12-07-1990 மக்கா புனித யாத்திரைக்கு சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக்கொண்டிருந்த யாத்திரீயகர்கள் அறுபத்தெட்டுப்() பேர் குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு பின்னர் அவர்களாலேயே புதைக்கப்பட்டமை.
03-08-01990 காத்தான்குடி மீரா ஜூம்மா பள்ளிவாசலிலும் ஹூசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலை புலிகளினால் சரமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
ஏறாவுரை அண்டிய ஐயங்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டோர் தொகை 116 ஆகும்.
வடக்கில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டிருந்த பத்தாயிரம் குடும்பங்கள் 24 மணிநேர அவகாசத்தில் தெற்கு நோக்கி புலிகளால் துரத்தியடிக்கப்பட்டனர். அதனையொட்டி ஏற்பட்ட நேரடி சடத்துவ இழப்புகள் பின்வருமாறு.
128 பள்ளிவாசல்கள்
26 புனித பிரதேசங்கள்
189 அரபு மதரசாக்கள்
65 அரசாங்க பாடசாலைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்
1400 வர்த்தக கைத்தொழில் நிலையங்கள்
15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள்
மேற்கண்ட வகைகளில் 1990 ம் ஆண்டுதான் தமிழ் – முஸ்லிம் இனமுரண்பாடுகள் மிக மோசமான அளவில் கூர்மையடைவதை காணலாம். ஒரே நோக்கில் ஒரே தேசியத்தில் ஐக்கியமாகியிருந்த இரு சமூகங்கள் ஒன்றுகொன்று எதிர் எதிராக நிறுத்தப்படுவதற்கும் அதுவரை இருந்துவந்த தேசிய ஒற்றுமையில் மாறாத பங்கம் ஏற்படுவதற்கும் புலிகளது இந்த இனமேலாதிக்க அணுகுமுறைகளே காரணமாயமைந்தன. தமிழீழ கோரிக்கையானது தீவிரவாத நடைமுறைகளினூடு செயல்வடிவம் பெற்ற காலத்திலிருந்தே தமிழர்களுக்குள்ளேயே ஒரு சிறுபான்மை தமிழர்களாக முஸ்லிம்களை பணியவைத்து நடத்துகின்ற முனைப்புகள் அடையாளம் காணப்பட்டன. உதாரணமாக 1985 ம் ஆண்டு கல்முனையையும், வாழைச்சேனையையும் அண்மித்த கிராமங்களில் ஏற்பட்ட தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடை முறுகல் நிலைகள் பெரும் கலவரம் ஒன்றையும் தோற்றுவித்தது. எனினும் அதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தியிருக்கவில்லை. மீண்டும் சமாதானம், சமூக நல்லிணக்கம், பரஸ்பர வாழ்வு நிலைகளை பாதுகாத்தல் என்பதாக மீள இயல்புநிலை உயிர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 1990ல் புலிகளது பாஸிஸ நடவடிக்கைகள்தான் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் மாறாத வடுக்களை ஏற்படுத்தி முடித்தது. இதற்கு இருவகை காரணங்கள் இருந்தன.
1) அதுவரை காலமும் அல்லது 1985ல் ஏற்பட்ட சிறுசிறு சமூகபிரச்சனைகள் கலவரமாகியது போலன்றி 1990 ம் ஆண்டு சம்பவங்கள் முன்திட்டமிடப்பட்ட வகையில் ஒரு இராணுவ நடவடிக்கைகளாக நடத்தி முடிக்கப்பட்டமை.
2) பழைய கலவரங்களை போலன்றி மிகப்பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் இத்தாக்குதல்கள் ஏற்படுத்தியமை.
இந்த 1990 இன் பின்னர்தான் தமிழ் தரப்பின்மீது முஸ்லிம்களுக்கு நிரந்தரமான ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டதெனலாம். இத்தகைய திட்டமிடப்பட்ட வகையிலான மாபெரும் அழித்தொழிப்புகள் தமது இருப்பை கேள்விக்குள்ளாக்கியதை அவர்கள் உணர தொடங்கியதும் இவ்வாண்டில்தான்.
சில வரலாற்றுக் குறிப்புகள்
*****************************************
இலங்கையினுடைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருபவர்களில் சுமார் 17 வீதமானவர்கள் முஸ்லிம்களாகும். தொன்மையான வரலாற்றை கொண்ட இவர்கள் சுமார் கி.முன் 4ம் நூற்றாண்டுகளிலிருந்து இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள். தங்களை தமிழர்களாகவே எண்ணி வாழ்ந்து வந்த இவர்கள் தமது மத அடிப்படையில் ஏனைய தமிழர்களிடமிருந்து தமக்கான தனித்துவ கலாசார அம்சங்களில் வேறுபட்டும் நிற்கின்றனர். எனினும் அண்மைய பல நூற்றாண்டு காலமாக மதத்தினடிப்படையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகள் அகிம்சை அடிப்படையிலான போராட்ட வடிவங்களாக முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் முஸ்லிம்களும் தமது பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். 1956 ம் ஆண்டு சிங்கள மொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அது தமிழுக்கும் உரிய அந்தஸ்தை வழங்க தவறிவிட்டமையை கண்டித்து ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறியவர் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்கள் ஆகும். 1960 ம் ஆண்டு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சத்தியாகிரகத்தின் போது நூற்றுகணக்கான முஸ்லிம்களும் அதில்கலந்து கொண்டு சிறையை நிரப்பினர். இதில் முன்னணி வகித்து தமிழரசுக்கட்சியின் பிரச்சார பீரங்கிகளாக மசூர் மௌலானா, எருக்கலம்பி;ட்டி கே.எஸ்.ஏ.கபூர் போன்றோர் திகழ்ந்தனர். 1977 தமிழீழத்துக்கான ஆணை கேட்டபோது கூட கல்முனை தொகுதியில் த.வி.கூட்டணி சார்பில் போட்டியிட்ட சம்சுதின் எனும் இஸ்லாமிய தமிழரேயாவார். இதேவேளை தமிழர்களிடத்திலும் பலவகை கட்சிகள் பலவகை கொள்கையடிப்படையிலான அமைப்புக்கள் இயங்கியது போல முஸ்லிம்கள் தரப்பிலும் வேறு ஒரு சில தேசிய கட்சிகளும், அமைப்புகளும் இடம்பிடித்திருந்தன என்பதுவும் உண்மைதான்.
ஆனாலும் வடகிழக்கு முஸ்லிம்களை பொறுத்தவரையில் தமிழீழமானது அவர்களுக்கும் உரியது என்றே நம்பியிருந்தனர். இதன்காரணமாகவே 1977 தேர்தலை தொடர்ந்தும் 1983 கலவரத்தினை தொடர்ந்தும் வடகிழக்கு பகுதிகளில் உருவாகிய ஆயுத போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்துகொண்டனர். கிழக்கிலங்கையிலுள்ள அம்பாறை மாவட்டத்தில் பெருந்தொகையாக முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளாய் காணப்பட்டனர்.
மேற்படியான நிலைமைகளை முதலாவதாக சீர்குலைத்தது 1985 இல் ஏற்பட்ட கலவரத்தினை தொடர்ந்து ஏற்பட்டது. அதன்பிறகு குறிப்பாக கிழக்குமாகாணத்தை அடிப்படையாக கொண்டு தமிழ் – முஸ்லிம் கசப்புணர்வுகளும் வளரத்தொடங்கியது. இருந்த போதிலும் இன்னுமொரு புறத்தில் முஸ்லிம்கள் தமது தனித்துவ அரசியலின் அவசியம் குறித்து உணரத் தொடங்கிய அறிகுறிகளும் தென்பட்டன. இப்படியான தனித்துவ அரசியல் குறித்து ஒரு சிறுபான்மை சமூகம் உணர தொடங்குகின்றது எனின் அது தன்மீது குறித்த ஒரு சமூக பிரிவு என்பதற்காக எங்கோயிருந்து நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது அர்த்தமாகும். இப்படியான நெருக்கடிகளையும் ஓரவஞ்சகங்களையும் ஆயுதம் தாங்கியிருந்த எல்லாவித இயக்கங்களும் தத்தம்பங்கிற்கு முஸ்லிம்கள் மேற்கொண்டும் வந்திருந்தன என்பது உண்மையாகும் (விரிவஞ்சி அவற்றை இங்கு தவிர்த்து கொள்கின்றேன். பின்னர் அவைகளை ஒரு பகுதியாக பதிவிடலாம் 🙂 )
அதேவேளை 1970 – 77 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் முகமட் அவர்களின் பதவிக்காலமானது முஸ்லிம்கள் அதிகளவில் கல்வியின் அவசியத்தை உணர தொடங்கிய காலகட்டமாகும். வழமைக்கு மாறாக ஆரம்பக்கல்வியில் பெருமளவிலான முஸ்லிம்கள் இணைந்துகொள்ள அவர் ஊக்கமளித்தார். இந்த காலகட்டத்தில் இருந்து உருவான கல்வி மறுமலர்ச்சியானது சுமார் 10 ஆண்டுகளை கடந்த வேளை மிகபெரியதொரு இளைஞர் குழாமை 1980 களின் இறுதிபகுதிகளில் சமூக விழிப்பு கொண்டோராய் உருவாக்கியிருந்தது. இதேபோன்று 1977 ன் பின் ஆட்சிக்கு வந்த யு.என்.பி. அரசு நிலத்தினை அடிப்படையாக கொண்ட விவசாயத்துறையை விடுத்து திறந்த பொருளாதார கொள்கைக்கு வழிவகுத்தமையினால் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் வியாபாரம், போக்குவரத்து போன்றவற்றில் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு சமனாக வளர்ச்சி கொள்ள தொடங்கினர். விவசாயத்தை விடுத்த ஒரு மத்தியதரவர்க்கம் கிழக்கை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களிடையே உருவாகியிருந்தது. இதன்காரணமாகத்தான் தமது இனம்சார்ந்து கலை, கலாச்சாரம், பண்பாடு தளங்களில் மட்டுமல்ல பொருளாதாரம், அரசியல் தளங்களிலும் ஒரு விழிப்பும், வீச்சையும் நோக்கி முஸ்லிம்கள் உந்தப்படனர். இதுபோன்ற வளர்ச்சி கட்டத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே 1986 இல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பரிணாமம் எடுத்தது.
1987இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்ததில் முஸ்லிம்களை ஓரங்கட்டியமை முஸ்லிம் தலைமைகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த ஒப்பந்தமானது முஸ்லிம்களை ஒரு மூன்றாம் தர பிரசைகளாக கணித்தமையானது தமிழ் தலைமைகள் விட்ட ஒரு மாபெரும் வரலாற்று குற்றமாகும் எனும் ஆவேசம் முஸ்லிம்களிடையே பரவியிருந்ததை அவ்வேளை காணக்கூடியதாய் இருந்தது.
1988 இல் நடைபெற்ற வடக்கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் சி.மு.காங்கிரஸ் முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக உறுதிப்படுத்தி சுயநிர்ணய உரிமை, பாரம்பரிய தாயகம் போன்ற அம்சங்களோடு பிரச்சாரத்தில் இறங்கியது. தனிமாகாணக் கோரிக்கையை கோரும் ஆணையை வழங்குமாறு மக்களிடம் கேட்டே சி.மு.காங்கிரஸ் களமிறங்கியது.
அதேபோன்று அந்தத் தேர்தலினூடு ஒரு நிராகரிக்க முடியாத சக்தியாக சி.மு.காங்கிரஸ் உருவாகியது. பல்வேறுபட்ட சமூகக் குழுக்களை உள்ளடக்கிய தேசிய இனப்போராட்டம் ஒன்றில் அவை ஒவ்வொன்றினதும் தனித்துவங்கள் எவ்வாறு கவனிக்கப்பட வேண்டும், அவை எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்கின்ற விடயங்களில் தமிழ் இயக்கங்களிடமிருந்த அரசியல் ரீதியான போதாமையே சி.மு.காங்கிரசின் வளர்ச்சியை ஊக்குவித்ததை அவதானிக்கலாம்.
தமிழ் பேசும் சமூகத்துக்குள்ளேயே இருக்கக் கூடிய சிறுபான்மையினமான முஸ்லிம்கள் தமிழீழக் கோரிக்கையை விடுத்து வெளியேறிச் செல்ல முனைகின்ற இப்போக்கினை அரசியல் ரீதியாக அணுகமுடியாத புலிகள் தமது இராணுவ கண்ணோட்டத்திலேயே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றனர். இதன் ;பலாபலன்களாகவே முஸ்லிம்கள் மீதான துரத்தியடிப்பும், படுகொலைகளும் நிகழக் காரணமாயிற்று. ஆனால் புலிகள் நினைத்ததற்கு மாறாக முஸ்லிம்களுக்கான தனித்துவ கோரிக்கைகள் மென்மேலும் வலுப்பெற்றது.
இந்த அடக்குமுறைகளின் அடுத்தகட்டமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் தென்கிழக்கு மாகாணம் என்று தமக்கான ஒரு தேசத்தைக் கட்டமைப்பதில் மிக மும்முரமாக ஈடுபட்டன. பல இடங்களிலும், பல சந்தர்ப்பங்களிலும் மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களது பேச்சும் செயலும் இனபிளவுகளை ஆழப்படுத்துவதாகவே தமிழ் ஊடகங்கள் எழுதித்தள்ளின. அதற்கேற்றாப்போல் ஊர் காவல் படையென்னும் பெயரில் இலங்கையுடைய இராணுவ உளவுத் துறையினரால் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளாக பல்வித இயக்கங்களிலும் இருந்த முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து ஜிகாத் எனும் அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பானது தமது சமூகத்திற்கான பாதுகாப்பிற்கான சில செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளை தமிழ் மக்களுக்கெதிராகவும் அரச படையினருக்கு உடந்தையாக இவர்கள் செயற்படாமலும் இல்லை.
முஸ்லிம்களுக்கான ஒரு ஸ்திரமான அரசியலின் உருவாக்கம் வரை உணர்ச்சிகரமாக பேசியும் செயற்பட்டும் வந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தன்னாலேயே உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட முஸ்லிம் தீவிரவாதத்தினைக் குறித்தும் மிக அவதானமாகவே இருந்துள்ளார். அதாவது ஒரு காலத்தில் அமிர்தலிங்கம் விட்ட தவறை தலைவர் அஷ்ரப் விடாது ஒரு எல்லைக்கப்பால் ஜிகாத்தினது வளர்ச்சியை ஏதோ ஒரு வழியில் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை முஸ்லிகள் தரப்பில் உள்ள தீவிரவாதக் கருத்துக்கொண்டோர் தலைவர் அஷ்ரப்பினை தேர்தல் அரசியலுக்காக முஸ்லிம்களுடைய போராட்டத்தை அடக்கி வாசித்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதேவேளை முஸ்லிம் சமூகமானது தனது முழு ஆற்றலையும் அறிவையும் ஜனநாய வழிகளிலேயே பயன்படுத்த வேண்டும் என்பது தலைவர் அஷ்ரப் காட்டிய அக்கறைதான் இன்று இலங்கையில் வன்முறை அற்ற ஒரே சமூகமாக முஸ்லிம்களை வாழவைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.
சி.மு.காங்கிரஸ் எனும் அமைப்பை ஒரு இன அடிப்படையிலான அடையாள பெயரிடலிலிருந்து மாற்றி இலங்கை தேசியத்தின்பால் அக்கறை கொண்ட பரந்த ஒரு அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க அவர் முயன்றார். அதற்காகவே சி.மு.காங்கிரஸினை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி எனும் ஒரு அமைப்பினையும் உருவாக்கினார். கிழக்கு வாழ் தமிழர்களிடையே அதற்கான ஆரம்பக் கட்ட செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் கொல்லப்படுவதற்கு அடுத்து வரவிருந்த தேர்தலில் பல தமிழர்களை ஐ.தே.முன்னணியில் இணைத்து போட்டியிட வைப்பதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார் என அறியமுடிகிறது. அவரது கொலைச்சம்பவத்தின் போது அவருடன் ஹெலிகொப்டரில் பயணித்து அவருடனேயே கொல்லப்பட்ட கதிர்காமத்தம்பி என்பவர் இந்த ஐ.தே.முன்னணி உருவாக்கத்தில் மிக ஈடுபாடு காட்டியிருந்தார்.
இவற்றையெல்லாம் நோக்குகையில் அவர் முஸ்லிம்களை மட்டும்மல்ல கிழக்குவாழ் தமிழர்களையும் காலாவதியாகிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதப் போக்கில் இருந்து மீட்டெடுக்க முயன்றிருக்கிறார் என புலனாகின்றது. அப்படியொரு நீண்ட ஆசையோடுதான் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது உயிரை விட்டிருக்கின்றார். அவரது இழப்புக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல் வாரிசுகள் பல்வேறு கொள்கையின் அடிப்படையிலும் செயற்பட்டு வருகிறார்கள். சி.மு.காங்கிரஸ் ரஹூப் ஹக்கீம் தலைமையிலும், ஐ.தே.முன்னணியானது பேரியல் அஷ்ரப் தலைமையிலும் அத்துடன் இன்னும் சில புதிய காங்கிரஸ் அதாவுல்லா மற்றும் ரிஷாட் போன்ற தலைமைகளிலும் பல வழிகளிலும் பயணிக்கின்றனர்.
இறுதியாக 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான பின்புகூட 29-ஜனவரி-2003 இல் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகமானது ஒரு முஸ்லிம் தேச பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. கிழக்கிலங்கையின் சகல பகுதிகளிலும் இருந்து புறப்பட்ட மக்கள் பேரணிகளில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு முஸ்லிம் சமூகத்தினது அரசியல் அபிலாசைகளை வெளிக்காட்டிய இந்த நிகழ்வு ஒலுவில் பிரகடனம் என அழைக்கப்படுகிறது. தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எவ்வளவு முக்கியமோ அதற்கு நிகரானதாக இந்த ஒலுவில் பிரகடனமும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவையனைத்துவிதமான கோரிக்கைகளும் நடைமுறையில் வெவ்வேறு வடிவங்களாக விபரிக்கப்பட்டாலும் சராம்சமாக ஒருவிடயத்தையே சுட்டி நிற்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் தனியான ஒரு தேசிய இனம். அவர்களது எதிர்காலத்தை தீர்மானிப்பது அவர்களைத் தவிர வேறு யாராகவும் இருக்கமுடியாது என்பதுவே அதுவாகும்.
தொடரும்……..