சுவிஸர்லாந்து குடியுரிமையுடன் இலங்கை இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதிய தேர்தல் சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையின் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும் சட்டவிரோதமானது.
எனினும் இதனை மறைத்து கீதா குமாரசிங்க கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை இலகுவாக தீர்த்து கொள்ளும் நோக்கில் கீதா குமாரசிங்க, அமைச்சர் சரத் அமுனுகமவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
அப்போது ஜனாதிபதியை சந்திக்க அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் சென்றுள்ளார்.
கயந்த கருணாதிலக்கவிடம் பேசிய கீதா குமாரசிங்க, “ எங்கள் வீட்டில் நீல நிற சேலை மட்டுமல்ல பச்சை நிற சேலையும் இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.
மேலும் தான் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையை தீர்த்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியையும் கீதா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் பேசிய விபரங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கீதா குமாரசிங்க, தனது சுவிஸர்லாந்து குடியுரிமையை கைவிட போவதாக அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதியே கீதா இதனை அறிவித்திருந்ததுடன் பொதுத் தேர்தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.
குடியுரிமையை இரத்துச் செய்யுமாறு கீதா கோரிக்கை விடுத்திருந்த போதிலும் சுவிஸர்லாந்து அரசாங்கம் அதனை இரத்துச் செய்ய ஒரு வருட காலம் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கீதாவின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், இந்த விடயம் சம்பந்தமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனால், அவரது இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ள பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.