காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு : இந்தியா நிராகரிப்பு

காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது. 

காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பது என்பது சர்வதேச கடமை என்று கூறிய பாகிஸ்தான் கடந்த திங்கள் கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு அழைப்பும் விடுத்தது. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஆலோசகர்   அய்ஸ்வாஸ் அகமது சவுத்ரியின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ள வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், இஸ்லமாபாத் செல்ல தயாராக இருப்பதாகவும், அங்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஊடுருவல் குறித்து பேச தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிலை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பவாலே பாகிஸ்தானிடம் அளித்துள்ளார்.