தேர்தலில் டிரம்புடன் மோதும் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ஹிலாரி !

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் நடந்து வந்தன. 

rs_1024x759-150709052426-1024_Fotor

ஐயோவா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வாஷிங்டன் மாநிலத்தில் இன்று முடிந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் வாக்களித்தனர். மொத்தமுள்ள 4763 வாக்குகளில் 2800 வாக்குகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளராக தகுதிபெற 2382 வாக்குகள் தேவை என்ற நிலையில் இந்த தேர்தலில் ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸ் 1832 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் அந்த தகுதியை அவர் இழந்து விட்டார்.

அடுத்த (ஜூலை) மாதம் ஜனநாயக கட்சியின் அதிபர் பதவிக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கப்படவுள்ளார்.

முன்னதாக, குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டார். இதனையடுத்து, அமெரிக்காவின் அடுத்த அதிபர் பதவியை கைப்பற்ற வரும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் – டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய கருத்து கணிப்புகளின்படி, ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது. அவ்வகையில், அவர் வெற்றிபெற்றால் 239 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாறில் அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்புக்குரியவராக ஹிலாரி கிளிண்டன் உயர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.