பொறுமையை இழந்த மூஸா (அலை)

மூஸா (அலை) பொறுமை காப்பதாக வாக்களித்து, அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை) அவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறார்கள்.

இருவரும் நடந்து நடந்து கடலோரத்திற்கு வந்து அங்கிருந்த ஒரு மரக்கலத்தில் ஏறினார்கள். கித்ரு (அலை) அவர்களை அந்த மரக்கலத்தில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அவர்களை மறுப்புச் சொல்லாமல் ஏற்றிக் கொண்டனர்.

அப்போது ஒரு பறவை தம் அலகில் கொஞ்சம் தண்ணீருடன் மரக்கலத்தில் வந்து அமர்ந்ததைக் கண்ட கித்ரு (அலை), அந்தப் பறவையைச் சுட்டிக்காட்டி “நமது அறிவை அல்லாஹ்வின் அறிவோடும் ஞானத்தோடும் ஒப்பிடும்போது, நமது அறிவு இந்தப் பறவை கடலிலிருந்து ஒரு சொட்டு நீரைக் குடிப்பதுபோல்தான்” என்று மூஸா (அலை) அவர்களிடம் விளக்கினார்கள்.

மரக்கலம் நெடுபயணத்தில் சென்று கடலுக்கு நடுவில் வந்ததும், திடீரென்று கித்ரு (அலை) ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தில் ஓர் ஓட்டையைப் போட்டார்கள்.

அதைக் கண்டு பதறிய மூஸா (அலை) “என்ன செய்கிறீர்கள்?” என்று பொறுமை இழந்து கேட்டார்கள்.

அதற்கு கித்ரு (அலை) எந்த பதிலும் தராததால் மூஸா (அலை) தொடர்ந்து “இந்த மரக்கலத்தை மூழ்கடிக்கப்போகிறீர்களா? இதில் உள்ளவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓட்டையைப் போட்டீர்கள்? இது மிகவும் ஆபத்தான காரியமாயிற்றே!? என்று கூறினார்கள்.

உடனே அதற்கு கித்ரு (அலை), “நான் நீங்கள் பொறுமை காப்பீர்கள். என்ன நடந்தாலும் நானாக அது பற்றி உங்களுக்கு விளக்கம் தரும் வரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுடைய வாக்குறுதியை மறந்துவிட்டீர்களா?” என்று மூஸா (அலை) அவர்களுக்கு நினைவுப்படுத்தினார்கள்.

மூஸா (அலை) தமது வாக்கை நினைவுகூர்ந்தவர்களாக அமைதியாகவும் சங்கடமாகவும் இருந்தார்கள். மறுகணமே மூஸா (அலை) “இனி உங்களை நான் எந்த கேள்வியும் கேட்கவே மாட்டேன்” என்று உறுதியளித்தார்கள்.

மரக்கலம் கரைக்கு வந்தது. அதிலிருந்து அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். மீண்டும் நடக்கலானார்கள்.

திருக்குர்ஆன் 18:71-74

– ஜெஸிலா பானு.