ஆஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார்!

australia_4
ஆஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்-சபையின் 76 இடங்களுக்கும் கடந்த 2-ம் தேதி தேர்தல் நடந்தது.

ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே முடிவுகள் இழுபறியாக ஊசலாட்டத்துடனே வெளியாகின. 

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மால்கோம் டர்ன்புல் அறிவித்து இருந்தார். அதற்கு பொது மக்களிடம் ஆதரவு இருந்தது. எனவே, இக்கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்கேற்ப, இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 150 இடங்களை கொண்ட ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் 76 இடங்களை பிடிக்கும் கட்சிதான் அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 76 இடங்களை கைப்பற்றியது. மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெற வேண்டிய மேலும் ஓரிடத்தில் இக்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் லிபரல் கட்சியின் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மால்கோம் டர்ன்புல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார்.

தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆஸ்திரேலிய பிரதிநிதியும் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரலுமான ஜெனரல் பீட்டர் காஸ்குரோவ், மால்கோம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதியும் செய்து வைத்தார்.

ஆஸ்திரேலியாவில் ஆளும்கட்சி தலைமையின் முடிவுக்கு ஏற்ப கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ஜூலியா கில்லார்ட், கெவின் ருட், டோனி அபாட், மால்கோம் டர்ன்புல் என இதுவரை நான்குபேர் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

டோனி அபாட்டின் பதவி விலகலையடுத்து கடந்த 16-9-2015 அன்று ஆஸ்திரேலியாவின் பிரதமராக பொறுப்பேற்று கொண்ட மால்கோம் டர்ன்புல் இந்தமுறை தேர்தலை சந்தித்து மீண்டும் அந்நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.