யார் என்ன கூறினாலும் உள்ளூராட்சித் தேர்தல் அடுத்தவருடம் தொகுதிவாரி முறையிலே நடாத்தப்படும். இதில் எதுவித மாற்றமுமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில்,
இரு தடவைகள் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அவரால் புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்க உரிமையில்லை. ஆரம்பிக்கவும் முடியாது.
தற்போது உள்ள அரசாங்கத்தையும் விட பலமான அரசுகளை தான் கவிழ்த்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் எந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது என அவர் தெரிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்த போராட்டங்களில் மஹிந்த ராஜபக் ஷ எந்தப் பங்களிப்பினையும் செய்யவில்லை.
எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக அவர் கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சிகளிலே ஈடுபட்டுள்ளார். இதனை நாட்டு மக்கள் அறிவார்கள்.
அரசாங்கத்துக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் எத்தனை எதிர்ப்பு பாதயாத்திரைகள் மேற்கொண்டாலும் பலமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றினை நாம் அமைப்போம்.
இதனை எவராலும் தடுக்க முடியாது என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.