முஸ்லிம்களின் அபிலாஷைகளும் வாளாவிருக்கும் அரசியல்வாதிகளும்

slmc rauff hakeem athaullah rishad

 

 ‘ஒரு சமூகம் தானாக திருந்தாத வரையில் இறைவன் அவர்களை திருத்துவதில்லை’ என்ற இறைவசனத்தை நம்புகின்ற முஸ்லிம்கள், அதை உணர்ந்து செயற்படுவதாக தெரியவில்லை. அவர்களது அரசியல், சமூக வாழ்வு பூச்சியத்திற்குள் ராஜியத்தை தேடுவதாகவே தோன்றுகின்றது. பார்ப்பதற்கு ஆலம்பழம் போல உள்ளே எதுவுமற்றதாக இருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தத் தலைமுறையில் வியாபித்திருக்கின்ற முஸ்லிம்களின் அரசியல் பொடுபோக்குத்தனம் என்று, அடுத்த தலைமுறை காறி உமிழும். வாய்ப்புக்களை தவறவிட்டதன் மூலம் சமூக விடுதலையை பிற்போட்ட ஒரு இனக்குழுமமாக இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள், வாழ்ந்து விட்டுப் போனார்கள் என்றுகூட சரித்திரக் குறிப்புக்கள் எழுதலாம். நிலைமை அவ்வாறுதான் போய்க் கொண்டிருக்கின்றது.

 
வெறுமனே கோஷங்களாலும் வெற்று அரசியல் சித்தாந்தங்களாலும் வயிற்றையும் மனசையும் நிரப்பிக் கொண்டு அமைச்சுப் பதவிகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்ற ஒரு கேடுகெட்ட அரசியல்வாதிகளையே முஸ்லிம் அரசியல் பிரசவித்திருக்கின்றது. இது மிகப் பெரும் சாபக்கேடு. அதேபோல் பெருநாளைக்கு விலையுயர்ந்த ஆடை கொள்வனவு செய்வதிலும், வேளாவேளைக்கு உயர் ரக உணவு சாப்பிடுவதிலும் காட்டுகின்ற அக்கறையைக் கூட இச்சமூகத்தின் அரசியல், இனம்சார் அபிலாஷைகளை வென்றெடுக்கின்ற விடயத்தில் வெளிப்படுத்தாத ஒரு மக்கள் கூட்டம் இருப்பது அந்த அரசியல்வாதிகளுக்கு கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதமாகும். வேறென்ன சொல்ல?!

 
போதுமான காரணங்கள்

 
உலகின் மிகப் பெரும் மதங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இஸ்லாம் இருக்கின்றது. உலகளாவிய சனத்தொகையில் சுமார் 24 வீதமான மக்கள் அதாவது 1.7 பில்லியன் பேர் முஸ்லிம்களாக இருக்கின்றனர். இலங்கையில் கிட்டத்தட்ட 10 வீதமான மக்கள் பிரிவினர் முஸ்லிம்களாவர். உலகில் பல நாகரிகங்கள் தோன்றுவதற்கு வித்திட்ட ஒரு சமூகம், உஸ்மானியப் பேரரசு வீழ்ச்சியடையும் வரைக்கும் உலகின் பெரும் பாகங்களை ஆட்சி செய்த ஒரு இனத்தின் தலையெழுத்து இலங்கையில் மிக மோசமாக இருக்கக் காண்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுத்தது போதாதென்று, அவர்களது மூக்கணாங்கயிறுகளின் பிடியையும் கைவிட்டுள்ள இச் சமூகத்தின் கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், மார்க்க அறிஞர்கள் தொடக்கம் கடைநிலை சாமானியன் வரை எல்லோருமே இந்நிலைமைக்கு பொறுப்பாகிப் போனார்கள்.

 
ஏதாவது ஒரு இனக்குழுமம் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்க வேண்டுமென்றால் அந்த மக்கள் சில விதமான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது பொது விதியாகும். அந்த வகையில், இலங்கை முஸ்லிம்கள் அரசியல், உரிமை, சமூகம் சார் அபிலாஷைகளை வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்வதற்கு போதுமானதை விடவும் அதிகமான அனுபவங்களை பெற்றிருக்கின்றார்கள். இனரீதியான அடக்குமுறைகள், மத அடிப்படையிலான புறக்கணிப்புக்கள், கலவரங்களிலான அழிவுகள், ஆயுதக்குழுக்களின் வன்மங்கள், அரச படைகளின் நெருக்குவாரங்கள் என எல்லாவற்றையும் எதிர்கொண்ட இச் சமூகம் இன்று வரைக்கும் தமது அபிலாஷைகளை பெற்றுக் கொள்வதற்காக உறுதியாக எழுந்து நிற்கவில்லை. சர்வதேச அளவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கும் சரி, அதற்கப்பாலான பேராhட்டங்களுக்கும் சரி பெயர்போன ஒரு மதப்பிரிவினராக சித்திரிக்கப்படும் இஸ்லாமிய சமூகம், இலங்கையில் சுரணையற்ற ஒரு போக்கை வெளிப்படுத்துவது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும்.

 
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், படித்தவர் தொடக்கம் பாமரர் வரை எல்லோருமே நாட்டில் முஸ்லிம்களுக்கு தேவையான எல்லா விடயங்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகளே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அது அவர்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பு என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் பற்றி கேட்டால் அவர்கள் சுயநலமிகள், சமூக அக்கறை அற்றவர்கள், அரசியல் ஒரு சாக்கடை என்று கூறுவதையும் காண்கின்றோம். அப்படிப் பார்த்தால், தாங்களுக்கே திருப்தியில்லாத ஒரு பிரிவினரிடமே முஸ்லிம்கள் தங்களுடைய நிகழ்கால, எதிர்கால அரசியலையும் வாழ்வையும் ஒப்படைத்திருக்கின்றார்கள் என்றும் கருதலாம்.

 
வணிக அரசியல்

 
மறுபுறத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளில் 99 வீதமானோர் இன்னும் மக்களை மையமாகக் கொண்ட அரசியலுக்குள் வரவில்லை. தம்மை வலுப்படுத்துவதற்கும் தம்முடைய பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் மாகாண, உள்ள10ராட்சி உறுப்புரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியலுக்கே முன்னுரிமை அளித்து செயற்படுகின்றனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலை இதைவிட மோசமாக இருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸின் தூரநோக்கற்ற செயற்பாடுகளும் புதுப்புது கட்சிகளின் உருவாக்கமும் முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தி இருக்கின்றது.

 

முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பணத்தையும் பதவியையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதால் போஸ்டர் ஒட்டுவதற்கு கூட காசு கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம் அரசியல் வணிக மயமாகியுள்ளது. அதேபோன்று, முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், ஆதரவாளர்களுக்கு சாப்பாடு போட்டால், ஒரு சிற்றுண்டி உபசாரத்தை நடத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்ற அளவுக்கு ஒரு புதுவித அரசியல் கலாசாரம் முஸ்லிம்களிடையே பெரு வளர்ச்சி பெற்றிருக்கின்றது.

 

 

பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மக்களின் பிரச்சினைகளைக் காட்டிலும் தம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன. மு.கா. தலைவர் மிகப் பெரிய இக்கட்டுக்குள் தற்போது சிக்கிக் கொண்டுள்ளார். அவர் பயணித்த சாணக்கியப் பாதை ஒரு முட்டுச் சந்துக்குள் அவரைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதற்கப்பால் பயணிப்பது என்றால் ஒன்றில் பல தடைகளை தாண்ட வேண்டும் அல்லது போன வழியில் திரும்பி வர வேண்டும் என்ற நிலையே இன்று காணப்படுகின்றது. முன்செய்த தவறுகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு வருடத்திற்குள் மேற்கொண்ட ஒன்றுக்கும் உதவாத நகர்வுகளைத் தொடர்ந்து, முடிவிலியான தலையிடிகளை அவர் தொடர்ச்சியாக எதிர்கொண்டுள்ளார்.

 

 

இந்தப் பிரச்சினைகளை கையாள்வதற்கும் காய்களை நகர்த்துவதற்குமே ஹக்கீமுக்கு இப்போது நேரம் சரியாக இருக்கும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறுமுகமான அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. கட்சியை வளர்க்க வேண்டிய தேவை இருப்பதால் றிசாட் பதியுதீன் ஓடியோடி வேலை செய்து கொண்டிருக்கின்றார் எனலாம். ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எந்த இடத்தில் வைத்து நோக்கப்பட்டாரோ அந்த இடத்தை றிசாட் நெருங்கி வந்திருப்பதாக ஒரு அவதானிப்பு இருக்கின்றது. ஆனால், அவரது கட்சி இன்னும் எல்லா ஊர்களிலும் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் மக்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல. ஹக்கீம் செய்வது போல பணக்காரர்களையும் கட்சிக்கு காசு கொடுப்பவர்களையும் அமைப்பாளர்களாக போடுவதன் மூலம் மக்களின் மனங்களைச் வெல்ல முடியாது என்பதை றிசாட் புரிந்துகொள்ள வேண்டும்.

 

 

இதுதவிர அக்கட்சிக்குள்ளும் தலைவர்-செயலாளர் பனிப்போர் இன்னும் உறைநிலையில் இருக்கின்றது. அக்கட்சியின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களின் இயங்குதளம் சோபை இழந்துள்ள நிலையில் இத்தனை விவகாரங்களையும் தனியொருவராக நின்று சமாளித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய நிலையில் றிசாட் இருக்கின்றார்.

 
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இன்னும் ஆட்சி மாற்ற சுழிக்குள் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. அதாவுல்லா தோற்கடிக்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் செயற்பாடுகள் பெருமளவுக்கு முடங்கிக் கிடந்தன. இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான அக்கட்சியின் உறவுகள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில் அதாவுல்லாவுக்கு ஏதாவது ஒரு பதவியை கொடுத்து அழகு பார்ப்பதற்கு கூட்டமைப்பு பெரிதும் விரும்புகின்றது. அதாவுல்லாவும் சில விடயங்களில் பட்டுத்தேறியுள்ளதாக சொல்ல முடியும். எவ்வாறிருப்பினும் தேசிய காங்கிரஸ் சிறு முஸ்லிம் கட்சியாகும். அதனது பணிகள் ஒரு பிராந்தியத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளன. இந்நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம்களினதும் அரசியல் அபிலாஷையை நிறைவேற்ற வேண்டும் என்று அக்கட்சி விரும்பினாலும் அது நடைமுறைச் சாத்தியமானதல்ல. அதற்கு தே.கா. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும்.

 

 
இந்தப் பின்னணியில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எல்லாவிதமான அபிலாஷைகளையும் நிறைவேற்றி வைக்க முடியாதிருக்கின்ற யதார்த்தத்தை காண்கின்றோம். எது எப்படி இருப்பினும், இதனைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு பிரதானமாக மு.கா.விடமும் அதற்கு அடுத்தபடியாக மக்கள் காங்கிரஸிடமும் இருக்கின்றது. இதை ஹக்கீமோ றிசாட்டோ தட்டிக் கழிக்க முடியாது. இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினை குறித்த தெளிவான புரிதல் முஸ்லிம் கட்சிகளுக்கு இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள், தேவைகள், அபிலாஷைகள் வேறு என்பதையும் அதற்கு வெளியில் வாழ்கின்றவர்களின் தேவைப்பாடுகள் வேறுபட்டவை என்பதையும் பிரித்தறிய வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் அபிலாஷைகளை தேசிய ரீதியாக அதாவது அரசாங்கத்திடம் வெளிப்படுத்துவது மட்டுமன்றி தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்ல தயங்கக் கூடாது. அவ்வாறு தயங்குபவர்கள் ‘தேசிய தலைமை’ என்ற தமது அடைமொழியை நீக்கிக் கொள்ள வேண்டும்.

 
வரலாற்று சந்தர்ப்பம்
நாம் முன்னமே பல கட்டுரைகளில் குறிப்பிட்டபடி, இலங்கையின் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான ஒரு காலகட்டம் என்பதை யாவரும் அறிவோம். யுத்தம் முடிவடைந்து நல்லாட்சி அரசாங்கம் நிறுவப் பெற்றிருக்கின்றது. மிக முக்கியமாக இலங்கைப் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டிருப்பதுடன், புதிய அரசியலமைப்பு வரைபை மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இலங்கையின் ஒட்டுமொத்த ஆளுகைக் கட்டமைப்பும் இனிமேல் இயங்கப் போகின்றது. இதனை தமிழர்கள் நன்றாக விளங்கிச் செயற்பட்டு வருகின்றார்கள். இனவிடுதலைக்காக போராடிய சமூகம் என்ற அடிப்படையில் எப்படியாவது தமது அபிலாஷைகளை இந்த அரசியலமைப்பில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தமிழர் தரப்பு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சர்வதேச நாடுகளும் இதற்கான ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளன. அநேகமாக, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது கூட இரா. சம்பந்தன் போன்றோருக்கு தெரிந்திருக்கும். ஆனால், முஸ்லிம்களுக்கு பெரிதாக ஒரு பிரச்சினையும் இல்லை என்பது போலவே முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

 
முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இன்னும் அற்பத்தனமான விடயங்களிலேயே கவனத்தை குவித்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான ஒரு காலப் பகுதியாக இது இருக்கின்ற போதும் அதன் தலைவர் றவூப் ஹக்கீம் மெச்சத்தக்க வேலைத்திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தல், அது பற்றி மக்களின் கருத்தறிதல், மக்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக வரையறை செய்தல், அதை ஆவணப்படுத்தி சர்வதேசத்தின் கண்களுக்கு தரியும்படி அரசாங்கத்திடம் முன்வைத்தல் என்று எத்தனையோ பணிகள் கிடப்பில் கிடக்கின்றன. ஆனால், இன்னும் உட்கட்சி முரண்பாட்டுக்கே தீர்வு காண முடியாத நிலைதான் கட்சிக்குள் இருக்கின்றது. இதுபற்றி கேள்வி எழுப்புகின்றவர்களுக்கு, ‘நாங்கள் செய்ய வேண்டியதை சாணக்கியமாக செய்வோம்’ என்ற தோரணையிலேயே மு.கா. பதிலளிக்கின்றது.

 
மூமுமந்திரமாக, காதோடு காதாக நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எல்லாம் என்ன ஆனது என்பது மக்களுக்கு தெரியும். உங்களது சாணக்கியங்களையும் அறியாத அளவுக்கு மக்கள் முட்டாள்களல்ல. எனவே, ஒவ்வொரு கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கும் அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளித்து, அவர்களின் அபிலாஷைகளை தொகுத்து ஆவணமாக்க வேண்டும். பின்பு, என்ன தீர்வை அரசாங்கத்திடம் கோருகின்றீர்கள் என்பதன் சுருக்கம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இதனைப் பெற்றுக் கொள்வதற்கு உயர்ந்தபட்ச பலத்தையும், அதிகபட்ச வெளிப்புற அழுத்தங்களையும் பிரயோகிக்க மு.கா. நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தேசிய கட்சியாக வளர வேண்டுமென்ற அவா இருக்குமாயின் மக்கள் காங்கிரஸும் இதைச் செய்தாக வேண்டும். அதைவிடுத்து, ‘அவ்வாறு நடக்காது, வடக்கு கிழக்கை இணைக்க மாட்டார்கள், தீர்வுப் பொதியை வழங்குவதற்கு சிங்களவர்கள் விடமாட்டார்கள்’ என்ற வீம்புக் கதைகளை எந்தத் தரப்பும் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

 
சர்வதேச கவனம்
இதேவேளை, எவ்வாறு உள்நாட்டு அரசியலில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு முஸ்லிம்; அரசியல் தவறியிருக்கின்றதோ அதுபோலவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கை வந்த போது, றவூப் ஹக்கீம் ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் அவரைச் சந்தித்தாரே தவிர முஸ்லிம்களின் பிரதிநிதியாக அச்சந்திப்பு இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்பட்டிராத விடயம் என்ற அடிப்படையிலோ என்னவோ, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உள்ளடங்கலாக முஸ்லிம்களின் முக்கிய விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா. ஆணையாளரும் ஆழமாக கவனம் செலுத்தவில்லை.

 
இந்நிலையில், ஜெனிவாவில் நேற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள், மனித உரிமை விடயங்கள், விசாரணைகள் பற்றியெல்லாம் பல நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அமெரிக்கா, கனடா, டென்மார்க், நோர்வே, ஜப்பான் என பல நாடுகள் இலங்கை விவகாரங்கள் பற்றி தமது நிலைப்பாடுகளை வலியுறுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் தமிழ் மக்களின் சார்பிலும் பல பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தி இருக்கின்றனர். ஆனால், இலங்கையில் வாழ்கின்ற 20 இலட்சம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு யாரும் அங்கு இல்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காகக் கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கு சென்றதாகவும் தெரியவில்லை.

 
இங்கு ஒரு விடயத்தை முஸ்லிம்களும், ஏனைய மக்களும் அரசியல்வாதிகளும் விளங்கிக் கொள்ள வேண்டும். உள்நாட்டில் தம்முடைய அரசியல் அபிலாஷையை பெற்றுக் கொள்வதற்கும் சர்வதேசத்திடம் தம்முடைய உரிமைகளை உறுதிப்படுத்த கோருவதற்குமான எல்லா விதமான தார்மீக உரிமைகளும், முகாந்திரங்களும் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன. தமிழர்கள் கேட்கின்றார்கள் என்பதற்காக நாமும் கேட்க வேண்டும் என்பதில்லை. மாறாக, இதுதான் தக்க தருணம் என்பதற்காக அதைச் செய்ய வேண்டியுள்ளது. அதைவிடுத்து, முஸ்லிம் நாடுகளும் சர்வதேசமும் தம்மை பாதுகாப்பார்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தால், இலங்கை முஸ்லிம்கள் மிகவும் கைசேதப்பட்டுப் போவார்கள்.

 
மேற்கத்தேயம் தமிழர்களின் விவகாரத்தையும் முஸ்லிம்களின் விடயத்தையும் வேறு வேறு கண்கொண்டே நோக்குகின்றது. இப்படியிருக்க, முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படும்போது உலக முஸ்லிம் நாடுகள் அதற்கு எதிராக போராடும் என்பது உண்மையென்றால், ஈராக், ஆப்கான், பலஸ்தீன், சிரியா என அராபிய தேசமெங்கும் அன்றாடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேரழிவு யுத்தங்களுக்கு எதிராக போராடி இருக்க வேண்டும். அவ்வாறே, இலங்கை முஸ்லிம்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட பயங்கரவாத, இனவாத அடக்குமுறைகளின் போது உரத்த குரலில் பேசியிருக்க வேண்டும். சாத்தியமற்றவைகளை நம்பிக்கொண்டிருப்பது நம்மை இன்னும் சோம்பேறிகளாகவே ஆக்கிவிடும். எனவே நமக்கு ஏதாவது தேவை என்றால் அதை நாமே பெற்றுக் கொள்ள வேண்டும்.

 
பாதிக்கப்பட்ட சமூகம்

 
இலங்கையில் தமிழர்களுக்கு முன்னமே முஸ்லிம்கள் இனத்துவ நெருக்குவாரங்களை சந்தித்து விட்டனர். 1915ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் 1970களில் இடம்பெற்ற சிறுசிறு இனமுறுகல்களிலும் 1983 ஜூலைக் கலவரத்திலும் இழப்புக்களைச் சந்தித்தனர். இவற்றை எல்லாம் விட முஸ்லிம்கள் அதிகமாக இழந்தது யுத்தகாலத்திலேயே.
எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலும் ஏனைய ஆயுதக் குழுக்களிலும் இணைந்து செயற்பட்டனர். புலிகள் இயக்கத்தில் மட்டும் முக்கிய பதவிகளில் 40 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் சாமான்ய முஸ்லிம் சிவிலியன்களுக்கு எதிராக புலிகளும் ஏனைய ஆயுத இயக்கங்களும் மேற்கொண்ட அநியாயங்கள் கவலை தோய்ந்த நினைவுகளாகும்.

 

முஸ்லிம்கள் வடக்கில் இருந்து உடுத்த உடையோடு வெளியேற்றப்பட்டமை, முஸ்லிம் பொலிஸார் 600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்;டு கொல்லப்பட்டமை, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை, ஏறாவூர் பள்ளியில் வைத்து 112 பேர் பலியெடுக்கப்பட்டமை, குருக்கள்மடத்தில் யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமை, அழிஞ்சிப்பொத்தானை படுகொலை, அம்பாறையின் வயல்நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது.

 
யுத்தம் முடிவடைந்த பின்னர், இனவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கியது. 2012 தொடக்கம் இன்று வரையும் எத்தனையோ நெருக்குவாரங்களை முஸ்லிம்கள் சந்தித்து விட்டார்கள். நாளையும் இது தொடரலாம். முஸ்லிம்கள் மிகவும் நம்பிக்கையுடன் வெற்றிபெறச் செய்த நல்லாட்சி அரசாங்கமோ ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்ற நிலையிலேயே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, இனவெறுப்பு பிரசாரத்திற்கு எதிரான உத்தேச சட்டமூலத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இப்படியான, ஒரு உள்நாட்டு, சர்வதேச பின்புலத்தில் முஸ்லிம்களும் அவர்களது அரசியல்வாதிகளும் விறுவிறுப்பாக செயற்பட வேண்டியிருக்கின்றது.

 

 
அப்படியாயின், தேசியத் தலைமை என்ற போதைக்குள் இருந்து முஸ்லிம் கட்சித் தலைவர்களும், எல்லாம் தெரிந்த அரசியல் வித்தகர்கள் என்ற பிரம்மைக்குள் இருந்து மற்றைய அரசியல்வாதிகளும் வெளியில் வரவேண்டும். அரசியல்வாதிகளை கண்கண்ட தெய்வங்களாக கருதி, எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சும்மா இருக்கின்ற நிலையில் இருந்து முஸ்லிம்கள் மீள வேண்டும். மு.கா. தலைவர், மக்கள் காங்கிரஸ் தலைவர் உள்ளடங்கலாக எல்லா அரசியல்வாதிகளும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களுக்கும் எது தேவை என்ற பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

 

முஸ்லிம்களுக்கு ஆயிரம் அபிலாஷைகள் இருக்கின்றன. அவற்றுள் எவை எவையெல்லாம் உத்தேச அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும், எவ்வாறான விடயங்களை சர்வதேசத்திடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து, காலங்கடத்தாது முன்வைப்பது அவசரமானது. ஒன்றையும் கேட்காமல் எதுவும் கிடைக்கவில்லை என்று பிற்காலத்தில் சொல்ல முடியாது.
அழுத பிள்ளையே பால் குடிக்கும் என்பார்கள். காலம் கடந்து அழும் பிள்ளைகளுக்கு புட்டிப்பால் போத்தல்களும், சூதர்களுமே வாயில் சொருகப்படும்!

 

ஏ.எல்.நிப்றாஸ்

(வீரகேசரி 02.07.2016)