முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்காக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி செய்துள்ளதாக, நேற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வௌியிட்டார்.
இந்த அபகீர்த்தியான கருத்துக்கு எதிராகவே இவ்வாறு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து தான் கோட்டாபயவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கம்மன்பில கூறியுள்ளார்.
அத்துடன், எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அந்த குற்றத்தை கோட்டாபயவின் மீது சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட வேளை, இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறிய விக்ரமபாகு கருணாரத்னவைக் கைதுசெய்ய வேண்டும் எனவும், உதய கம்மன்பில இதன்போது மேலும் கருத்து வௌியிட்டுள்ளார்.