பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள்: ஜனாதிபதி

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
President-Maithripala-Sirisena5
நேற்று இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன. 

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டால், அதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்படுவார்களென்று சிலர் குற்றச்சாட்டினர். 

அதனை நிராகரித்த ஜனாதிபதி சிறிசேன இறுதி கட்ட போரின் போது, காணாமல் போயுள்ள நபர்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு மாத்திரம் இந்த அலுவலகம் அமைக்கப்படவில்லை என்று தெரிவித்தார். 

யுத்தத்தின் போது, 5000-க்கும் மேற்பட்ட அரசு பாதுகாப்பு படையினர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகத்துறையினர் பலர் கடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார். 

அதேபோல், 1988 -1989-இல் நடைப்பெற்ற கலவரங்களின் போது, ஆயிரக்கணக்கான தனது அங்கத்தவர்கள் காணாமல் போயுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

எனவே, இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிரந்தர அலுவலகமொன்று அவசியமென்று ஜனாதிபதி கூறினார். 

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்திவரும் நபர்கள், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார். 

(பிபிசி)