கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் ஏற்பாட்டில் புல் மோட்டையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலிருந்து சிறுவர்களை விரட்டும் வீடியோவே தற்போது மிகப் பெரும் பேசு பொருளாகவுள்ளது.சிலர் சரியெனவும் சிலர் பிழையெனவும் வாதிட்டு வருகின்றனர்.இப்படி இருக்கையில் மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அவ் அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத,முரண்பாடுகளைக் கொண்ட சில நியாயங்களை அவர் கூறி இருப்பதாக நான் உணர்கின்றேன்.
அவர் தனது அறிக்கையில் சிறுவர்கள் விளையாட்டுக்காக பாடசாலைக்கு வெளியில் உள்ள தங்களது நண்பர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுத்தனர் எனக் கூறியுள்ளார்.இவ்விடயம் குறித்த வீடியோக் காட்சியுடன் முற்றாக முரண்படுகிறது.குறித்த விரசுப்படும் சிறார்கள் அங்கு உட்கார்ந்திருந்த நிலையில் விரசப்படுவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.எவ்வாறு உட்கார்ந்த நிலையில் வெளியில் உள்ள தங்களது நண்பர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்? இதிலிருந்து சிறுவர்கள் என்றால் உணவுப் பொருட்களின் மீது கண் குற்றி நிற்பார்கள் என்ற விடயத்தை மாகாண சபை உறுப்பினர் அன்வர் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள முயல்வது துல்லியமாகிறது.
சில நிகழ்வுகளில் சிறுவர்களை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் நான் என்பதை மறுக்கவில்லை.எவ்வளவுதான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.ஆனால் இங்கும் அப்படியே இடம்பெற்றிருக்கும் என எடை போட முடியாது.அந் நிகழ்வில் அதிதிகள் உட்காரும் இடத்தில் அச் சிறுவர்கள் உட்கார்ந்திருந்ததாகவும்,இப்தாருடைய நேரம் நெருங்கிய போது சிறுவர்களை எழும்பக் கூறியும் எழும்பாததால் இவ்வாறனதொரு சம்பவத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் சிலர் நியாயம் கற்பிக்கின்றனர்.முதலாவது அவர்கள் சிறுவர்களை சிறந்த வார்த்தைகளோடு எழுப்ப முயற்சித்திருக்க வேண்டும்.அங்கு சிறுவர்கள் மாத்திரம் உட்கார்ந்திருந்ததாக கூறுவது பிழையானது.விரசுப்படும் சிறார்களோடு சேர்ந்து ஜுப்பாவோடு ஒரு 25-30 வயது மதிக்கத்தக்க ஒருவரும் அவ் இடத்தில் உட்கார்ந்திருந்தார் (குறித்த வீடியோவில் இந் நபர் அவ்விடத்திலிருந்து எழும்பி பக்கத்து வரிசையில் அமர்வதை அவதானிக்கலாம்).அவரைப் பார்க்கின்ற போது ஒரு மௌலவி போன்று காட்சி தருகிறார்.மேலும்,ஒரு வெள்ளைச் சாரன் உடுத்த இளம் வயது மதிக்கத் தக்க ஒருவரும் எழும்புகிறார்.சிறுவர்களை குறித்த அதிதிகளின் இடத்திலிருந்து எழும்புமாறு கூறி இருந்தால் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு மௌலவியின் தோற்றத்தில் காட்சி தந்த அந்த நபர் நிச்சயம் எழுந்திருப்பார்.இதிலிருந்து அந்தச் சிறுவர்களை எழும்பிச் செல்லுமாறு யாரும் அறிவுருத்திருக்கவில்லை எனும் விடயம் தெளிவாகிறது.
ஒரு அதிதியின் இடத்தில் சிறுவர்கள் இறுதி நேரம் வரை உட்கார்ந்திருந்தார்கள் என்றால் அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.குறிப்பாக அங்கு அமைச்சர்,முதலமைச்சர்,மாகாண சபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.அவர்களின் உணவுப் பொதிக்குள் சிறுவர்கள் கை வைக்குமளவு நிலைமை இருப்பது அவர்களின் பாதுகாப்பிற்கு சிறந்ததல்ல.இந்த நிகழ்வு திறந்த நிகழ்வு என்பதால் சிறுவர்களின் வருகையை எதிர்பார்த்து குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.இப்தாரிற்கு முன்பு ஏழைகளுக்கான குடி நீர் வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டதால் அங்கு ஏழைச் சிறார்களின் பிரசன்னம் தவிர்க்க முடியாது.இந்த ஒரு நிகழ்வையே ஏற்பாடு செய்ய முடியாதவர்கள் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழி காட்டுவார்களா?
மேலும்,அவர் தனது அறிக்கையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கே அவர்கள் எழுப்பி அனுப்பப்பட்டனர் எனக் கூறியுள்ளார்.நான் இவ் அறிக்கையை பார்க்கும் வரை இது மாகாண சபை உறுப்பினர் அன்வருக்கு தெரியாமல் இடம்பெற்ற ஒரு நிகழ்வு என்றே நினைத்திருந்தேன்.மேலுள்ள கூற்று இவ் விடயம் மாகாண சபை உறுப்பினரின் அனுமதியோடு தான் அரங்கேறியுள்ளது என்ற அர்த்தத்தை வழங்குகிறது.மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஏழை மக்களை நன்றாகவே கவனிக்கிறார்.மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களே! நீங்கள் இவ்வாறு தான் மக்களை மக்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புவீர்களா? உங்கள் விருந்துபசார முறை இவ்வாறு தானா?
மாகாண சபை உறுப்பினர் தனது அறிக்கையில் குறித்த சிறார்கள் அங்கு இப்தார் செய்ததற்கு ஆதாரமாக புகைப்படத்தை இணைத்துள்ளதாக கூறியுள்ள போதும் அவ்வாறான புகைப்படங்கள் எதனையும் காணக்கிடைக்கவில்லை.இது விழித்துக் கொண்டிருக்கும் போதே விழியைத் தோன்றிச் சென்ற கதையாகவுள்ளது.
“பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள்,வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான் (திர்மிதி)”
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.