சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி சான்சி மாகாணத்தின் தலைநகரமான சியான் நகரில் உள்ள பழமை வாய்ந்த புத்த ஆலயத்தில் சீன அதிபருடன் இணைந்து வழிபட்டார்.
“3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ‘சியான்’ நகருக்கு வராதவர், சீனாவுக்கு வந்ததாக அர்த்தமாகாது” என்று சீனாவில் கூறப்படுவது உண்டு. அதன்படி, புராதனமான சியான் நகரிலிருந்தே தனது சீன பயணத்தை தொடங்கிய மோடி அங்குள்ள டெரகோட்டா அருங்காட்சியகத்திற்கு சென்று வீரர்களின் சிலைகளைத் தொட்டுப் பார்த்து ரசித்தார்.
பின்னர், கட்டப்பட்ட காலமே தெரியாத அளவிற்கு பழமை வாய்ந்த, கி.மு 582 ஆம் ஆண்டு மறு கட்டுமானம் செய்யப்பட்ட, ‘த சிங்க்ஷான்’ என்ற புத்த மதக் கோயிலுக்கு அதிபர் ஜின்பிங்குடன் சென்றார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். கோயிலுக்குள் சென்ற மோடி, தங்கத்தால் ஆன பிரம்மாண்ட புத்த சிலைகளை வழிபட்டார்.