” வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம்- மறைந்த தலைவர் அஷ்ரப்”
” சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களின் மூலம் வட கிழக்கு இணைப்புக்கு நாம் தயார் – அமைச்சர் ஹக்கீம்”
கடந்த பதினாறு வருட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில்,அதன் தற்போதைய தலைவரினால் மேட்கொள்ளப்பட்ட ஒரே ஒரு மாற்றம் அடிமைச்சாசனம் என்பது சேதமில்லாத நிலைக்கு உருமாறியதை தவிர வேறொன்றுமில்லை.
1987 ஜூலை மாதம் 29 ல் நாட்டில் அப்போதிருந்த நிலைப்பாடுகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக, வடக்கிலும், கிழக்கிலும் இருந்த முஸ்லிம் மக்களின் நிலை குறித்து எந்தவொரு கரிசனையுமில்லாமல் ஏட்படுத்தப்பட்ட இவ்வினைப்பானது வடக்கிலோ அல்லது கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கோ எந்தவொரு தீர்வுத்திட்டத்தையோ அல்லது நன்மையையோ ஏட்படுத்தி இருக்கவில்லை.
உண்மையில் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதானது அங்கு வாழும் சுயாதீன சமூகங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் என்றிருந்தால் சுயாட்சி குறித்து சாத்வீக முறையில் தமிழர் பிரச்சனை குறித்து போராடிய தந்தை செல்வா போன்றவர்களே அதை அப்போது முன்னிறுத்தி இருக்க முடியும்.
வடக்கும், கிழக்கும் என்பது சேர்ந்திருப்பது அல்லது பிரிந்திருப்பது என்பது ஒரு சில கட்சிகளின் விருப்பமோ அல்லது தெரிவோ அல்ல, மாறாக குறிப்பிட்ட மாகாணங்களில் வாழும் மக்களின் விருப்பு வெறுப்பு சேர்ந்த மனநிலை சார்ந்த விடையமாகும்.
உண்மையில் இவ்விரண்டு மாகாண இணைப்பு குறித்து அவ்வப்போது எழுகின்ற கோரிக்கைகள் எல்லாம் வடக்கில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் கட்சிகளிடமிருந்து எழுவதை நாம் அவதானிக்க முடியும். வடக்குடனான கிழக்கு இணைப்பு குறித்து, கிழக்கை பிரதிநிதிப்படுத்தும் அல்லது கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் யாருமே தமது கருத்தை பகிரங்கமாக தெரிவிக்காத போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்ற அந்தஸ்தை தாண்டி , கிழக்கோடு எந்த தொடர்பும் அற்றவரான அமைச்சர் றஊப் ஹக்கீமின் வடகிழக்கு இணைப்பு குறித்த சமகால முன்னெடுப்புக்கள் பலத்த சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது.
கிழக்கின் ஒரு மாவட்டமான அம்பாறையில் மட்டும் தமது பலத்தை பெற்றுள்ள ஒரு கட்சியானது, ஏனைய மாவட்ட மக்களின் எண்ணங்களை அறியாது, அல்லது அதை அறிய முட்படாது ஒரு மாகாணத்தை இன்னொரு மாகாணத்தோடு இணைக்க வேண்டுமென்பது வெறுமனே அது முஸ்லிம் காங்கிரஸின் கருத்தாக மட்டுமே நோக்கப்படவேண்டும். அதே போல, அமைச்சர் ஹக்கீமின் கருத்து கிழக்கில் வாழுகின்ற “ஹக்கீம் ஆதரவாளர்களுக்கு” வேண்டுமென்றால் இனிப்பாகவும், உற்சாகத்தையும் தரக்கூடும், ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையோ அல்லது மறைந்த தலைவரின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்துள்ளவர்களையோ நிச்சயம் இம்முடிவு அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கும். அது கடந்த கால கசப்பான வரலாறுகளினாலும், வடகிழக்கு இணைப்பின் மூலம் கிழக்கிற்கு கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகள் மறுக்கப்படலாம் என்ற அச்சத்தின் மூலம் என்பது நிதர்சனமாக சிந்திப்பவர்களுக்கு நிச்சயம் புரியும்.
மேலோட்டமாக பார்த்தால், வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கும் கரிசனை, அவரின் தனிப்பட்ட தலைமைப்பதவி குறித்த அச்சம் அல்லது ஆசையாக கூட இருக்க முடியும். தனியான கிழக்கு என்று வரும்போது, மாகாண ஆட்சி முஸ்லிம் காங்கிரஸ் பக்கமே செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ள நிலையில், தனக்கும் தனது பதவிக்கும் சம அந்தஸ்தில் இன்னொருவர் கட்சியில் முளைத்துவிடக்கூடாது என்ற சுயநலம் கூட இந்த சத்தமில்லாத விட்டுக்கொடுப்புகளுக்கு காரணமாக இருக்கலாம்.
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா இல்லையா என்பது கிழக்கில் இருக்கும் சகல அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களை கண்டறிந்த பின்னரே பேசிச்சுவார்தை என்ற ஒன்றுக்கு தயாராக வேண்டும். அது மட்டுமல்ல, வடக்கும் கிழக்கும் இணைப்பதன் மூலம், சுயமாகவே கிழக்கில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்களின் அரசியல் உரிமை பலமிழக்கும் நிலை ஏற்படும். அது எதிர்காலத்தில் நிச்சயம், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்குள் மேலும் பிரிவினையை ஏட்படுத்தாது என்பதில் என்ன நிச்சயம். ஏனைய மாகாணங்களை போல,அங்கு வாழ்கின்ற மக்கள் அனுபவிக்கின்ற உரிமை மற்றும் சலுகைகளை கிழக்கு மக்கள் தனியே அனுபவிக்கின்ற உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், தமிழர் கூட்டணி தலைமையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களுடனான சகவாழ்வு குறித்து இன்னமும் ஒரு உறுதியான தீர்வு வடக்கு தலைமைகளால் முன்வைக்கப்படாத போது, கிழக்கு இணைப்பு என்பது நம்பகத்தன்மை இல்லாத ஒரு முன்னெடுப்பு என்பதை இலங்கை வாழ் சகல முஸ்லிம்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்பதை விட தெளிவாகவே உள்ளனர். அதே போன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும்போது முஸ்லிம்களுக்கான தனியான சுயநிர்ணயத்துடன் கூடிய ஒரு நிலத்தொடர்பற்ற மாகாண முன்வரைவுகளை எல்லாம் பெரும்பான்மை சிங்கள மக்களும் , பெரும்பான்மை அரசுகளும் ஏற்றுக்கொள்ளுமா என்பதில் பாரிய முரண்பாடுகள் உள்ள இக்காலத்தில், வெறுமனே ஒரு மதிய போஷணத்துடன் நிகழும் பரிமாற்றங்களுக்காக, கிழக்கை அடமானம் வைக்க அமைச்சர் ஹக்கீமினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்கால எமது சந்ததிக்கு பாரிய சதியாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
ஆதம்பாவா வாகிர் ஹுஸைன்