உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத கிரிக்கெட் சபையே துரோகி : முரளி சாடல்

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

muralitharin0_3116719b

அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.ஆனால் நான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. காரணம்  இலங்கை அணி விளையாடும்போது என்னால் அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து போட்டியை ரசிக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் மீது நான்  கொண்டுள்ள அன்பு அளப்பரியது.

நாட்டுக்காக பலவற்றை நான் செய்துள்ளேன். ஆனால் இன்று துரோகி என கூறுகின்றனர். ஒன்றை தெரிந்துக்கெள்ள வேண்டும். நான் துரோகி இல்லை கிரிக்கெட் சபைதான் மிகப்பெரிய துரோகி.

2011 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒருதடவை மாத்திரமே என்னை இலங்கை அணி ஆலோசகராக செயற்படும்படி கேட்டுக்கொண்டது. நான் அப்போது என்னால் முழு நேரமும் அதனை செய்யமுடியாது. என்னால் இயன்ற நேரங்களில் நாட்டுக்காக நான் அதை செய்கிறேன் என கேட்டுக்கொண்டேன்.

இப்போது அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக செயற்படும்போது, என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர். அது பிழையான ஒன்றாகும்.

அவுஸ்திரேலிய அணிக்கு முன்னாள் என்னை இலங்கை அணி அழைத்திருந்தால் நாட்டுக்காக நான் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு  ஆலோசகராக செயற்பட்டிருப்பேன். அதனை கிரிக்கெட் சபை செய்யவில்லை. இப்போது குறை கூறுவது தேவையற்றது.

நாட்டில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களை விடுத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி நிறத்தை பார்த்து  பயிற்சி அளிப்போருக்கு பணம் அளிக்கின்றனர். 

நான் நாட்டை நேசிக்கின்றேன்,  நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட   உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத  கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்