தமிழ்நாடு, கேரளாவில் ராகுல் பிரசாரம் மீண்டும் ரத்து

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு வந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடனும், கோவையில் நடந்த கூட்டத்தில் கனிமொழியுடனும், சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் அன்பழகனும் ராகுல் ஒரே மேடையில் பிரசாரம் செய்தார்.

இந்த வாரம் மீண்டும் 2-வது தடவை ராகுல் தமிழகம் வர திட்டமிட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் காரைக்கால், நாகர்கோவிலில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ராகுல்காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரசாரம் ரத்து ஆனதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக டுவிட்டர் மூலம் ராகுல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராகுல் இன்று கேரளாவிலும் நாளை தமிழ்நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று அவர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டம்பியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ராகுலின் கேரளா பயணம் இன்று கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. ராகுல் தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவதிப்படுவதால் அவர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல ராகுலின் நாளைய தமிழக சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாளை (13-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார் என்று கூறப்பட்டது.

அவர் ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், விளவங்கோடு, கிள்ளியூர், முளகு மூடு, மார்த்தாண்டம், ஊரம்பு பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் திடீரென இளங்கோவனின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.