வறுமை மற்றும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து பொருளாதாரத்தை வலுவடையச் செய்ய வேண்டும் : ஜனாதிபதி

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டி புத்தி மண்டபத்தில் இன்று (11) முற்பகல் நடைபெற்ற மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வறுமை மற்றும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து, அவர்களது பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் ஊடாக விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்த சகல நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ரஜரட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இன்று மொராஹாகந்த – களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,  புதிய திட்டமிடல் மற்றும் வேலைத்திட்டத்தினூடாக மகாவலி வலயங்களில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி விவசாயப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.