இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் கும்ப்ளே சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் இயக்குனராக 18 மாதங்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் கும்ப்ளே நியமிக்கப்பட்டதால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். இதை அவர் நேரிடையாகவே தெரிவித்தார்.
அப்போது ரவிசாஸ்திரி முன்னாள் கேப்டனும், பயிற்சியாளரை தேர்வு செய்யும் ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருந்த கங்குலி பற்றி புகார் கூறினார். தன்னிடம் நேர்கானல் நடத்தப்பட்ட போது கங்குலி இல்லை. இதன்மூலம் அவர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு கங்குலி பதிலடி கொடுத்தார். முட்டாள் உலகில் ரவிசாஸ்திரி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கடுமையாக சாடினார். பயிற்சியாளர் பதவி நேர்காணலுக்கு நேரில் வந்து இருக்க வேண்டும் என்றார்.
இதன்மூலம் ரவிசாஸ்திரியும், கங்குலியும் நேரடியாக மோதிக்கொண்டதாக வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் ரவி சாஸ்திரியின் குற்றச்சாட்டு தொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டது. ஒருமனதானது என்று தெரிவித்துள்ளது.
இது கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அஜய் ஷிர்கே கூறியதாவது:-
ரவிசாஸ்திரி ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். கங்குலி ஒருவர் மட்டுமே பயிற்சியாளரை முடிவு செய்யவில்லை.
அவர் மட்டும் உறுப்பினர் இல்லை. எங்களது ஆலோசனை குழுவில் 4 உறுப்பினர்கள் (தெண்டுல்கர், லட்சுமண், கங்குலி, ஜக்தலே) இருந்தனர். அவர்கள் அனைவரும் கும்ப்ளேக்கு தான் ஆதரவு தெரிவித்தனர். கும்ப்ளே ஒருமனதாக பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கங்குலி எங்களிடம் அனுமதி பெற்று தான் நேர்காணலில் இருந்து சென்றார். இதனால் நேர்காணலில் அவர் இல்லை என்பதை பெரிதுபடுத்த தேவையில்லை. பயிற்சியாளர் தேர்வு முறையில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. கும்ப்ளேவுக்கு யாரும் சாதகமாக செயல்படவில்லை. பயிற்சியாளருக்கான அனைத்து நடைமுறைகள் படி தான் அவர் தேர்வு ஆனார்.
இவ்வாறு அஜய் ஷிர்கே கூறியுள்ளார்.