மக்களுக்கு சுமையாக இருக்கும் பெறுமதி சேர் வரியை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தான் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூலதன வரி என்ற செல்வ வரி தற்போது செல்வந்தர்களுக்கு அல்ல வறியவர்களுக்கு துன்பமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பலாங்கொட மாவலதென்ன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நோயாளி ஒருவர் தனது சிறுநீரை பரிசோதிக்க வைத்தியசாலைக்கு செல்லும் போது சிறுநீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
கல்வி மற்றும் சுகாதார சேவைகளிலும் தற்போது வரி அறவிடப்படுகிறது. இவற்றில் வரிகளை அறவிடுவது மிகவும் தவறானது. இவ்வாறு வரியை அறவிடுவது படிப்பறிவிலும் வரி அறவிடுவதாகும்.
நாய்களுக்காக நாய் வரி வெள்ளையர்களின் காலத்தில் விதிக்கப்பட்டது. அந்த காலத்தில் போல் தற்போது நாய் வளர்ப்பவர்களிடமும் வரி அறவிடப்படுகிறது.
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு என்னை திட்டவும் சிறைகளில் அடைக்கவும் மாத்திரமே முடியும். எனக்கு மஹாராஜா என்று பெயரிட்டதும் என்னை முதலில் அப்படி அழைத்ததும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.
என்னை அவர் மஹாராஜா என அழைக்க ஆரம்பித்ததும் பொதுமக்களும் அப்படி அழைக்க ஆரம்பித்தனர்.
அப்போது கோடிக்கணக்கில் மருந்தை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகிக்காமல் இருந்தனர். மருந்து இல்லாத காரணத்தினால் என் மீதே குறைகூறினர்.
இவ்வாறு மீனவர்களுக்கு ஆத்திரமூட்டினர், கல்வித்துறையில் சிக்கலை ஏற்படுத்தினர். பல்கலைக்கழக துறையினருக்கு எனக்கும் விரிசலை ஏற்படுத்தி அவர்களை சிறைப்படுத்தினர்.
அனைத்து பிரச்சினைகளையும் என் மீது சுமத்தி விட்டு, அனைவரும் ஒரு பக்கத்திற்கு சென்று அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் எனக்கு எதிராக பல வருடங்களாக மறைமுக சூழ்ச்சிகளை செய்திருக்கலாம் என எண்ணுவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.