நிதி நெருக்கடியால் சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்து செய்த தெற்கு சூடான்

இந்த ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்கள் எதையும் நடத்த போவதில்லை என சமீபத்தில் விடுதலை பெற்ற நாடான தெற்கு சூடான் அறிவித்துள்ளது.

போதுமான நிதி இல்லை என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றதன் ஐந்தாம் ஆண்டு, அமைதியாக கடைப்பிடிக்கப்படும் என அந்நாட்டின் தகவல் அமைச்சர் மைக்கில் மக்யூல் லியூத் கூறியுள்ளார்.

மேலும், புதிதாக பதிவியேற்றுள்ள தங்கள் நாட்டின் அமைச்சர்களுக்கு சொகுசு கார்கள் வாங்கப்பட மாட்டாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சூடானிடம் சுதந்திரம் பெற்று பிரிந்து வந்ததில் இருந்து, தெற்கு சூடான், உள்நாட்டு போர் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடிகளால் சிக்கித் தவித்து வருகிறது.

தெற்கு சூடானின் நாணய மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெரும்பாலும் காலம் தாழ்த்தி வழங்கப்படும் சம்பளங்களால் தங்களால் வாழ முடியவில்லை என அரசாங்க ஊழியர்கள் கூறியுள்ளனர்.