திமுக.,வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்; அதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என திமுக எம்.பி., கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கனிமொழி இதனை தெரிவித்துள்ளார்.
கனிமொழி அளித்த பேட்டியின் விபரம் :
* திமுக.,வின் அடுத்த தலைவர் யார்? கட்சிக்குள் அது பற்றி பலவாறு கூறப்படுகிறதே….
கட்சிக்குள் என்ன பேசுகிறார்கள் என எனக்கு தெரியாது. ஆனால், ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அதற்கான தகுதியும், திறமையும் வாய்ந்தவர் அவர்.
* இருப்பினும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அழகிரி, ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரே?
திமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் ஸ்டாலின் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
* பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்டாலின் தான் கட்சியின் அடுத்த தலைவர் என்று திமுக தலைவர் அறிவிப்பார் என எதிர்பார்த்தும் அவர் அறிவிக்கவில்லையே?
பத்திரிக்கையாளர்கள் அறிந்த அளவிற்கு கூட அது போன்ற தருணங்கள் ஏற்பட்டது எனக்கு தெரியாது. ஸ்டாலினும் தனக்கு எந்த பதவியும் வேண்டும் என வலியுறுத்தியதில்லை. கட்சி பணிகளை தொடர்ந்து, மகிழ்வுடன் ஆற்றி வருகிறார். எது எப்போது அறிவிக்கப்பட வேண்டுமோ, அது உரிய சமயம் வரும் போது அறிவிக்கப்படும். அதில் எவ்வித பிரச்னையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
* திமுக.,வின் டில்லி பிரதிநிதியாக உங்களை நினைக்கிறீர்களா?
ஆமாம். நான் திமுக எம்.பி.,யாக இருந்து வருகிறேன். திமுக.,வின் பார்லி.,தலைவராகவும் இருந்து வருகிறேன். பார்லி.,யில் தமிழக பிரதிநிதியாக இருந்து மத்திய அரசிடம் இருந்து உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே என் பணி.
* உங்களின் எதிர்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அரசியல் மட்டும் தான் எனது எதிர்காலம் என நினைக்கவில்லை. அரசியல் நோக்கம் எனக் கூறி எனது நிலையை சுருக்கிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. கட்சிக்கு என்னால் முடிந்த அளவு பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். ஊழல் விவகாரங்களில் திமுக.,வும், அதிமுக.,வும் ஒன்றை ஒன்று மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்கின்றன.
* ஜெ., சொத்து குவிப்பு வழக்கு பற்றி….
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அப்படி நான் கூறினால், அது சட்டவிரோதமானது.
* உங்கள் மீதான கலைஞர் டிவி முறைகேடு வழக்கு கோர்ட்டில் உள்ளது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நான் எப்போதும் கூறிவது தான். நான் கலைஞர் டிவி இயக்குநர் இல்லை. கலைஞர் டிவி.,யில் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும், சேனலின் செயல்பாட்டிலும் எனது தலையீடு எப்போதும் இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.