியை எண்ணிப் பார்க்கும்படியும் சிந்துவிடம் நான் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.