மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளைத் தெரிவு செய்து அங்கு கொங்கிரீட் பங்கர்களை அமைத்து அவற்றுக்குள் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொஸ்கம சாலாவ முகாமில் ஏற்பட்ட விபத்துத் தொடர்பில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்துத் தொடர்பில் ஆராய்வதற்கு முப்படையினரைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கும், இக்குழுவுக்கு உதவி வழங்க பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் பாதுகாப்புச் சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இரகசியப் பொலிஸாரும், இராணுவத்தினரும் வெவ்வேறு விசாரணைகளை நடத்துகின்றனர். அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களமும் விசாரணை நடத்துகிறது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் இவ்விபத்துத் தொடர்பான சம்பவம் முழுமையாக பகிரங்கப்படுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.முகாமை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகள், சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இலங்கையில் இதற்கு முன்னரும் இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2010ம் ஆண்டு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு அவிசாளை வீதி இன்று திறப்புகொஸ்கம சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள கொழும்பு அவிசாவளை வீதியை இன்று காலை முதல் மக்கள் பாவனைக்குத் திறக்க முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.
வெடிப்புச் சம்பவம் மற்றும் தீவிபத்தைத் தொடர்ந்து முகாமைச் சுற்றியிருந்த 1800 பேர் வீடுகளிலிருந்து வெளியேறி 15 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 9 கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தமது வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
முகாமைச் சுற்றியுள்ள 500 மீற்றர் தூரத்தில் உள்ள மக்கள் நாளை (இன்று) முதல் தமது வீடுகளைச் சென்று பார்வையிட முடியும்.சாலாவ முகாமில் இன்னும் சில நாட்களுக்கு சிறு சிறு வெடிப்புக்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம்.
முகாமுக்கு சுற்றயல் பிரதேசத்தில் உள்ள வீடுகள் சொத்துக்கள் மற்றும் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கும், இராணுவத்தினரின் உதவியுடன் அவற்றை மீளக் கட்டிக்கொடுப்பதற்கும் அரசாங்கம் முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
அப்பகுதியில் உள்ள மக்களின் சாதாரன வாழ்க்கை மீள கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வெடித்த பொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் சேகரிக்கப்படுவதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேலதிகமாக பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் இனவாதத்தைப் பரப்பும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.அனர்த்தமொன்று ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக கேள்வியெழுப்பிய தினேஷ் குணவரத்தன எம்பி கூறுகையில்; கொஸ்கம சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி அதனை பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பகிரங்கப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை இராணுவத் தளபதி எதுவித கருத்தையும் இன்னமும் வெளியிடவில்லை.இவ்விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்கும் அப்பால் இது நாட்டின் இராணுவ வலையமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
300ற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்திருப்பதுடன், 1100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சொத்துக்கள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவதுடன், அவற்றை மீளக்கட்டிக் கொடுப்பதற்கும் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புக்கள், குடிநீர் இணைப்புக்கள், தொலைபேசி இணைப்புக்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் மீள வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தினேஷ குணவர்த்தன எம்பி மேலும் தெரிவித்தார்.