ஊடகப்பிரிவு ,அஷ்ரப் ஏ சமத்
பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கும் நோக்கில், எனது அமைச்சின் கீழான அருங்கலைகள் பேரவை தயாரித்துள்ள பாடவிதானங்களை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தேசிய அருங்கலைகள் பேரவையும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய கனிஷ்ட கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தென்னகோன், கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் றிசாத் இங்கு உரையாற்றுகையில்,
நமது நாட்டில் அருங்கலைகள் அருகி வருகின்றன. இந்தத் துறையில் ஈடுபட்டோர் இதில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அருங்கலைகள் சார்ந்த பொக்கிஷங்கள் அழிந்துவருவது நல்லதல்ல. வளரும் சமுதாயத்தினருக்கு இந்தத் துறையில், ஆர்வத்தை ஊட்டும் வகையில் பெரியோர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் தமது நுட்பங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனை நோக்கமாகக்கொண்டே தேசிய அருங்கலைகள் பேரவை, பாடசாலை மாணவர்களின் பாடப்பரப்புக்குள் இந்த அருங்கலைகளையும் உட்புகுத்தத் திட்டமிட்டது.
அந்தவகையில் நாம் தயாரித்து, கல்வி அமைச்சுக்கு வழங்கிய பாடவிதானங்கள், நாட்டிலுள்ள 200 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தும் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் வருடங்களில் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களும் அருங்கலைகளைக் கற்கும் வாய்ப்பைப் பெறுவர் என நான் திடமாக நம்புகின்றேன்.
தேசிய அருங்கலைகள் பேரவை நாட்டின் அருங்கலைகளைப் பேணுவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே கல்வி அமைச்சுடன் இணைந்து, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நடாத்தப்படும் இந்தப் போட்டியாகும்.
வருடாவருடம் இந்தப் பேரவை “ஷில்ப நவோதய கண்காட்சி” ஒன்றை நடாத்தி, அருங்கலைகளில் திறமை உள்ளோரை ஊக்குவித்து பாராட்டும், பரிசும் வழங்கி வருகின்றது. அத்துடன் தேசிய ரீதியில் அருங்கலைகள் தொடர்பான பயிற்ச்சிகளை வழங்கி வருகின்றது. உள்நாட்டு அருங்கலையாளர்களை வெளிநாட்டுப் பயிற்ச்சிக்கு அனுப்புவதும், வெளிநாடுகளில் உள்ள அருங்கலையாளர்களை இலங்கைக்கு வரவழைத்து அவர்களது நுட்பங்களை நாம் அறிய வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றது.
தேசிய அருங்கலைகல் பேரவையின் தலைவி திருமதி. ஹேசானி போகொல்லாகம அவர்கள் இந்த முயற்சிகளுக்கு அளப்பரிய பணியை ஆற்றுகின்றனர். இந்தப் போட்டியை நடாத்த எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் அமைச்சர் அகில விராஜ் காரிய வசத்திற்கும், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் நான் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன் எனக் கூறினார்.