காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? – எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

கடந்த மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 2 போலீஸ்காரர்கள் உட்பட 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இதனால் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த காஷ்மீரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 3௦ நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரச்சினை இன்று மாநிலங்களவையிலும எதிரொலித்தது. பூஜ்ய நேரத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், “காஷ்மீரில் நிலவும் பிரச்சினை தொடர்பாக பிரதமர் தொடர்ந்து மவுனம் காத்து வருவது ஏன்? இந்தியாவின் கிரீடமான காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதன் வெப்பம் இன்னும் டெல்லியை எட்டவில்லை. 

காஷ்மீரில் நிலவும் வன்முறை தொடர்பாக 1௦௦௦-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு இதனை வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் கருதாமல் தேவையான நடவடிக்கைளை எடுக்கவும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக்கூட்டி காஷ்மீர் பிரச்சினைக்கு தகுந்த தீர்வைக் காணவும் பிரதமர் முன்வரவேண்டும்” என வலியுறுத்தினார். 

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி பேசும்போது, ‘காஷ்மீரில் நிலவும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் 8000க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமும், 60 பேர் மரணமும் அடைந்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்ற ரீதியில் மட்டும் இதற்குத் தீர்வு காண முடியாது. மக்கள் பிரதிநிதிகளை காஷ்மீருக்கு அனுப்பி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’ என்று வலியுறுத்தினார். 

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.