எல்லா பொருட்களின் மீதும் வல்லமை கொண்ட இறைவன்

ஒருவர் தன்னுடைய கழுதையுடன் ஒரு கிராமத்தை கடக்கும்போது, அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறார்.

அந்த இடத்தில் மனிதரோ கால்நடைகளோ இல்லாமல் அந்தக் கிராமமே மயான அமைதியுடன் காணப்பட்டது. இதைப் பார்த்த அவர் தமக்குத்தாமே “அல்லாஹ்! அழிந்து மரித்த இவ்வூரை எப்படிதான் உயிர்ப்பிப்பாயோ!?” என்று வியந்து கூறினார்.

அந்த நொடியே, அல்லாஹ் அம்மனிதருடைய உயிரையும் அந்தக் கழுதையின் உயிரையும் பறித்துக் கொள்கிறான். அல்லாஹ் அவரை இறக்கச் செய்து, நூறாண்டுகள் வரை அப்படியே அங்கு இருக்கச் செய்தான். அதன் பிறகு அல்லாஹ்வே அவரை உயிர்பெற்று எழும்பும்படி செய்தான்.

அம்மனிதரிடம் இறைவன் “எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான். அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் இவ்வாறு இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்” என்றார்.

அல்லாஹ் அறிவித்தான் “இல்லை, இந்நிலையில் நீர் நூறாண்டுகள் இருந்தீர். உன்னுடைய உணவையும், பானத்தையும் கெட்டுப் போகாமல் இருக்கச் செய்ததால் அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை” என்றதும் அந்த மனிதர் ஆச்சர்யமாக, தன்னுடைய உணவையும் பானத்தையும் எடுத்துப் பார்த்துக் கொண்டார்.

“இப்போது உன்னுடைய கழுதையைப் பாரும்!” என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அம்மனிதன் தன் கழுதையை எங்கே என்பது போலப் பார்த்தார், அங்கு வெறும் எலும்புகளின் குவியலே காணப்பட்டது.

“இப்போது கவனமாகப் பார், நான் இந்தக் கழுதையை உயிர்ப்பிக்கப் போகிறேன்” என்று சொல்லி முடிக்கும் முன், அம்மனிதரின் கண்முன்னே அக்கழுதையின் எலும்புகளைச் சேர்த்து, அவற்றின்மேல் சதை போத்தப்பட்டதைக் கண்டு பரவசமடைந்தார் அம்மனிதர். கழுதை மீண்டும் உயிர்பெற்று முன்பு போலவே காணப்பட்டது.

“உன்னை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக உன்னை மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்தேன்” என்றான் இறைவன்.

உடனே அம்மனிதர் “அல்லாஹ்! நிச்சயமாக எல்லாப் பொருட்களின் மீதும் வல்லமையுடையவன் நீ என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று மனம் உணர்ந்து மகிழ்ச்சியுடன் கூறினார்.

திருக்குர்ஆன் 2:259

 ஜெஸிலா பானு