இளம் வயது முதலே அரசியலில் ஆர்வமும் பிரதமராக வேண்டும் என்று கனவும் கண்டவர் டேவிட்

British Prime Minister David Cameron

 பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கன்சர்வேடிவ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்த பிரதமர் இவர்.

கடந்த நூறாண்டுகளில் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த மிக இளவயது பிரதமரும் கூட.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரட்டன் வெளியேறக்கூடாது என்று போராடித்தோற்ற பிரதமராகவே, ஒரு தோல்வியாளராகவே டேவிட் கேமரன் வரலாற்றில் அறியப்படுவார்.

செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து, ஈடன் தனியார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.

இளம் வயது முதலே அரசியலில் ஆர்வமும் பிரதமராக வேண்டும் என்று கனவும் கண்டவர். அதற்கேற்ப 2001 ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தது முதலே நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார்.

david camer

நான்கு ஆண்டுகளுக்குப்பின்னர், கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தன்னிச்சையான அவரது பேச்சு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற உதவியது.

கட்சித்தலைவரானதும் பொதுமக்கள் மத்தியில் தனது கன்சர்வேடிவ் கட்சி குறித்த மதிப்பீட்டை மாற்ற முயன்றார். அதற்காக புவி வெப்பமடையும் பிரச்சனையை கவனப்படுத்த அவர் ஆர்க்டிக் பயணம் மேற்கொண்டார்.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் டேவிட் கேமரன் முதலிடம் பிடித்தார். அவரது கன்சர்வேடிவ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. ஆனாலும் ஆட்சியமைக்கத்தேவையான பெரும்பான்மை கிட்டவில்லை. லிபரல் டெமாக்ரடிக் கட்சியோடு கூட்டணி வைத்தார்.

நிதி நெருக்கடியை சமாளிக்க அரசின் செலவில் சிக்கனத்தையும் சர்ச்சைக்குரிய நிதிவெட்டுக்களையும் நடைமுறைப்படுத்தினார்.

கடாஃபி அரசை அகற்றியதற்காக அவர் லிபிய வீதிகளில் வரவேற்கப்பட்டாலும் அதற்குப்பிறகான காலகட்டம் குறித்து திட்டமிடவில்லை என்பதற்காக விமர்சிக்கப்பட்டார்.

சிரிய அரசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள நாடாளுமன்ற ஒப்புதல் கேட்டபோது அதில் தோல்வியை சந்தித்தாலும் பதவி பறிபோகவில்லை. பின்னர் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான் தாக்குதலுக்கு நாடாளுமன்ற ஒப்புதல்  பெற்றார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட காலகட்டம் கேமரனுக்கு சவாலானதாக இருந்தாலும் வாக்காளர்கள் சேர்ந்தே இருக்க வாக்களித்தது ஆறுதலாக இருந்தது.

இரண்டாவது முறையாக ஆட்சியைப்பிடிக்க அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் நீடிப்பதா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவேன் என்று வாக்களித்தார்.

தேர்தலில் வென்றதும் வாக்களித்தபடி வாக்கெடுப்பும் நடத்தினார். ஆனால் அவர் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென மக்கள் தீர்ப்பளித்தனர்.

முடிவு வந்த சில மணிகளில் பதவி விலகுவதாக அறிவித்தார் டேவிட் கேமரன்.

“அடுத்த பிரதமரகா தெரீசா மே பதவிக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் வலிமையானவர். தகுதியுடையவர். அடுத்த ஆண்டுகளில் நம் நாட்டுக்குத்தேவைப்படும் தலைமைத்துவத்தை தரக்கூடிய தகைமையாளர் அவர்”, என்று விடைபெற்றார் கேமரன்.

உணர்ச்சிகரமான திடீர்த்திருப்பங்களை தொடர்ந்து எதிர்கொண்டவர், ஒருவித சுதந்திர உணர்வோடு சீட்டியடித்தபடியே பதவி விலகிச் சென்றார்.

நன்றி  bbc