சம்பந்தனின் கருத்தும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் – ஏ.எல்.நிப்ராஸ்

 

வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க எல்லா விதமான காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், தமிழ் மக்கள் திருப்திப்படும் விதத்தில் அந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதில் சர்வதேசமும் அரசாங்கமும் ஒரு புள்ளியில் கொள்கையளவில் இணக்கம் கண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் எந்த அடிப்படையிலான தீர்வுப் பொதியை வழங்கினாலும், அதற்கு அங்கு வாழும் முஸ்லிம்களின் சம்மதம் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கின்றது. சிங்கள மக்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும், முஸ்லிம்களை திருப்திப்படுத்தாத எந்த தீர்வும், தமிழர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலத்தை கொண்டு வரமாட்டாது என்பதை எல்லா தரப்பினரும் புரிந்து கொண்டுள்ளனர்.

 
தமிழர்கள் பட்ட துன்பங்களைப் பார்த்து, அவர்களில் பச்சாதாபம் கொண்டிருக்கின்ற சர்வதேசம், இது விடயத்தில் மிகப் பெரும் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது. எவ்வாறான தீர்வுத் திட்டம் அமையப் போகின்றது என்ற விடயம் சர்வதேசத்திற்கும் அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்பிற்கும் பிரதான முஸ்லிம் கட்சிக்கும் ஓரளவுக்கு மேலோட்டமாக தெரிந்திருக்கலாம். எல்லா உள்ளடக்கங்களும் ஏற்கனவே பேசப்பட்டு விட்டதாகவும் உத்தியோகபூர்வமாக வெளியில் சொல்வது மட்டுமே மீதமிருக்கின்றது என்றும் கூட இன்னுமொரு தகவல் கூறுகின்றது. இந் நிலையிலேயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பரஸ்பரம் வார்த்தைகளால் தமது நிலைப்பாடுகளை வெளிக்காட்ட முனைந்திருக்கின்றனர். எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற விடயத்தை முஸ்லிம்களின் கோணத்தில் இருந்து அணுகுவது தவிர்க்க முடியாததாகின்றது.

 
வார்த்தைகளின் ஜாலம்
‘வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக் கொள்ள தயார்’ என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்; தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கடந்தவாரம் கூறியிருந்தார். இது உண்மையிலேயே முஸ்லிம்களை மனங்குளிர வைத்த ஒரு வார்த்தைகளாகும். கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை நியமிக்க ஒரே கட்சிக்குள்ளேயே குடுமிச்சண்டை பிடிக்கின்ற நிலை முஸ்லிம் அரசியலுக்குள் இருக்கையில், இன்னுமொரு இனத்தின் அரசியல் தலைவரான சம்பந்தன், இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் முதலமைச்சருக்கு ஆதரவளிப்பதை பாராட்டாமல் விட முடியாது. ஆனால், இந்த வார்த்தையை அவர் தற்செயலாக பேசினார் என்று அறவே கருத இடமில்லை. சரியாகச் சொன்னால், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் என்ன நினைக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவ்வாறான அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்க வேண்டும். அதாவது, இவ்விடயத்தில் பிரதான முஸ்லிம் கட்சி என கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை பேச வைப்பதற்கு, தமிழ் தேசியம் முயன்றிருக்கின்றது.

 
இதற்கு மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் உடனடியாக பதில் எதையும் வெளியிடவில்லை. ஒரு கருத்துக்கு காலதாமதம் இன்றி தெளிவான முறையில் பதிலளிக்கும் வழக்கமும் அவருக்கு மிகக் குறைவு. அத்தோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கூட்டாகும். ஆனால் மு.கா. என்பது தனியொரு கட்சியாகும். எனவே, கூட்டமைப்பு தலைவர் தமிழர்களின் நிலைப்பாட்டை அறிவித்தது போன்று, முஸ்லிம்களின் நிலைப்பாட்டை ஏகோபித்ததாக அறிவிக்கும் அதிகாரம் மு.கா.தலைவருக்கு இல்லாத நிலையும் இங்கு காணப்படுகின்றது. இந்நிலையில் கரவெட்டியில் நடைபெற்ற சிவசிதம்பரத்தின் பிறந்ததின நிகழ்வில் உரையாற்றிய மு.கா. தலைவர் ஹக்கீம், ‘சேதமில்லாத விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள நாம் தயார்’ என்று கூறியிருக்கின்றார். இது ஒருவகையில் சம்பந்தனின் கேள்விக்கான பதிலாக எடுத்தாளப்படலாம்.

 

ஆனால், தன்னுடைய வழக்கமான பாணியில் மயக்கமான வார்த்தை ஒன்றின் மூலம் முஸ்லிம்களுக்கோ தமிழர்களுக்கோ பிடிகொடுக்காமல் பேசியிருக்கின்றார் ஹக்கீம். இங்கு அவர் குறிப்பிட்ட ‘சேதம்’ என்ற வார்த்தை எது தொடர்பானது என்பதையும் அதன் ஆழ அகலங்களையும் அறிந்தவர் அவர் மட்டுமே. ஆனால் முஸ்லிம்கள் இவ்விடத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டியுள்ளது.

 
சுயநிர்ணய உரிமைக்காக சாத்வீக ரீதியாகவும் ஆயுதங்களின் துணைகொண்டும் போராடிய தமிழ் சமூகம், சிங்களப் பெருந்தேசியத்தின் எச்சசொச்சங்களை எடுத்துக் கொண்டு திருப்தி கொள்ள மாட்டாது என்பதே யதார்த்தமாகும். அந்த வகையில் வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வுப் பொதியைப் பெறுவதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். என்னதான் முரண்பட்டுக் கொண்டாலும் தமிழ்க் கட்சிகள் எல்லாம் இவ்விடயத்தில் ஒற்றுமைப்படுகின்றன என்பது முஸ்லிம்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். புலம்பெயர் தமிழர்களின் முயற்சியால் இதற்கு சர்வதேசத்தின் ஆசீர்வாதம் இருக்கின்றது. சிங்கள தேசமொன்றில் தமிழர்களுக்கு தீர்வுத்திட்டத்தை வழங்குவது அரசாங்கத்திற்கு மிகவும் சிக்கலான விடயமாக இருந்தாலும், அதைச் செய்தேயாக வேண்டிய நிலைமைக்கு கடந்தகால தவறுகளிலான அனுபவங்களும் சர்வதேச கெடுபிடிகளும் அரசாங்கத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன.

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் மேற்படி உரையை உற்று நோக்குகின்ற போது வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அப்பால் சென்று, யார் முதலமைச்சர் என்பது குறித்து சிந்திக்கின்ற கட்டத்திற்கு அவர் சென்றிருக்கின்றார் எனலாம். ஆனால், அதிகமான முஸ்லிம் அரசியல்வாதிகளும் 90 வீதமான முஸ்லிம் மக்களும் ‘வடக்கு, கிழக்கு இணைக்கப்பட மாட்டாது’ என்றே இன்னும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ‘அரசாங்கம் ஒருக்காலும் தமிழர்களுக்கு முழுமையான தீர்வை வழங்காது’ என்றும் ‘அதற்கு சிங்கள மக்கள் விட மாட்டார்கள்’ என்றும் தர்க்கம் புரிகின்ற அதிபுத்திசாலிகள் பலர் முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்றார்கள். சரி, வடக்கு கிழக்கை இணைத்தால் உங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அல்லது வேறு வகையான தீர்வுத் திட்டத்தை வழங்கினால் அதில் முஸ்லிம்களின் பங்கு என்ன? என்று அவ்வாறனவர்களிடம் கேட்டால், பலரிடம் இதற்கான பதில்கள் இருப்பதில்லை. தொலைக்காட்சி நாடகங்களின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என முன்கூட்டியே ஊகிக்கின்ற முஸ்லிம்களை விட, சமூகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சிந்திக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் குறைவாகவே இருப்பதாக தெரிகின்றது.
அஷ்ரஃப் சொன்னது

 
நமக்கு வரலாறு நன்கு தெரியும்! முஸ்லிம்களைப் பற்றி பெரிதாக கணக்கெடுக்காத இலங்கை-.இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு தற்காலிகமான ஒரு இணைப்பாக இது காணப்பட்டதுடன் அதனை நிரந்தரமாக்குவது என்றால், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டிய சட்டத் தேவைப்பாடும் இருந்தது. இந்நிலையில், இவ் இணைப்பு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டும், அதனை இரு மாகாணங்களாக பிரிக்குமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு அமைவாக, 2007ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் வடகிழக்கு மாகாணமானது வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்களாக மீண்டும் பிரிக்கப்பட்டன.

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால், முஸ்லிம் அரசியல்வாதிகள் மாதிரி அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு சும்மா இருந்திருக்க முடியும். ஆனால்; அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நல்லதொரு அரசியல் சூழமைவு ஏற்பட்டிருக்கின்ற வேளையில் தமிழர்களுக்கான தீர்வுப் பொதியை பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்திருக்கின்றார்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதற்காக உழைக்கின்றார். வயது குறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் சோம்பேறிகளாகவும் வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் போகின்றவர்களாகவும் இருக்கின்ற நிலையில், சம்பந்தன் தனது தள்ளாத வயதிலும் ஒரு இளைஞனைப்போல் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இது சிலவேளை பிரமிப்பாக இருக்கின்றது. இதைப் பார்த்து சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்.
தமிழர்களுக்கு மேலும் காலதாமதமின்றி தீர்வுத்திட்டம் வழங்கப்பட வேண்டும்.

 

எத்தனை உயிர்களையும், உடமைகளையும் பலி கொடுத்து, வலி சுமந்தவர்களாக இந்த தீர்வுக்காக அவர்கள் நெடுங்காலமாக தவமிருக்கின்றார்கள். தமிழ் சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து போரிட்டார்கள். அதுபோல முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்தார்கள். எனவே, முஸ்லிம்கள் இந்த நியாயமான தீர்விற்கு தடையாக இருக்கமாட்டார்கள். ஆனால், அவ்வாறு வழங்கப்படும் தீர்வு வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைய வேண்டும் என்பதே அங்கு வாழும் முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். முஸ்லிம்களின் நிலைப்பாடு என்பது றவூப் ஹக்கீமினதோ அல்லது றிசாட் பதியுதீனினதோ அன்றேல் அதாவுல்லாவினதோ தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

 
மக்களின் விருப்பமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு காரணமாக அமைந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை, மறைந்த மு.கா. ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப், ‘முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம்’ என்று விமர்சித்தார். அந்தப் பின்புலத்துடன் பின்வந்த காலங்களில் உருவான ஆயுதக் கலாசாரம், முஸ்லிம்கள் மீதான அராஜகம் என்பவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்த அஷ்ரஃப் தலைமையிலான மு.கா. கட்சி, ‘இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தை’ வலியுறுத்தியது. இப்போது காலம் மாறிவிட்டது என்று சிலர் சொல்லலாம். அது உண்மைதான் ஆயினும் ஒரு தீர்வுத்திட்டம் என்று வரும் போது, அதனுடன் சம்பந்தப்பட்ட ஆட்புல எல்லைக்குள் வாழ்கின்ற இரு சமூகங்களையும் அது ஓரளவுக்கு திருப்திப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதையும், அவ்வாறில்லாவிட்டால் தமிழ், முஸ்லிம்களிடையே நல்லிணக்கம் ஒருக்காலும் முன்னேற மாட்டாது என்பதையும் கவனிக்க வேண்டும்.
இரண்டு கருத்துக்கள்
வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கின்றன. முதலாவது நிலைப்பாடு, வடக்கும் கிழக்கும் தற்போது போன்றே தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும். ஒருபோதும் இணையவே கூடாது என்பதாகும். இரண்டாவது நிலைப்பாடு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்தால் அதற்குள் தீர்வைப் பெறுவதாகும். அதாவது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி மாகாண அலகு என்று கூறலாம்.

 
கிழக்கில் முஸ்லிம்கள் செறிவாகவும் வடக்கில் ஐதாகவும் வாழ்கின்றனர். இவ்விரு மாகாணங்களும் வெறுமனே இணைந்தால் முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்படுவதால் மட்டும் முஸ்லிம்களின் அபிலாஷை நிறைவேறி விடாது. இவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில் இரு இனங்களும் சில நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைவடைவது உள்ளடங்கலாக மேலும் பல பாதகமான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வார்கள். குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களே அதிக விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டியிருக்கும். சுருங்கக் கூறின் தமிழர்களின் அளவுக்கு, இவ்விணைப்பால் முஸ்லிம்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கப் போவதில்லை எனலாம். அந்த அடிப்படையிலேயே வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட கூடாது என்ற ஒரு நிலைப்பாடு முன்வைக்கப்படுகின்றது.

 
இதேவேளை, இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் அதற்குள் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை தர வேண்டும் என்ற நிலைப்பாடும் உள்ளது. எப்படியோ இணைக்கப்பட்டே தீரும் என்றால் அதற்குள் தீர்வைத் தேடுவதை தவிர வேறு வழியும் இல்லை. எனவே அதை முஸ்லிம் தலைமைகள் செய்தாக வேண்டும். இணைந்த வடகிழக்கிலான தீர்வு குறித்து பேசும் போது, முன்னர் அஷ்ரஃப் முன்வைத்த முஸ்லிம் தனி மாகாணம் என்ற கோரிக்கை மீள வலியுறுத்தப்பட வேண்டும். கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச சபைகளையும் மன்னார், முசலி போன்ற பிரதேசங்களையும் உள்ளடக்கியதாகவும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூன்று முஸ்லிம் பெரும்பான்மை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும் இந்த நிலத்தொடர்பற்ற மாகாணம் அமைய வேண்டும் என்று இன்றுமொரு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

 
இந்தியாவின் பாண்டிச்சேரி மாதிரியில் முஸ்லிம் மாகாணமானது நிலத்தொடர்பற்றதாக அமையும் போது தமிழர்களுக்கு வழங்கப்படும் ஆட்புல எல்லையும் நிலத்தொடர்பு அற்றதாகவே இருக்கும். எனவே இந்த சிக்கலை தீர்ப்பதற்கு ஒரு சிறந்த பொறிமுறை அவசியமாகும். இவ்விடயத்தில் விடாப்பிடியாக நிற்காமல் இருதரப்பும் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். முஸ்லிம் மாகாண கோரிக்கையில் முஸ்லிம்கள் சில தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்றாலும், அது அம்பாறை மாவட்டத்திற்குள் மட்டும் அமையும் ஒரு கரையோர மாவட்டமாக குறுகலடையக் கூடாது. கிழக்கில் பெருமளவான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒரு மாகாணத்தையே கேட்கின்ற முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டத்தைப் போன்ற ஒரு சிறு நிலப்பரப்பை, நிர்வாக அலகு என்ற பெயரில் கொடுத்து விட்டு, ‘இதுதான் நீங்கள் கேட்டது’ என்று கற்பிதம் சொல்வதற்கு யாரும் எண்ணக்கூடாது.

 
வலைவீசும் முயற்சி

 
இப்போது தமிழ்-முஸ்லிம் அரசியலில் ஆரோக்கியமான சூழல் நிலவுகின்றது. இணைந்த வடகிழக்கில் தமிழ் முதலமைச்சரையும் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ள சம்பந்தன் இருக்கின்றார். ‘முஸ்லிம்களை பிரித்துப் பார்க்கவில்லை’ என்று கூறும் மாவை சேனாதிராஜா இருக்கின்றார். முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும் போது குரல்கொடுக்க சுமந்திரன் போன்ற பலர் இருக்கின்றார்கள். ஆனால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. கடந்த கால அனுபவங்களை விட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளின் குரல்கள் மற்றும் பல காரணங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையில் தாக்கம் செலுத்தி வருகின்றன. சம்பந்தனுக்குப் பிறகு யார் தமிழ் தலைவராக வருவார், அவர் எப்பேற்பட்டவராக இருப்பார்? அப்போது தமிழர்களின் அரசியலும் முஸ்லிம்களின் அரசியலும் இதே உறவுடன் கூடிக்குலாவிக் கொண்டிருக்குமா தெரியாது. எனவே, தீர்வுத் திட்டம் என்று வருகின்ற போது சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வையே முன்வைக்க வேண்டும். வரலாற்றின் பிழையை திருத்தும் போது அது இன்னுமொரு வழுவுடன் இடம்பெறக் கூடாது.

 
இப்போது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விடயத்தில் முஸ்லிம்களின் ஆதரவை முன்னமே பெற்றுக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது நன்றாகவே தெரிகின்றது. முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சியாக முஸ்லிம் காங்கிரஸே, தமிழ் கூட்டமைப்பினாலும் அரசாங்கத்தாலும் சர்வதேசத்தாலும் கருதப்படுகி;ன்ற நிலையில், வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் பாவிக்கப்படலாம் என்று அனுமானிக்க முடிகின்றது. ஹக்கீமை வளைத்துப்போட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்தை பெற்றுக் கொள்ளும் இராஜதந்திர நகர்வுகள் இடம்பெறுவதாக முஸ்லிம்களுக்குள் இப்போது பரவலாக பேச்சடிபடுகின்றது.

 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு இது விடயத்தில் பாரிய பொறுப்பிருக்கின்றது. தமிழர்களோடு நெருக்கமான உறவுகளை வளர்ப்பது வேறு விடயம். முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவது வேறு விடயம். ஹக்கீம் இவை இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முன்வைக்கின்ற தீர்வு வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கான எவ்வித உப தீர்வையும் உள்ளடக்கி இருக்காத பட்சத்தில் அதைத் தூக்கிக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்குள் வரக் கூடாது. ஒன்றுமில்லாத தீர்வுப் பொதியை சந்தைப்படுத்தும் அற்ப அரசியல்வாதியாக தேசிய தலைவர்கள் ஆகிவிடக் கூடாது.
தமிழர்களுக்கு ஒரு விடயத்தால் நன்மை கிடைக்கும் என்றால், அது யாருக்கு பாதகம் என்றாலும் சம்பந்தன் அதைக் கோரியே தீருவார். இதுபோலவே, தமிழர்கள் என்ன நினைத்தாலும் முஸ்லிம்களுக்கான நியாயமான தீர்வை ஹக்கீம் கோரியே தீர வேண்டும். இதில் தப்பில்லை. தமிழர்களுக்கு வாக்குறுதியளித்தபடி தீர்வுத்திட்டம் வழங்கப்படுமா என்பதும் அது எவ்வாறானதாக அமையும் என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் பட்சத்தில் தனி முஸ்லிம் மாகாணத்தை கோருவதற்கு மு.கா. தலைவர் பின்னிற்கக் கூடாது. எந்தக் காரணத்திற்காகவும், தான் சார்ந்த சமூகத்திற்கு வரலாற்று துரோகம் ஒன்றை றவூப் ஹக்கீம் செய்யமாட்டார் என்ற கடைசி நம்பிக்கையையாவது அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 18ஆவது திருத்திற்கு எதற்காகவோ ஆதரவளித்துவிட்டு பிறகு மனம் வருந்துவது போல நடந்து கொள்வதற்கு, தீர்வுத்திட்டம் என்பது சாதாரண விடயமல்ல.

 
கூட்டுப் பொறுப்பு

 
இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இது மு.கா. தலைவரின் பொறுப்பு மட்டுமல்ல. வடக்கு, கிழக்கில் அரசியல் செய்கின்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா உள்ளடங்கலாக அனைத்து அரசியல்வாதிகளதும் கடமையும் ஆகும். ஒருவேளை, இந்த தீர்வுத் திட்டம் முஸ்லிம்களுக்கு நன்மை அற்றதாக அமையும் பட்சத்தில் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தேவையும், முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. அதேவேளை, றவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் பிரதான அரசியல் தலைமை என்றாலும், அவர் மட்டுமே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி அல்ல என்பதை அரசாங்கமும் தமிழ் தரப்பும் புரிந்து செயற்பட வேண்டும்.

 
எனவே, முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை மு.கா. தலைவரும் ஏனைய அரசியல்வாதிகளும் இப்போதே தெளிவாக தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டும். அது, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக அன்றி, அந்தப் பொதிக்குள் எமது அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் விதத்தில் சீராக்கங்களை செய்வதாக அமைய வேண்டும். ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தெளிவற்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் குழப்பி, காலத்தை வீணாக்கக் கூடாது. அதேபோல் தமிழர்களையும் முஸ்லிம்களையும் சமாந்திரமாக திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வும் நிரந்தரத் தீர்வாக மாட்டாது என்ற யதார்த்தத்தை அரசாங்கமும் சர்வதேசமும் மறந்து விடக் கூடாது.
நிலைமாறுகால நீதி (transitional justice) என்பது, எந்தவொரு சமூகத்திற்கும் அநியாயம் இழப்பதாக இருக்க முடியாது.

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 23.07.2016)