பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறேன்: அலைஸ்டர் குக் சொல்கிறார்

இங்கிலாந்து அணி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானிடம் 1-2 என வீழ்ந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அடுத்த மாதம் 14-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் கூறுகையில் ‘‘நாங்கள் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யவில்லை என்றாலும், தொடரை 2-0 என வென்றுள்ளோம். ஒரு போட்டியில் இன்னிங்ஸ், மற்றொரு போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். பாகிஸ்தானை தவிர ஏறக்குறைய முக்கியமான அணிக்கெதிராக நாங்கள் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வந்து விளையாடும்போது அவர்களையும் வீழ்த்தி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சாளரை பெற்றுள்ளோம். அத்துடன் ஸ்பின்னர்களையும் பெற்றுள்ளோம். அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ரன்கள் குவித்தோம். ஆகவே, பாகிஸ்தான் தொடர் மிகச்சிறந்த தொடராக செல்லும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.