சவூதி அரேபிய அரசாங்கம் தனது நாட்டுக்கான வீசா கட்டணங்களை மீள் நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய புனித ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக முதல் தடவையாக செல்வோருக்கு மாத்திரம் வீசா கட்டணம் இலவசமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் அல்லது உம்ரா கடமைக்கு செல்வோர்
ஒரு தடவைக்கு 2000 சவூதி ரியால்களை (78,000 ரூபா) வீசா கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெவ்வேறு தேவைகளுக்காக பல தடவைகள் சவூதியினுள் பிரவேசிப்பவர்களுக்கான வீசா கட்டணம் ஆறு மாதங்களுக்கு 3000 சவூதி ரியால்களாகவும் ஒரு வருடத்திற்கு 5000 சவூதி ரியால்களாகவும் இரண்டு வருடங்களுக்கு 8000 சவூதி ரியால்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற சவூதி அரேபியாவின் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் முஹர்ரம் மாதம் (2016 ஒக்டோபர் 02) முதல் மேற்படி மீளமைக்கப்பட்ட வீசா கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், எண்ணெய் வர்த்தகத்துக்கு அப்பாலான வருமானமீட்டும் வழிமுறைகள் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.
இதற்கமைவாகவே சவூதியின் நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சின் சிபாரிசுகளுக்கமைவாக அமைச்சரவை மேற்படி தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை வீதி ஒழுங்குகளை மீறும் வாகன சாரதிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பண தொகையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.