பாத யாத்திரையில் கலந்து கொள்வதில்லை : இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டத்திருத்த செயற்பாடுகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்துள்ள பாத யாத்திரையில் கலந்து கொள்வதில்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக அந்த கட்சி ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளது.

பொரல்லை கொட்ட வீதயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் செயலாளர் டியூ. குணசேகர, பாத யாத்திரையில் கலந்து கொள்வதால், ஏற்படும் சாதக, பாதகங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொல்லுரே, பிரதிச் செயலாளர் எஸ். சுதசிங்க, அரசியல் சபை உறுப்பினர் எல். ஆர். ஷெல்டன் ஆகியோர் கட்சியின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் அமுலில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை காணாத அரசியலமைப்புச் சட்டத்திருதத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதை கட்சி என்ற வகையில் மேற்கொள்ளக் கூடாது என கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான சந்திரசிறி கஜதீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை காணாது அதனை எப்படி அரசியலமைப்பு மரண பொறி எனக் கூற முடியும் என தெரிவித்துள்ள அவர், கூட்டு எதிர்க்கட்சி இனவாதத்தை தூண்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைப்பு வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்துள்ள பாத யாத்திரையில் கலந்து கொள்வதில்லை என கம்யூனிஸ்ட் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.